நம்முடைய கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் ஓர் அர்த்தம் உண்டு. நம் பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்து அவை மூட நம்பிக்கைகள் என சொல்லிவிடுகின்றோம். அது போலவே மார்கழியில் கோலம் போடுதலில் உள்ள முக்கியத்துவத்திற்கு பின் மறைந்துள்ள அறிவியல் என்பது மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாகவும் இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறதாகவும், இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றதாகவும் அறிவியல் கூறுகிறது.
மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது
இந்த பிரபஞ்சத்தில் படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவத்தை அடிப்படையாக கொண்டவை அனைத்திற்கும் அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம் ஆகும். இந்தப் பிரபஞ்சமானது சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து இருக்கிறது. நம் உடல் கூட பல விதமான உறுப்புகளின் ஒன்றிணைப்பால் பிரமாண்டமாக படைக்கப்பட்டவை தான். இந்த உடலை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும்,பூமியின் சக்தி கால/ சூழ்நிலை ஏற்ப எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணர முடியும்.
கோலம் என்ற சொல்லுக்கு முதலில் தங்கம் என்ற பொருள் மட்டுமே அர்த்தமாக இருந்திருக்கிறது. பின்னர் மகிழ்ச்சி, அழகு ஆகிய பொருள்களிலும் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களிடையே கோலம் என்பது கலையுடன் தொடர்புடையது. மற்ற மாநிலத்தவர்களிடத்து முக்கிய வேறுபாடாக கோலங்களில் நிறம் இருப்பதால் அதை நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம் என்பர். இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பார்கள். இது ரங், ஆவலி என்னும் இரு சமஸ்கிருத சொற்களின் இணைப்பால் உருவானது. ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருகிறது.
தமிழ்நாட்டுக் கோலத்தையும் ரங்கோலி என்னும் வழக்கமும் உண்டு. இது சரியானது அல்ல. தமிழ்நாட்டில் வெள்ளை(அரிசி மாவு) & செம்மண் இட்டு கோலமிடுவதே மரபாக இருந்தது. இப்போது பல்வேறு பகுதியினரும் தமிழ்நாட்டில் வசிப்பதால் பூக்கோலம், வண்ணக்கோலம் எல்லாமும் போடப்படுகிறது. இந்த நிறக்கோலத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். மதானே, சவுக்பூர்ணா, அல்பனா, அரிப்பனா ,சவுக் பூஜன், எய்பபன் என்றும் இதற்குப் பெயர்கள் உண்டு.
இக்காலத்தில் வண்ணக்கோலங்கள் அழகுக்காகவும், மரபுகளைப் பேணுவதற்காகவுமே வரையப்பட்டு வந்தாலும், அந்த காலத்தில் இதன் பின்னணியில் பல்வேறு நம்பிக்கைகளும், சமய, பண்பாட்டு முக்கியத்துவங்களும் இருந்தன. பொதுவாக வாசலில் வரையப்படும் கோலங்கள் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கான அடையாளமாகவும், வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடத்தை கொண்டுவரும் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. பண்டிகைகள், சமய நிகழ்வுகள், திருமணம் போன்ற விழாக்கள்,பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவற்றில் வண்ணக்கோலங்கள்,பூக்கோலங்கள் வரையப்படுகின்றன.தமிழ்நாட்டில் பொதுவாக மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் போடும் மரபு இன்றும் இருக்கிறது. விடியற்காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது நம் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதுவும் ஒருவகை யோகாசனம் இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இப்படி செய்யும் போது உடல் தானாவே புத்துணர்வை தூண்டி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. M னதை ஒருமுகப்படுத்துதல் மற்றும் உடலுக்கான பயற்சியும் ஒருங்கே அமைக்கப்படும் கோலமிடுதலால்.
கோலம் என்பதற்கு "நிலை" எனும் அர்த்தம் உண்டு. உதாரணமா தவக்கோலம், போர்க்கோலம் என அந்த நிலையை கோலத்தோடு தொடர்புபடுத்துவர்.
பொதுவாக தமிழ்நாட்டில் கோலம் போட தரையை சாணம் தெளித்து சமன் படுத்தி அதன் மேல கோலம் போடுவோம். அது ஒரு மாதிரி பச்சை நிறம் கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதுவே கர்நாடகாவில் உள்ளடங்கிய கிராமப்பகுதிகளில், அவர்களது பாரம்பரிய முறைபடி காவி பூசி தரையை சமன் செய்து அதன் மேல அழகாக கோலமிடுகின்றனர். கேரளாவிலோ அவர்களது பாரம்பரிய முறைப்படி பூக்கள்,இலைகளை கொண்டு கோலமிடுகின்றனர். அதற்கு அத்தப்பூ கோலம் என்று பெயர்.
கோலத்தின் வடிவம் என்பது பொதுவாகவே ஸ்வஸ்திக் வடிவத்தை ஆதாரமாக கொண்டதாய் இருக்கும். கோலத்தின் இழைகள் எட்டு திசைகளை இணைக்கும் கோடுகளாய் அமையப்பட்டிருக்கும். ஒவ்வொரு திசைகளுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியும், பண்புகளும் இருக்கும். அதன் அடிப்படையிலேயே கோடுகள் இழுக்கப்படும்.
கோலங்கள் பொதுவாக வலது பக்கமிருந்து ஆரம்பித்து, கடிகார சுழற்சி (clockwise) முறைப்படி இழைகள் இழுக்கப்பட்டு, அனைத்தும் கோலங்களும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவடையும்படி அமைந்திருக்கும்
கோலமாவு என்று தனியாக பச்சரிசியை ஊற வைத்து நிழலில் உலர்த்தி அரைத்து உபயோகிப்பது தான் traditional method. இப்போல்லாம் சுண்ணாம்போ ஏதோ ஒரு கல்லைப் பொடித்துதான் செய்யப்படுகிறது. ஆனால் அரிசி மாவில் போடும் கோலம் இழை சரியாக வராமல் போனாலும் பார்க்க வெளுப்பாக இருக்கும். மண் தரை கொண்ட வாசல் என்றால் கண்டிப்பா மாலைக்குள் எறும்பு, பறவைகள் அந்த பொடிசாக இருக்கும் அரிசியை கொத்தி தின்னவரும், (கோலம் போடுவதே அதுக்குத்தானே?)
கோலப்பொடியில் போட்ட கோலம் என்றால் ஈ எறும்பு சீந்தாது. கோலப்பொடியில் சிறிதளவு அரிசிமாவும் சேர்த்து போட வெளுப்பாகவும் வரும் அதே நேரத்தில் சிறு உயிரினங்களுக்கும் உணவிட்ட நிறைவும் கிடைக்கும்.
அதிகாலையில் கோலம் போடச்சொல்வதன் காரணம் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் நம்மை மாதிரியான 9-5 ங்கற வொர்க்கிங் ஹவர்ஸ் கிடையாது. மார்கழியில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் சிறு பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் இரை தேடி வெகுதூரம் செல்ல முடியாத காரணத்தினாலும் மார்கழியில் அரிசி மா கோலம் இடுதல் பெரும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவை அனைத்தும் இரை தேட அதிகாலையிலேயே சென்று விடும் என்பதால் தான் நம்முன்னோர்கள் இப்படியான பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்..
கோலங்களை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.கம்பி அல்லது கோட்டுக் கோலம், புள்ளிக்கோலம் ஆகும்.கோட்டுக் கோலம் என்பது கோடுகளை இழுப்பதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் வரைவதாகும். கோடுகளே பிறதானமாக விரிவாக்கிக்கொண்டே போகலாம்.
புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், புள்ளிகளை வைத்து கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகள் வைப்பதிலும் இருவித முறைகள் உள்ளன.ஒரு வகையில் நேர்வரிசையில் ஒரு சதுர வலை பின்னல் போன்று சதுர வரிசையில் வைப்பதாகும். இரண்டாவது முறையில், நிலைக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் ஒன்றுவிட்டு ஒன்று எனும் வரிசையில் புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் வரிசையில் உள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் இரு பக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும்.
இந்த இரண்டு வகைகளையும் நேர்ப் புள்ளி கோலம், ஊடு புள்ளி கோலம் என்போம்.இப்புள்ளிக் கோலங்களையும் இரண்டு வகையாக பிரிக்கலாம். புள்ளிகளை தொடாமல் வரையப்படும் நேர் அல்லது வளைவான கோடுகளை கொண்டு வரையப்படுவது ஒரு வகை.புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை வரைவது இன்னொரு முறை.
அநேகமாக எல்லாக் கோலங்களும் ஜியாமென்ட்ரி வடிவ அமைப்புகளைப் பின்பற்றியே வரையப்படுவதால் கோலங்களையும் முடிவின்றி விரிவாக்கிக்கொண்டு செல்லலாம்.பெண்கள் தங்கள் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் மகத்தான கலையல்லவா கோலம். இப்போது இதில் ஆண்களும் ஆர்வம் காட்டிகின்றனர்.
கம்பிக்கோலம், சிக்கு கோலம் எனப்படும் இவ்வகை கோலங்கள் இப்போது அருகி வருகின்றன. ரங்கோலி வகை கோலங்களே இப்போதைய நவீன காலத்தில் வாசலில் வரையப்படுகிறது. அதற்கு எந்த வரைமுறையும் இல்லை தேவைக்கு/ எண்ணத்திற்கு ஏற்றார்ப்போல் போட்டுகொண்டே போகலாம் என்பது இதில் இருக்கும் வசதி. ஆனால் அந்த காலத்தில் போட்ட கம்பிக்கோலத்தில், எந்த புள்ளியில் இழை நுழைய வேண்டும் எதில் வெளியேற வேண்டும் என ஒரு கணிதம் இருந்தது.
சிக்கு கோலம் என்பது ஒரு வடிவமைப்பை உருவாக்கும் புள்ளிகளைச் சுற்றி கோடுகள் வளைந்தாற் போன்று வரையப்படுவதால் சிக்கு கோலம், கம்பி / நெளிக் கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் படிக்கோலமிடுவது கூடுதல் மங்களகரமாக இருக்கும். படிக்கோலம் என்றால் கோட்டு கோலம் (இது ஒவ்வொருவர் வீட்டில் ஒரு டிசைன் இருக்கும்) போட்டு சுற்றிலும் காவியில் ( செம்மண்) பார்டர் போடுவது. இதையும் துணியில் போடுவதே நல்லது கை கறை ஆனாலும். ஆனா இப்போது அதுவும் பொடியாகவே கிடைக்கிறது. வெள்ளை & சிவப்பு பெயிண்ட் பிரஷ் கொண்டு போடுவது எல்லாம் இப்போதுதான்.
ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை கோலங்கள் யந்திரம் போன்றவை.யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடப்பட வேண்டும். இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றை இழை கோலம் ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு செம்மண் இட்டு (காவி) அழகூட்டுவது சிறப்பானது.
வண்ணக்கோலங்கள் மனதை பிரதிபலிக்கும் ஆற்றல் உடையது. வண்ணங்களின் சேர்க்கையும்,தேர்வுமே எண்ணங்களை சொல்லிவிடும். கூடுதல் புத்துணர்வு ஊட்டுபவையாக வண்ணக்கோலங்கள் இருக்கும்.
கோலங்களை ஏன் உளவியல் சார்ந்து பார்க்க வேண்டும்??. கோலம் போடுகையில் மனம், மூளை செயல்பாடு, உடல் திறன் என்று ஒன்றுக்கொண்டு இணைந்தே செயல்படத் துவங்கும். முதல் நாளின் அயர்ச்சியோ, மன அழுத்தத்தின் வெளிபாட்டையோ, உடல் ஒத்துழைக்காததையோ கோலம் காட்டிக்கொடுத்து விடும்.
புள்ளி வைப்பதிலோ, கோடுகளை இழுப்பதிலோ/ இணைப்பதிலோ சிறு இடத்தில் பிழை ஏற்பட்டாலும் கோலம் முற்றிலும் தவறாகக்கூடும். அது போல தான் மனமும், எண்ணும் எண்ணங்களில் சிறு தவறு நேர்ந்தாலும் வாழ்க்கையும் அலங்கோலம் ஆகிவிடும் என கோலத்தோடே தொடர்பு படுத்துகின்றனர்.
வாசலில் போடப்படும் கோலங்களில் எப்படி மறுநாளும் அதன் தடயங்கள் இருக்கின்றதோ அதே போல் தான் மனதிலும் எண்ணங்கள் தடயத்தை ஏற்படுத்துகின்றன. அழித்து அழித்து போடுவது அவ்வளவு எளிதல்ல.
உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாம் செய்யும் செயலில் முழுமையும், திருப்தியும் ஏற்படும். அதுபோல் அழகான கோலம் உருவாகவும் உடலும், மனதும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
ஒரு செயலை செயல்படுத்த தொடங்கியதும் தான் அதற்கான தேவைகள் என்ன ?? தடைகள் எது ?? என்று புரிபட ஆரம்பிக்கும். அதனை கடந்து வருவதே வலிமை.இயற்கை, உடல், பொருளாதாரம், சூழல் இவையெல்லாவற்றையும் விட மனது அதுவே எல்லாவற்றுக்குமான உறுதுணை. ஒன்றை பழக்கப்படுத்த மனதின் துணையிருந்தாலே போதும் எளிதில் கைவரப்பெறலாம் எதனையும்.
அதிகாலை வேளையில் எழுந்து கோலம் போட்டுவிட்டு அதன் பிறகே அன்றைய பணிகளை தொடங்கும் வழக்கம் இன்றும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில்தான் உடல் புத்துணர்வோடும், மனம் புத்திக்கூர்மையுடனும் செயல்படும்.
புள்ளிக்கோலங்கள் நமது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவது. புள்ளிகள் வைப்பது என்பது நாம் ஒரு செயலை செய்ய திட்டமிடுவது. அதில் கோடுகள் போட்டு இணைப்பது, அந்த திட்டங்களை செயல்படுத்துவது.
புள்ளிவைக்கும் இடத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கோலம் கோணலாகிவிடும். நினைவாற்றல் திறனை மேம்படுத்துவதோடு கவனச்சிதறலை கட்டுப்படுத்தும் ஆற்றல் புள்ளி கோலத்திற்கு இருக்கிறது.
தினமும் காலையில் எழுந்ததும் கோலம் போடும் வழக்கத்தை பெண்கள்
(ஆண்கள் போடக்கூடாதான்னுலாம் இல்ல) தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அது உடலுக்கும், மனதுக்கும் பலம் சேர்க்கும்.
மார்கழி மாதம் தொடங்குவதற்கு முன்னரே கோல மாவு தயார் செய்து வைப்பதும், கலர் பொடிகள் வாங்கி வைப்பதும் தொடங்கிவிடும். சில கலர் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிப்பதும் உண்டு. உதாரனமாக காபி/ டீத்துளை உபயோகித்த பின்னர் அதை காயவைத்து உபயோகப்படுத்துதலும் உண்டு
கிராமங்களில் மார்கழி முதல் தேதி அன்று ஒரு சாண பிள்ளையார், இரண்டாம் தேதியன்று இரண்டு, இப்படி முப்பது தேதிகளுக்கு வரிசையாக அதிகப்படுத்திக் கொண்டே போவார்கள். இந்தப் பிள்ளையாரை கோலத்தின் மீது மண்ணில் வைக்கக்கூடாது. அரச இலையிலோ அல்லது ஆல இலையின் மீது வைக்கலாம். பிடித்து வைத்த சாண பிள்ளையாரை எல்லாம் சேகரித்து வைத்து, தை மாத தொடக்கத்தில், கன்னிப் பெண்கள் அனைவரும் சேர்ந்து, நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள்.கன்னி பொங்கல் ன்னு ஒன்னு வைப்பாங்க அப்ப காஞ்ச சாண பிள்ளையாரை எருவாமட்டையா (வரட்டியா) கூட உபயோகிக்கும் வழக்கமும் சில இடங்களில் உண்டு.
சாண பிள்ளையாரையும் பூசணி, பூவையும் எதற்காக வைத்தார்கள் என்பதிலும் சிலருக்கு சந்தேகம் இருக்கும்.மார்கழி மாதத்தில் பூசணி பூ அதிகமாகப் பூக்கும் என்பதால் அந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். நல்லா ப்ரைட்டா கலர்ஃபுல்லா இருக்கும்ங்கறதால இருக்குமோ இருந்தாலும் மங்களகரமாக காணப்படும் கோலம். நம் கையில் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதில் ஒன்றும் தவறு இருக்கறதா தெரியலை
மார்கழி மாதத்தில் வீட்டில் திருமணத்திற்கு தயாராய் இருக்கும் பெண்கள், அதிகாலை எழுந்து நீராடுவதும், வாசல் தெளித்து தினம் ஒரு கோலம் போட்டு, சாணப் பிள்ளையார் பிடித்து, பூசணிப் பூ வைத்து வழிபடுவதும் மார்கழியின் ஸ்பெஷல். அந்த காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் பூசணிப் பூ வைப்பது இல்லை. எந்த வீட்டில் பெண் அல்லது பையன் கல்யாணத்துக்காக காத்திருக்கிறார்களோ, அவர்கள் வீட்டின் முன் மட்டும் பூசணிப்பூ வைப்பார்களாம். அவர்களைப் போன்றே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் வீட்டார் இதைப் புரிந்து கொள்வர்களாம். தைமாதம் பேசி முடிப்பார்களாம்.
கோலமிடும் பெண்களின் குணநலன்களையும் இதில் அறிந்து கொள்வார்களாம். பொறுமை, சிக்கனம், சின்ன வாசலாகினும் பெரிய கோலங்களை போடுவதும்,படைப்பாற்றல் என ஒவ்வொன்றையும் அறிந்து கொள்வார்களாம். கோலத்தில் பிழை இருந்தாலும் அதனை சரி செய்யும் பாங்கில் பெண் மணமுடித்து போகும் வீட்டில் எவ்வாறு பொறுமை சகிப்புதன்மை,விட்டு கொடுத்து வழி நடத்தி செல்வதெல்லாம் தெரிந்து கொள்வார்களாம். ( இந்த காலத்து இளம்பெண்கள் கோலம் போடறாங்களா ??? அதையெல்லாம் வைத்து கணிக்க முடியுமா என்ன சந்தேகம் தான்)
கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படி அழகுடன் இருக்கிறதோ அப்படி கோலம் போடும் பெண்கள் வீட்டினையும் தங்களது அன்பாலும், பொறுமையுடனும் வீட்டையும் குடும்பத்தையும் அழகு பேணுவார்கள். நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்பது, நம் வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் அழகான கோலம்தான். எதிர்மறையான எண்ணங்களோடு நம் வீட்டிற்குள் நுழைபவர்களைக்கூட நேர்மறையாகச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கோலங்களுக்கு உண்டு.
கோலம் என்பதை நம் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக வாழ்வியலோடு , வழிபாட்டு முறைகள் இணைந்தது தான் நம் தமிழர்களின் பண்பாடு.அதனால் கோலமிடுவதை ஒரு வேலையாக நினைத்துச் செய்யாமல் ஒரு வழிபாடாக நினைத்து பயபக்தியோடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம்.
அதையே நம் முன்னோர்கள் தெய்வத்தின்பால் தொடர்புபடுத்தி கோலம் இல்லாத வீடு மகாலட்சுமி வாழ விரும்பாத இடம். வீட்டின் வாசலில்தான் மகாலட்சுமி குடியிருப்பாள். மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தை மங்களகரமாக வைத்திருந்தால், நம் இல்லங்களில் அவளின் அருட்பார்வை கிட்டும் என சொல்லிவைத்திருந்தனர்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் தான் தூய ஆக்ஸிஜன் கிடைப்பதால், அந்த மாதத்தில் மட்டுமாவது அதிகாலையில் எழுந்து குளித்து நல்ல தூய்மையான ஆக்ஸிஜனை பெறுவதற்காக பெண்கள் கோலம் போடுவதற்கும், ஆண்கள் பஜணை செய்தபடி வீதி உலாவும் வருவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மற்ற மதத்தினருக்கும் இப்படி ஏதாவது ஒரு தொடர்பு இயற்கையோடு தெய்வத்தையும் கோர்த்து நடைமுறை படுத்தியிருப்பார்கள். கிருஸ்துவர்கள் இரவில் தொடங்கி அதிகாலையில் முடிக்கிறார்கள் தங்களது prayers யை இதே மார்கழியில் தான்.
பொதுவாகவே நமது உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் அதிகரித்துவிட்ட கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் இந்த மார்கழியில் அதிகாலையில் எழுவதால்..!!
வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கோலம் என இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் 8 இதழ் கொண்ட தாமரைக் கோலம் வாசலில் போடப்படுவது விஷேசமாக கருதப்படுகிறது.
கோலம் பற்றியான சில மூட நம்பிக்கைகளும் பரவாமல் இல்ல. சிக்கு கோலம் அதிகம் வாசலில் போடப் போட வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டே போகும் என்பதும் தவறான கருத்து ஆகும்.அதிகம் சிக்கு கோலம் போடும் பெண்கள் பொறுமையும்,நிதானத்துடன் ஆழமாக யோசிக்கும் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
மனம் அமைதியும், உடல் நலனும், போதிய அளவில் ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்கும் போது இது இரண்டுமே எளிதில் கைவரப்பெறுகிறது. அதற்காக தான் மார்கழி கோலங்கள் சிறப்புறுகிறது. முன்பெல்லாம் வீட்டுக்கதவை திறந்தவுடன் முகத்தில் அறையும் மார்கழி பனிக் காற்றை சுவாசித்துவிட்டால் தும்மல் பன்மடங்கு வந்து அன்றைய நாளையே வீணாக்கிவிடும். உடலை பழக்கத்திற்கு கொண்டு வந்து சரி செய்யவே இந்த மார்கழியில் சவாலாய் எடுத்துக்கொண்டு கோலமும் போட்டாச்சு. எதுவும் பழக்கத்தில் வருவது தானே..
அதிகாலையில் நாம் செய்யும் செயலானது அன்றைய நாளுக்கான பலனாய் இருக்கும். நேர்த்தியில்லாமல் போட்ட கோலமெனினும் தவறை உற்று நோக்கினால் திருத்திக்கொள்ளலாம் எனும் தத்துவத்தை உணர்த்துகிறது. மனம் ஒன்றி செய்யும் செயல் தான் அழகும் நிறைவையும் தரும். கோலம் போடுவதிலும் அப்படியே.. எவ்வளவுக்கெவ்வளவு ஈடுபாட்டோடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நேர்த்தியை காண முடியும்.
கோட்டு கோலம் என்பது ஒரு முடிவிலி. நம் கற்பனையின் நீளத்திற்கு போட்டுக்கொண்டே போகலாம். நம் வாழ்வும் அது போல தான் நம் உழைப்பையும், திறனை வளர்த்துகொண்டே செல்ல செல்ல நம் வாழ்வானது அழகாகி கொண்டே செல்லும்.
புள்ளி கோலங்கள் சொல்வது வழிகாட்டியின் பின் சென்று அழகாகவும், அர்த்தமாகவும் மாற்றிக் கொள்வது, கோட்டுக் கோலங்கள் என்பது நம் மனம் சார்ந்து சுயமாய் உருவாக்கிக் கொள்வது.கோலங்கள் போடுவதை வைத்து கூட உளவியல் ரீதியாக அணுகலாம். மனதின் வெளிப்பாடு கண்டிப்பாக கோலத்தில் வெளிப்பட்டு விடும்.
தினசரி போடும் கோலம் கூட, மனம் ஒன்றாத பொழுதில் பிழை ஏற்படலாம். அதீத மன அழுத்தத்தில் போடப்படும் கோலங்களிலும் காணலாம். குடும்பத்தில் பெண்களின் பங்கு இங்கு அதிகம், ஆதலால் தான் பெண்கள் அதிகாலையில் எழுந்து கோலம் போடும் போது கவனம் முழுவதும் ஒரு நிலையில் குவிக்கப்பட்டு, அன்றைய நாளுக்குக்கான தியானமாய் கோலங்கள் திகழ்கிறது.
அமாவாசைகளில் முன்னோர்களுக்கு படையலிடும் வீடுகளில் வாசலில் கோலம் இடுவதில்லை. வழக்கமான /விசேஷ நாட்களில் மட்டுமே கோலமட வேண்டும் என்றால், முன்னோர்கள் நாம் இடும் படையல்களை உண்டு நம்மை வாழ்த்த வரும் போது ஏன் கோலம் இடக்கூடாது என்பது புரியாத முரண்.
வீட்டு வாசல்ல எப்போதும் பெரிய கோலங்கள் போடுவதில்லை. பண்டிகை விஷேச நாட்கள் தவிர்த்து. வருடத்திற்கு மூன்று முறை கலர் கோலம் போடுvathundu PUத்தாண்டை வரவேற்கும் விதமாக எப்போதும் வண்ண வண்ண பொடிகளை கொண்டு வாசல் கோலங்களை அலங்கரிப்பது உண்டு.
வண்ணங்கள் தூவி முடிக்க நேரம் எடுக்கும் என்பதாலும், போட்டு முடிச்சு உள்ள வரதுகுள்ள எதாவது வாகனத்தின் சக்கரம் கோலத்தின் மீது ஏறி கோலம் அழிந்து விடும். அவ்வளவு நேர உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலும் போடுவதில்லை. கோலங்கள் வாசலுக்கு அழகையும் நிறைவையும் தருகிறது என்றாலும் பெண்களுக்கு அது உடல் உழைப்பையும் மன உறுதியையும் கோருகின்றன.கோலம் போடுவதால் பொறுமையும் நிதானமும் வந்திருப்பதாக நான் உணர்கிறேன்.
கோலம் போடுவதற்கு எளிதாகவும், பார்ப்பதற்கு சிக்கல் நிறைந்த கடினமான கோலம் என தெரிந்தாலும் போட்டு முடித்தப்பின் அழகையும் நிறைவையும் தருபவையாக படிக்கோலங்களே எனக்கு பிடித்தமானவையாக இருக்கின்றது.
கோலத்தில் பல வகைகள் இருப்பினும், நெழிக் கோலம் எனப்படும் சிக்குக் கோலங்கள் எல்லோராலும் விருப்பப்படுவதில்லை. காரணம் தொடக்கம் எது..? முடிவு எது ?? என்று தெரியாததால் தான். ஆனால் சிக்கலின் தொடக்கத்தை தெரிந்து கொண்டால் எவ்வளவு குறுக்கு புள்ளிகள் வந்தாலும் அழகான கோலமாய் மாற்றி முடித்துவிடலாம். கோலங்களை உளவியலாய் பார்ப்பதற்கும் அதுவே காரணம். வாழ்வில் ஏற்படும் சிக்கலின் முடிவை நோக்கி ஓடுவதை விட, அதன் தொடக்கத்தை கண்டறிந்து விட்டால் முடிவை எளிதில் எட்டிவிடலாம் மிக அழகாய்.
கோலம் என்பது கோடுகள் புள்ளிகளின் அடிப்படையிலேயே அமைக்கப்படுவை என்றாலும் புள்ளிகளில் ஒரு கணக்கும், கோடுகளில் ஒரு நேர்த்தியும் தேவைப்படுகிறது. புள்ளிகள் கோலத்தின் வழிகாட்டியாகவும், கோடுகள் அழகான கோலத்திற்கு இணைப்பாகவும் செயல்படுகின்றன. வெறும் கோடுகள் தானே எங்கோ நுழைந்து எதில் வேண்டுமானாலும் முடிவடையலாம் என்பதில்லை.
கோடுகள் திசைகளின் பண்பிற்கேற்ப அழகினை தரும். கோலத்தின் அடிப்படை விதி ஸ்வஸ்திக் என்றாலும் , மாற்று திசையில் போடப்படும் கோலம் அவ்வளவு நிறைவை தராது. கோலத்தில் முக்கியமாக பின்பற்ற வேண்டியதும் இதுவே. குறிப்பிட்ட விதத்தில் கோலம் போடுவதன் மூலம் அந்த நேர்மறை சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை தொடர்ந்து செய்வதால் நிச்சயம் பலன் கிடைக்கும். வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்
கோலங்கள் எங்கு எவ்விதம் போடப்பட்டிருந்தாலும் நேர்மைறை அதிர்வை உண்டாக்கக் கூடியவை.காலையில் முதல் வேலையே அன்றைய நாளுக்கான மகிழ்வை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. மகிழ்வோடு தொடங்கி, பெண்கள் சிறப்பான நாளாக அன்றைய தினத்தை ஆக்கிக்கொள்கின்றனர் .