Monday, November 30, 2020

காட்டு வழியே..

 ஒரு பயணம் நினைவை மீட்டவோ, கூட்டவோ செய்யலாம்..!! அப்படியான நினைவுகளை அள்ளிதரும் பயணமொன்றை மிகச்சரியாக ஒரு வருடம் கழித்து நினைவுகளில் மீட்டிப்பார்க்கிறேன்.மனமொத்தவர்களோடு செய்யும் பயணங்கள் ஒரு போதும் அலுப்பை தராதவை. 

நினைவுகளை நிரப்பிக்கொண்டாலும் சுமையாய் வலி கூட்டாதவை. அதுவும் நண்பர்களோடு செல்லும் பயணம் என்பது துளியும் உற்சாகம் குன்றாதவை. அதற்கு தோதான சக பயணிகள் அமைய வேண்டும். இங்கு வயதென்பது வெறும் எண்கள் தாம். அவ்வாறு மனது ஒத்தவர்களோடு ஒரு பயணம் சென்ற ஆண்டு இதே நவம்பரில் இரு நாட்கள் பயணித்திருந்தேன்.

தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டத்தை சேர்த்தவர்கள் அந்த குழுவில் பதிவு செய்து சென்றிருந்தோம். அதில் மிக குறைந்த அளவில் சிலரை மட்டுமே முன் அறிமுகம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களாகவும், தொழில் முனைவோர்களும், இல்லத்தரசிகளும், தங்களுடைய ரிட்டயர்மென்ட் வாழ்வில் புதிதாய் வாழ தொடங்கியவர்களும் வந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது..

 செல்லும் இடம் தெரியாது மேற்கொள்ளும் பயணம்  கூடுதல் சுவாரசியங்களைக் கொடுக்கத் தவறுவதேயில்லை. இந்த முறை அப்படியான  பயணம் தான் என்றாலும் தோழிகள் நிறைய பேர் என்பதால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கூடுதல் உற்சாகத்தோடு கிளம்பியாயிற்று. வரலாற்று சிறப்பு மிக்க இடமான உடுமலையிலிருந்து  மூணார் செல்லும் வழியில் உள்ள  மறையூர் & காந்தளூர் என முடிவாகியிருந்தது.

பயணத் திட்டங்கள் பற்றி வாட்சப் குழுவில் விவாதித்து பகிர்ந்து கொள்ளப்பட்டது. கூடவே விர்ஸுவல் அறிமுகமும்.  ஒரு வாரத்திற்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்ட  குழு என்பதால் ஒவ்வொருவருக்குள்ளும் நல்  நட்பு வளரத்துவங்கியது. கொண்டு வர வேண்டிய பொருட்கள் பட்டியல் இடப்பட்டது கூடவே ஸ்நாக்ஸ் பற்றியும். சிலர் தங்கள் கையாளே வீட்டில் செய்து எடுத்துவருவதாகவும், கடையில் வாங்கி வருவதாக சிலரும் தெரிவித்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஏற்படுத்தியது. 

பயணம் கிளம்பும் நாள் வரையிலும் உற்சாகம் குறைவில்லாது கலகலப்பாய் அரட்டை கச்சேரி களை கட்டியது. ஒவ்வொருவரும் பல்வேறு இடங்களில் இருந்து வருபவர் என்பதால், மையமாக  கோவை, பல்லடம், உடுமலை என மூன்று பிக் அப் பாயிண்ட் குறிக்கப்பட்டது.சென்னை, மயிலாடுதுறை, காரைக்குடியிலிருந்து தோழிகள் முதல் நாளே கோவை வந்து சக பயணியின் வீட்டில் தங்கி விட்டனர். 

கோவையிலிருந்து மற்றும் சிலரை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்ஸில் நானும் மற்றும் சில தோழிகளும் ஈரோட்டிலிருந்து காரில்  சென்று பல்லடத்தில் ஏறிக்கொண்டோம். அங்கிருந்தே ஆரம்பமாகியது கலாட்டாவும் & ஆட்டமும் பாட்டு கச்சேரியும். உடுமலையில் சிலர் ஏறிக்கொள்ள, மறையூர் நோக்கி செல்லத் துவங்கியது பேருந்து.

ஒருவாறு அனைவரது அறிமுகப் படலமும் நடந்து முடிய காலை உணவிற்காக ஒரு தோட்டத்தின் ஓரத்தில் நிறுத்தி பரிமாறப்பட்டது கோவையிலிருந்தே கொண்டுவரப்பட்ட உணவுகள். ஓவ்வொருக்கொருவர் பரிமாறிக்கொண்டது உணவு மட்டுமல்ல கூடுதலாய் கொஞ்சம் அன்பையும், ப்ரியத்தையுமே..! கூடவே சில செல்ஃபிகளும் ,க்ரூப் போட்டோகளும் எடுத்துக்கொண்டு  பயணத்தை தொடர்ந்தோம்.

உடுமலையிலிருந்து 40 வது கி.மீ ல் இருக்கும் மறையூர் நுழைகையிலேயே அங்கு தங்கவிருக்கும் ரிசார்டின் உரிமையாளர் நெளஃபலும், அவரது நண்பர் பாரதியும் வரவேற்றனர். பயணக் களைப்பை போக்க இளநீர், கடுங்காப்பி, தேநீர் என சுவைத்து இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலையையும் , அதிலிருந்து உருண்டோடி வரும் சிற்றறிவிவையும் ரசித்தபடியே தங்கும் விடுதி நோக்கி சென்றோம்.

அழகிய பாக்கு மரத் தோட்டத்துடன் கூடிய விடுதியை 11 /12 மணி வாக்கில் சென்றடைந்தோம். புதினாவும், எலுமிச்சையும் கலந்த வெல்கம் ட்ரிங்குடன் வரவேற்றார்கள். ஒவ்வொருவருக்கும் அறைகள் ஒதுக்கப்பட, இருவர் தங்கும் அறைகள் மிகவும் வசதியாக, அதே சமயம் கச்சிதமான அறைகளாக இருந்தது. 

அவரவர் அறைக்கு சென்று ரெவ்ஃபரஷ் ஆகி உணவு கூடத்தில் குழுமத்தொடங்கினோம். அவரவர் கதைகள், பாட்டு, கிண்டல் பேச்சுக்களும் சிரிபொலியும் கூடத்தையே அதிரச்செய்தது. அப்போது எங்களுடன்  சக பயணியாய் வந்த ஃபாத்திமாபாபு மேம் எல்லோருக்கும் ரேம்ப் வாக் சொல்லித்தர, மேடை இல்லாமலே அனைவரும் ரேம்ப் வாக் செய்து அதகளப்படுத்தினோம்.சிரித்து சிரித்து வயிறு நிறைந்து கொண்டிருக்க அதே வேலையில் மதிய உணவும் தயாராகி இருந்தது. பேச்சின் நடுவே சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டு பின்பு ஒவ்வொருவராய் ஓய்வெடுக்க அறைக்கு சென்றோம்.

சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் அனைவரும் தயாராகி அருகிலிருக்கும் அனகொட்ட பாற என்னும் பாறை குகை கோவிலுக்கு சென்றோம். 

மூணாறு போற வழியில் உள்ள முக்கியமான ஒரு ஊரான மறையூர். கிட்டத்தட்ட வளர்ந்த கிராமமாகப் தெரிந்தது. அங்கிருந்து ஒரு ரோடு காந்தளூர் போகிறது. இடைப்பட்ட அந்த ஜங்க்சன் தான் மறையூர்.

மறையூரில் நிறைய கிறிஸ்தவ சர்ச்சுகள்,ரிசார்ட்ஸ் ஹோட்டல்கள் இருக்குகிறது. அந்த ஏரியாவில் நிறைய தோட்டங்கள், டீ எஸ்டேட், அருவிகள், கோவில்ன்னு பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. முக்கியமா தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடுகள் காப்பகம் பார்க்க வேண்டிய ஒன்று.

நாங்கள் சென்ற முனியரா - அனகொட்டபாற வ்யூ பாயிண்டல்டில் கோவில் ஒன்றும் இருந்தது. ராமர் வனவாசம்  சென்றபோது ஒய்வெடுத்த இடம் எனவும். பஞ்ச பாண்டவர்கள் ஒளிந்து கொண்ட இடம் எனவும் பலகதைகள் நிலவுகிறது. அங்கு ஒரு ராமர் கோவிலும் இருக்கிறது. அந்த பாறை மலையின் மீது ஏறிப் பார்த்தால் மறையூரின் மொத்த  அழகும் காண முடிந்தது.

அங்கு நிதானமாக இயற்கையின் அழகை ரசித்து கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே பாரதியும் நெளஃபலும் சுடச்சுட பழம்பொரியும், டீயும் அங்கே கொண்டுவந்து கொடுக்க, இயற்கையை ரசித்தபடியே சிறு தீணியையும் ருசிப்பதும் மகிழ்வை கூட்டியது. அதே மகிழ்வோடு ரிசார்ட் வந்து சேர்ந்த போது கேம்ப் ஃபயருக்கு ஏற்பாடாகி இருந்தது. கூடவே பார்பிகியூவிற்கும். அந்த மிதமான குளிருக்கு இதமாய் இருந்தது. ஆட்டமும் பாட்டும் அந்தாக்ஷரி என களைகட்டியது இரவு விருந்தும்.ஏனோ மனம் அதில் ஈடுபடாமல் தனித்திருக்கவே செய்தது. மனதில் குழப்பம் சூழ கூட்டத்தினுள் தனிமையை தேடி களைத்தது. விரைவாக அறைக்கு வந்து படுத்துவிட்டேன். மொபைல் சிக்னல் அப்பப்போ தான் கிடைத்ததும் காரணமாய் இருக்கலாம் என சமாதானப்படுத்திக் கொண்டே உறங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் ஒர் ஆச்சரியம் காத்திருந்தது அனைவருக்கும் ஒரே மாதிரியான டீசர்ட் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நல்ல மாம்பழ மஞ்சளில் அன்று பூத்த சாமந்தியை போல் மலர்ந்து மிளர்ந்தனர் அனைவரும். ஒரே மாதிரியான உடையில் க்ரூப் போட்டோ ஒன்றை எடுத்து நினைவு பரிசுக்காக பத்திரப்படுத்தி கொண்டாயிற்று. 

காலை உணவை முடித்துக்கொண்டு மாற்று உடை ஒன்றை எடுத்துக்கொண்டு, மறையூரிலீருந்து 5,6 கீமி பக்கத்திலிருக்கும் தூவானம் அருவி நோக்கி புறப்பட்டோம். அங்கு வனசரகத்தினரிடம் அனுமதி மற்றும் நுழைவுசீட்டு பெற்று காட்டு வழியே நடக்கத்துவங்கினோம். 

கேரளாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் அந்த மாநிலத்திற்குள்ளாகவே ஓடி கடலில் கலப்பவையாம். பாம்பாறு மட்டுமே இரண்டாக பிரிந்து ஒன்று வால்பாறை நோக்கியும் இன்னொன்று எல்லை கடந்து இங்கு தமிழக எல்லையான மறையூரில் தூவானம் அருவியாய் கொட்டுகிறது. அந்த அருவியை காண சொல்லும் வழி என்பது காட்டு வழிப் பாதை மட்டுமே.

மிகச்சாதாரணமாக எண்ணி நடக்க ஆரம்பிக்க நுழையும் இடமே மிரட்டத்துவங்கியது .  சாலையிலிருந்து காட்டிற்குள் நுழையும் இடமே மிகச்சரிவான மலைப்பகுதியாய் இருந்தது மனதிற்குள் கொஞ்சம் மிரட்சியைத் தந்தது. ஒருவாறு சமாளித்து நடந்து கீழ் இறங்கும் வேளையில் உடன் வந்த சாந்தி ம்மா சறுக்கி விழ, அவர்களை தூக்கி,தேற்றி பக்கத்தில் உள்ள கிளையில் ஒரு கொம்பை உடைத்து ஊன்றுகோல் ஒன்றை கொடுத்து உடன் அழைத்து வந்தோம். இங்கு ஒன்றை சொல்ல வேண்டும் அவர்கள் வயதில் நான் நடப்பேனா என்பதே சந்தேகம். தைரியமனுசி நான் பார்த்ததில். வயதென்பது வெறும் எண் என்பதை நிரூபித்தவர். இதற்கிீடையில் மற்றவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து, அரசு அனுப்பி  வைத்த செக்யூரிட்டீஸ் உடன் அவர்கள் அருவியை நோக்கி சென்று விட்டிருந்தனர். 

 உடன் வந்த செக்யூட்டரியிடம் இன்னும் எவ்வளவு தூரம் என கேட்கும் போதெல்லாம் சினிமாவில் வருவது போல் " தோ (2) கி.மீ எனக் கூறிக்கொண்டே 4, & கிமீ நடக்க வைத்திருப்பார். கற்களும் பாறைகளுக்கும் இடையில் காட்டு வழியில் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே அந்த பச்சயத்தின் வாசனையோடு நடை என்பது அளாதியானதாய் இருந்தது. இடையிடையே குறுக்கிட்டு செல்லும் ஓடையும் அருவியின் சப்தமும் கேட்டபடியே நடந்ததினால் அலுப்பு துளியும் இல்லை.

எல்லாவற்றையும் கடந்து வந்து அந்த அருவியை காணும் போது வானில் இருந்து தூவலாய் கொட்டிக்கொண்டிருந்ததாலோ" தூவானம் என்று அழைக்கப்படுகிறது எனும் ஐயம் தோன்றாமல் இல்லை.

ஆற்று நீரில் ஆட்டம் போட்டதில் நேரம் போனதே தெரியவில்லை எல்லோருக்கும். மதியம் உணவை அங்கே அருவிக்கே சுமந்து வந்து அன்பை கூடுதலாய் பகிர்ந்து கொண்டனர் விடுதியினர்.

தண்ணீரில் ஆடிய களைப்பும் உண்ட களைப்பு சேர மீண்டும் மலையேற்றம் என்பது காட்டுவழிப்பாதை, ஓடை, பாறை என திகிலூட்டியது. போகும் போதே எளிதாய் இருந்தது என என்னும்படி திரும்பி செல்வது இன்னும் கடினமாக்கியது. மலை ஏற்றம் என்பதால் கொண்டு வந்த தண்ணீர் அனைத்தும் காலியாகியது  தாகத்தில் பாதி வழியிலேயே..

ஆங்காங்கே ஓய்வெடுத்து எடுத்து, எப்படியோ மலையேறி பேருந்தை கண்டதும் ஈடில்லா மகிழ்ச்சி. சாலையின் நடுவில் அமர்ந்து போட்டோ எடுத்துகொண்டதெல்லாம் புது வித அனுபவம்.

அங்கிருந்து மாலை கிளம்பி காந்தளூர் வந்து சேர்ந்தோம். வழியில் ஓரிடத்தில் நிறுத்தி,லெம்ன் டீ, லெமன் சோடா என அருந்தி ரெஃபரஷ் செய்து கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

வண்டி இருட்டான பாதையில் சென்று கொண்டிருக்க ட்ரைவர் எதுவும் சொல்லாமல் அனைத்து ஜன்னல் கதவுகளையும் மூடச்சொன்னதும் அனைவரையும் திகிலுறச்செய்தது. மெல்லல்ல் ல்ல்ல் நகர்ந்த வண்டியும் அச்சமூட்டியது.ஒரு வழியாக சமாளித்து ரிசார்ட் வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து இறங்கியது ட்ரைவரிடம் கேட்டதற்கு சாலையில் மின் ஒயர் அருந்து விழுந்திருந்தது, மேலும் மலை பாதை இருட்டாக இருந்ததினால் உங்களின் பாதுக்காப்பிற்காக சொன்னேன் என்றதும் தான் மனம் ஆசுவாசம் அடைந்தது.

இருள் கவியத்தொடங்கி, மிதமான பனிப்பொழிவோடு குளிரத்தொடங்கியது. அறைக்கு செல்லும் முன்னமே காபி அருந்தினால் தான் ஆச்சு என ரிசார்ட்டின் கிச்சன் நோக்கியே சென்று விட்டோம் நானும் இன்னும் சில தோழிகளும்.காபியோடு & ஸ்நாக்ஸ்யும் தயாராய் இருந்தது.

இரவு உணவுக்கு சின்ன விளையாட்டு ஒன்றை சாந்தி ம்மா அறிமுகப்படுத்த விளையாட்டின் சூட்சமம் தெரியாமல் தாங்களாகவே மாட்டிக்கொண்டு தோழிகள் முழித்தது பெரும்  சிரிப்பை வரச்செய்தது.

பின்பு அவரவர் கடந்து வந்த பாதைகளை பற்றி பகிர்ந்து கொண்ட போது, பெண் என்பவள் மகா சக்தி என நிரூபனமானது. அதில் ஒரு " சூர்யவம்சம்" . " காதலுக்கு மரியாதை"   என சினிமாவைவிட நிஜத்திலும் அதற்கும் மேலான சவால்களை சந்தித்து கடந்து வெற்றி யும் பெற்றிருக்கிறாற்கள். கேன்சரை வென்ற  சுகுனா ம்மா. என வாழும் உதாரணகளை கண்டதுமே பெரும் உத்வேகம் இனி வரும் ஆயுட்காலத்திற்கும்.

இரவு உணவு முடித்து அரட்டை கச்சேரி. சீட்டாட்டம். பல்லாங்குழி என உறக்கம் வரும் வரை தொடர்ந்தது. எப்போது தூங்கினோம் எழுந்தோம் எனத்தெரியாது. காலை உணவுக்கு பின் குளித்து மலைமுகட்டை போட்டோ எடுத்துகொண்டு கூடவே சிலபல செல்ஃபிகளை தேற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்ப ஆயத்தமானோம்..

மதிய உணவையும் முடித்து கிளம்பும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது கட்டி இழுக்காத குறையாக அனைவரையும் வண்டியிலேற்றி ஊருக்குத் திரும்பினோம்.

இந்தபயணத்தில் ரசித்த இடங்களை காட்டிலும், ருசித்து சாப்பிட்ட உணவுகளே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் வேளாவேளைக்கு நமக்கு யாராவது செய்து தரமாட்டார்களா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடே இம்மாதிரியான சுற்றலாவிற்கு செல்வதன் காரணமாகவும் இருக்கும்.

உடலும் மனமும் லகுவாகி, புது உற்சாகத்தோடு திரும்பிக் கொண்டிருக்கையில் பேரிடியாய் பெரும் சுமையாய்  இறங்கும் செய்தியை கனத்த மனதோட ஏற்க தயார்படுத்த தானோ அத்தனை கொண்டாட்டமும் மகிழ்வும் என கேட்டுக்கொண்டே மருத்துமனை நோக்கி ஓடினேன். வருகைக்காக காத்திருந்த ஆத்மாவின் கண்களில் நிம்மதி சூழ்ந்தது.


Wednesday, October 7, 2020

சருகாகும் சொற்கள்...

 உனக்காக கோர்க்கும்

ஒவ்வொரு வார்த்தையும்

முலாம் பூசப்படாதவை என

நீ உணரும் நாட்களில்,

உதிரத்தொடங்கியிருக்கும்

சருகாகி..


திணிக்கும் கசப்பை

நீ விரும்பியவண்ணமே

ஏற்கிறேன்

பிறிதொரு நாளில்

எதன் சுவையையும்

சுழித்து உமிழ்ந்திடாமலிருக்க...


வண்ணத் துகிலொன்றின்

நிறம் மங்கி 

கருமை போர்த்துகிறது..


எல்லாவற்றையும் 

ஏற்கத்துணிந்த பின்னும்

எட்டி நகரும் 

வழி தெரியாது

விட்டு சென்ற இடத்திலேயே

காத்திருக்கிறேன்..!!

Saturday, September 19, 2020

கிடத்தப்பட்ட மெளனம்

 முன் எப்பொழுதுமில்லா நிசப்தம்

அதிகாரம் இல்லை,பணிவுடனே

அனைத்தும் நடக்கின்றன.


திமிராய்,ஆக்ரோஷமாய்

கூச்சலிட்ட அனைவரும்

இன்று அமைதியாய் 

தலை கவிழ்த்தபடி..


என்றைக்குமில்லா மரியாதை

விதவிதமான

மலர் மாலைகளுடன்,


உற்றார்,உறவினர்களை

உபசரிக்கும் பணியாள் கூட

ஒரு பொருட்டேனும்

என்னை மதிக்கவில்லை,


அறையின் குளிர்நிலை தாங்காது

அலறும் என் குரல்

எவர் செவிகளுக்கும் எட்டவில்லை


உச்சத்தில் வரும் கோபத்தை

கட்டுப்படுத்துகையில் உணர்ந்தேன்

நடுவீட்டில் கிடத்தப்பட்ட

உணர்வுகளற்ற சவமாய்

நான்..!



Thursday, September 17, 2020

நானும் ஈரோடும்...

 "ஈரோடு" நகரம் உருவான நாள் இன்று 16.09.1871. அப்படி பார்த்தா இன்னிக்கு நகரத்தோட வயசு 149 ஆம்.. அவ்வளோ பழமையான நகரமான்னு கேட்டா அப்படிலாம் இல்ல.. வருஷம் ஒன்னு ஏற ஏற தன்னை தானே அழகா உருமாற்றிக் கொண்டு இப்ப "ஸ்மார்ட் சிட்டி" யா உருவாகிட்டு இருக்கு. சென்னிமலைக்கு பக்கத்துல உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதுன்னு அகழ்வாராய்ச்சிலாம் செய்து இப்ப கண்டுபிடிச்சுருக்காங்க. உரோம பேரரசுகளோட நம்ம மக்கள் வணிகம் செய்ததற்கான அடையாளமா  காசுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதா சொல்லறாங்க அவ்வளவு பழமையான வரலாற்றையும் கொண்டது நம்ம ஈரோடு. 

ஆற்றோட சேர்ந்த ஊர் என்பதால, அழியா வளங்களையும் அள்ளி அள்ளி வழங்குது " காவேரி ஆறு". கொஞ்சம் கொஞ்சமா இப்ப மாசு அடைஞ்சுட்டு வர்ற ஆற்றை வாரியம் அமைச்சு சுத்தம் பண்ணிகிட்டும், மாசு ஏற்படுத்தாதவாறு கண்காணிச்சுட்டும் வர்றாங்க நம்ம அரசாங்கம். மண்ணுல போட்டது பொன்னா விளையும்ங்கற மாதிரி "மஞ்சள்" விளையுற பூமி இது. மஞ்சளோட  நிறத்துக்கு முன்னால தங்க நிறம் தோத்து போவும். ஜவுளிக்கு தனியா சந்தை கூடறதும் இங்க தான். ஜமுக்காளம் நெய்யறதும் இங்க தான்.மல்லிகைக்கு சத்தியமங்கலம்.மன அமைதிக்கு திண்டலும், சென்னிமலையும். 

 பிறந்தது வேற ஊர் என்றாலும், வளர்ந்தது படித்தது இப்போது 35 வருஷமா வாழ்வது எல்லாமே ஈரோடு தான். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈரோட்டிலேயே வசிப்பதால், ஈரோட்டை என் சொந்த ஊராகவே பாவித்து கொள்ளத் தோனுது.

சில இடங்களில் உங்க Native place எதுன்னு?? கேட்கும் போது ஈரோடு என்பதை சொல்ல முடியாத ஏக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது, திருமணத்திற்கு முன்பு வரை.. அந்தியூரில் வாழ்க்கப்பட்டு இப்ப தொழில் நிமித்தம் ஈரோட்டில் செட்டில் ஆகியாச்சு. இப்ப இது எங்க ஊருன்னு சொல்லிக்க  எந்த தடையுமில்ல.

நான் வளர்ந்து வர்ற மாதிரியே, என் கூடவே வளர்ந்து வந்துச்சு இப்பவும் வளர்ந்துகிட்டே இருக்கு. மாலை நேரத்துல பழையபாளையம் தாண்டி போகவே பயமா இருக்கும். இப்போ பழையபாளையத்துக்கு அப்புறம் தான் ஊரே ஆரம்பிக்கறாப்புல எல்லா கார் ஷோரூம்களும் கடைகளும், மால், ஷாப்பிங் சென்டருமா வளர்ந்திருக்கு,பெரு நகரங்களுக்கு போட்டியாக.

பெரியார் பிறந்த மண்ணுங்கறதால், சுயமரியாதைங்கறது ரத்ததுலயே ஊறிப்போச்சு. எல்லா சொத்தும் சொந்தமும் இழந்து வந்தாலும், சுயமரியாதையோட நின்னு ஜெயிக்க வெச்ச ஊரு இது. 35 ஆண்டுகளா இந்த மண்ணில வாழ்ந்தாலும் இன்னும் ஒரு வாட்டி கூட அவர் வாழ்ந்த வீட்டை பார்த்ததில்லை. அந்த வழியா பல முறை கடந்து வந்திருந்தாலும். அவரது குடோன் இருந்த இடத்தை காண நேரும் தருணங்களில் எல்லாம் இங்கே அமர்ந்து தானே அத்தனை அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்திருப்பார்கள் என எண்ணி சிலிர்த்ததுண்டு.

 எவ்வளோ வசதி, வாய்ப்பையும் இழந்தாலும் ஈரோடு வந்தா பொழச்சுக்கலாம்ங்கற நம்பிக்கையை எல்லா மக்களுக்கும் வழங்கி இருக்கு. இந்தியாவோட வடக்குல இருந்து வந்த மக்கள வாழ வைக்கற ஊராவும் ஈரோடு இருக்கு.

பெரிய தொழிற்சாலைகளும், சிறுகுறு தொழில்களும், விவசாயமும் ஈரோடு முழுக்க வளத்தை கொடுக்குது. உலகமே பயன்படுத்தற "சக்தி மசாலா" நிறுவனமும், "வேட்டி" கட்டறதையே பாரம்பரியம் ன்னு உலகுக்கு பறைசாற்றி காட்டன் வேட்டிகளுக்கும், காட்டன் கைத்தறி சேலைகளுக்கும் முக்கியத்துவம் பெற்று தந்ததும் நம்ம ஈரோடு தான்.

ஈரோட்டுக்கும் எனக்குமான நெருக்கம் என்பது அதிகம். மக்கள் அதிகம் வசிக்குமிடமான சம்பத்நகரில், உறவுகள் அனைத்தும் கைவிட்ட நிலையில், அண்டை வீட்டாரே உறவுகளாய் சூழ வளர்ந்தது, பள்ளிக்கும், விளையாடவும் தோழிமார் புடைசூழ அனைத்து தெருக்களிலும் உலாவிக் களித்தது என மனதிற்கு இனிமை சேர்த்த நினைவுகளை தந்தது. இப்பவும் சம்பத்நகர் வீதிகளை கடக்கும் போது தாய்வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வு மேலிடத்தான் செய்யும். எந்த பகுதி என்றாலும் தைரியமா தனியாக செல்லும் அளவிற்கு பாதுகாப்பையும் அன்பையும் வழங்கும் ஊர் இது.

பிள்ளைகளின் கல்வின்னு எடுத்துக்கிட்டோம்ன்னா எல்லாவித துறைகளிலும் சிறந்து விளங்க நல்ல பள்ளிகூடங்களும், கல்லூரிகளும் இருக்கு. தொழிற்கல்வி முதற்கொண்டு அனைத்து துறைகளையும் கொண்ட கல்விகூடங்களை அமையப்பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தம் பிள்ளைகளை இங்கிருக்கும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க பெற்றோரும் நம்பி வரும் ஊரா இருக்கு ஈரோடு.

அதீத பக்தி இல்லையென்றாலும் ஆழ்ந்த பக்தி உண்டு தின்டல்மலை முருகனிடம். ஈரோட்டின்  வளர்ச்சி என்பது அவரையும் விட்டு வைக்காமல் கார்ப்பரேட் கடவுளாக்கி கொஞ்சம் விலக்கி, இன்னும் கொஞ்சம் கூடுதல் உயரத்தில் சென்று அமர்ந்து கொண்டு இந்த மாநகர் முழுவதையும் காத்து நிற்கிறார். மேற்கில் முருகன் என்றால் கிழக்கில் அவனப்பன் சிவன். கோட்டையில் தொண்டீஸ்வரனாய் காத்து அருள்பாலிக்கிறார். முதன்முதலில் தமிழில் அர்ச்சனை வழிபாடு நடந்தது இக்கோவிலில் தான் என்பது ஈரோட்டுக்கே சிறப்பு. மாசி மாதத்தின் இறுதியில் சூரிய ஒளி இறைவனின் மீது படுமாறு அமைக்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறது ( ஒரு முறையேனும் சென்று பார்த்துவிட வேண்டும்)

வாகனவசதிகள் இல்லாத போதும், இப்ப இருக்கும் போதும் ஈரோட்டின் சாலைகள் எப்போதும் ஒரு வாஞ்சை நிரம்பியதாய் இருக்கும் ( இந்த இரண்டு ஆண்டுகளை விட்டுவிடுங்கள்) எந்த சாலையில் நுழைந்தாலும் குழப்பமின்றி முக்கிய சாலையை எளிதில் வந்தடையும்படி வசதியாக அமைந்திருக்கும் ஈரோடு. தங்க நாற்கர சாலை திட்டத்தாலும், பெரிய மேம்பாலங்களாலும் சுற்றியுள்ள ஊர்களையெல்லாம் தன்னோட இணக்கமா இணைச்சுகிட்டு தன்னை விரிவாக்கிக்குது ஈரோடு.

ஈரோடு மாவட்டத்தோட தொழில் முயற்சிகளுக்குப் பெரிதாய் துணையாக இருக்கறது போக்குவரத்து. ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும், சென்னைக்கும் சாலைவழி போக்குவரத்து இருக்கு. அருகில் உள்ள மாநிலமான கர்நாடகா, கேரளா என விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இந்தியாவோட எந்த பகுதிக்கும் செல்ல ரயில் சேவையும் இருக்கு.

மற்ற ஊர்களை காட்டிலும் சுத்தம் மிகுந்த தெருகளையும் வீடுகளையும் அமைப்புகளையும் காணலாம்.இந்த கொரோனாவின் கொடுமையான பிடியிலிருந்து தன்னை விடுவித்து பச்சை மண்டலமா மாற்றிக் கொள்ள பெரும் காரணமாய் அமைந்ததும் இந்த சுத்தம் தான். வீடுதோறும் வேப்பமரமும், வாசல் முழுதும் சாணமிட்டு வளிச்சுவிடறதும் தான் காரணம். எத்தனை எத்தனை ஊர்களுக்கு சென்றாலும் மூன்று நாட்களுக்கு மேல் மனம் எதிலும் லயிக்காது ஈரோட்டை சுற்றிச் சுற்றியே வரும். 

தன்னை நம்பி வந்தோரை வாழ வைத்த ஈரோடு, இப்போது தன்னை தானே வளர்த்து மெருகேற்றிக்கொள்ளும் பணியில் இருப்பதால், சில பழிகளையும் சுமைகளையும் இடர்களையும் சுமந்தேயிருக்கிறது.. *மீண்டு வரும் புது பொலிவோடு என் ஈரோடு*.

நம்பி வந்தாரை வாழ வைப்பது சென்னை மட்டுமல்ல ஈரோடுக்கும் அது பொருந்தும்...

நம்பிக்கை வேர் பாய்ந்தோடும் இந்த காவேரி கரைதனில் வாழ்வது பெருமையும்   பெருமகிழ்வும்..!!


Saturday, August 29, 2020

மெளனச் சிதறல்

 மெளனத்தில்,

விரும்பி தேர்ந்தெடுத்த

ஒவ்வொரு சொற்களையும் 

இட்டுத்தான்

நிரம்பிக்கொண்டிருக்கிறேன்...


தழும்பி வெளிவரும்

சொற்கள்

உன் ப்ரியத்தின்

வாசம்தனை

சுமந்து

கரை தழுவட்டும்.,

இல்லையேல்,


பட்டுத்தெறிக்கும்

சொற்களின்

அழுத்தம் தாளாது

பேரன்பின் பிரவாகமாக

கொட்டித்தீர்த்துவிடு,!!


எனக்கான  

சொற்களென்பது

உனதானது மட்டும் தானே..!!

Tuesday, August 11, 2020

பார்வையின் எச்சம்...

 பார்வையில் விலகி,

சொற்களில் பிரிந்து,

வெகுதூரம் சென்றபின்னும்

நினைவுகளில் ஏன்

நெருங்குகிறாய்..?


ஞாபங்களின்

அடுக்குகளில்

ஒவ்வொன்றாய் 

களைந்த பின்னும்

மிச்சமிருப்பது,


முதல் முத்தமோ

முதல் ஸ்பரிசமோ

முதல் சொல்லோ

அல்ல


கடைசி நொடி

தீன்டலும்

கடைசியாய்

உதிர்த்த

சொல்லொன்றும்

எல்லாம்

முடிந்து

பிரிகையில்

விட்டு சென்ற

பார்வையில்

திக்கி நிற்கிறேன்


மீண்டும் 

ஒருமுறை

இறப்பதற்கு..!!

Sunday, August 2, 2020

ஆடி பெருக்கும்,தூரி நோம்பியும்...

திருவிழாக்கள் பொதுவாகவே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்திவிடும். கொண்டாட்ட மனநிலையும் திருவிழாக்கோலம் பூனும். ஆடி மாதம் தொடங்கிய உடனே ஆங்காங்கே இருக்கும் கோவில்களில் திருவிழாக்கோலம் தொடங்கிவிடும்.கம்பம் இடுதல், முளைப்பாரி போடுதல், மாவிளக்கு படைதல், கெடா வெட்டுதல், மஞ்சள் நீராட்டல் என தொடரும் நிகழ்வுகளில் பக்தி கொண்டாடப்படும்.பக்தி மனம் கமழும் பாடல்கள் வீதிதோறும் பெரிய ஒலிபெருக்கி கொண்டு ஒலிக்கச் செய்யப்படுவது, ஊரே திருவிழாக்கோலம் பூண்டதற்கு
அறிவிப்பாய் அறியப்படும். அவ்வப்போது வான வேடிக்கைகளும், கலர்கலராய் ஒளிரும் விளக்குகளும், சாலை ஓரமெங்கும் சிறு சிறு கடைகள் திருவிழாவிற்கு வண்ணஒளி கூட்டுபவையாக அமைந்திருக்கும். 

பால்யத்தில், ஆடி மாதம் என்பது கூடுதல் மகிழ்வை ஏற்படுத்துவதாக இருந்ததற்கு காரணம் வீட்டில் எனக்கு  மட்டும் ஸ்பெஷலாக புத்தம் புது துணி கிடைப்பது தான்.வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளை காவேரி தாயாய் மதித்து  சீர் செய்வதனால். ஆடி பெருக்கன்று புது துணி உடுத்தி, ஆற்று மணல் எடுத்து நீர் இட்டு பிள்ளையார் பிடித்து, காதோலை காப்பும் கருகுமணி வளையலும் , மஞ்சள் கயிறும் வைத்து, பச்சை அரிசியும், வறுத்த பாசிப்பயிறும் சேர்த்து வெல்லம் கலந்து செய்யப்படும் காப்பரிசியும்  அப்போதைய விளைச்சல் ஆனா பேரிக்காய், கொய்யா என பழங்கள் வைத்து  வழிபடுவது முக்கியமாக கருதப்படும்.ஆற்று மணலையே காவேரித்தாயாக எழுந்தருள்வதாக பூஜை செய்து வழிபடுவார்கள்.

சிறுவயதில் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கருப்பராயன் கோவில் இருந்தது. பல காலமாக வெறும் கருப்பராயன்  கோவில் என்று மட்டுமே அறிந்திருந்தேன். சம்பந்தமே இல்லாமல் நகரின் மத்தியில் எப்படி கருப்பராயன் கோவில் இருக்குமென்ற சந்தேகம். பொதுவாகவே கருப்பராயன் எல்லைச்சாமியாகவும், காவல் தெய்வமாக மட்டுமே அறியப்பட்டிருப்போம். ஆனால் எல்லை சாமியும், ஏரி காத்தவருமான கருப்பராயனை சுற்றி நகரம் தன்னை வளர்த்திக்கொண்டது ஏரியை அழித்து.ஈரோட்டின் மையப்பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகதின் எதிரில் இருக்கும் சுமார் 1 கிமீ சுற்றளவு கொண்ட ஏரியில் தற்போது இருப்பது தமிழ்நாடு ஹவுஸிங் யூனிட்டின் குடியிருப்புகள். வற்றி போன ஏரியின் மீதே உள்ளது இந்த குடியிருப்புகள் அதற்கு மத்தியில் தான் இந்த கோவிலும் எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து உள்ளது. ஏரி கருப்பராயன் கோவில் சென்று வழிபாடு போதெல்லாம், ஏரியை காக்க முடியாத கருப்பராயன், எம் குலம் காப்பது எவ்வாறு எனும் கேள்வி உள்ளுக்குள் ஓடாமல் இருந்ததில்லை.

ஆடி மாதம் நீர்நிலைகளின் அருகில் இருக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், நோன்பியும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறே ஏரி கருப்பராயன் கோவிலிலும் திருவிழா தொடங்கிவிடும். ஆடி 18 அன்று விஷேஷ பூஜை என்று களைக்கட்டும். ஆடி மாதம் 3 நாள் முளைப்பாரி போட்டு வேண்டுதல் தொடங்குவர். பதினெட்டாம் நாள் அன்று மாவிளக்கும் முளைப்பாரியையும் கருப்பராயனுக்கு படைத்து வணக்கி செல்வர். சிலர் கோவிலிலேயே புது பொங்கல் இட்டு சேவல் அறுத்து படையலிடுவர்.

ஆடி பதினெட்டாம் நாள் அன்று பெரிய பண்டாரம் மணிகளும், சலங்கையும் மாட்டிய சூலத்தை எடுத்து ஆடுவார். பார்ப்பதற்கு மிகுந்த அச்சத்தோடு கலந்த பக்தியை நமக்குள் ஏற்படுத்தும். அவர் சூலமெடுத்து ஆடும் போது கருப்பராயனின் அருள் அவர் மீது வருவதாக ஐதீகம். அன்று முழுவதும் கோவிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்.கூட்டநெரிசலில் சென்று வழிபடுவது என்பது மேலும் புது உற்சாகம் தருவதாய் இருக்கும்.

காலையில் வீட்டில் பூஜை முடித்து , உச்சிகால பூஜைக்கு சென்றுவிடுவது வழக்கம். வீட்டலிருந்து 50 அடி தூரமே என்பதால் உச்சி கால பூஜை மணியடித்ததும் முண்டி அடித்துக் கொண்டு ஓடுவோம். அதற்குள் கூட்டம் கூடி கோவில் வாயிற்படி வரைக்கும் நீண்டிருக்கும். மற்ற நாட்களில் இவர்களெல்லாம் எங்கிருப்பார்கள் எனும் அலுப்பான கேள்வியோடு கூட்டத்தினுடே நுழைந்து, பண்டாரம் மணி கட்டிய சூழல்மேந்தி அருள் வந்து ஆடுவதை பார்க்க முன் வரிசைக்கு சென்று விடுவோ. அடுத்த இரண்டு நாட்களுக்கு கருப்பசாமியா பண்டாரம் கனவிலும் வந்து பயங்காட்டுவார் அது தனி கதை. பால்யத்தில் பக்தியாய் கோவிலுக்கு சென்றதை காட்டிலும், கொண்டாட்டமாய் கோவிலுக்கு சென்றதே அதிகம்.

திருமணமாகி அந்தியூர்க்கு சென்ற போது, பலரும் சொல்வார்கள் (குருநாத ஸ்வாமி)ஆடிநோம்பியின் சிறப்பை பற்றி. நான் பார்க்காத ஆடிநோம்பி எங்க கருப்பராயனுக்கு முளைப்பாரி போடறதுல இருந்து 18 ம் நாள் சேவல் நேர்ந்து விடறதும், சாமியாடிக்கு கற்பூரம் போடறதும் அன்னதானம் போடறவரைக்கும் பார்த்தவுங்க நாங்க என இல்லாத காலரை இழுத்து விட்டு திருஞ்சேன். ஆறே மாதத்தில் அந்த ஆடி நோம்பியும் வந்தது. 

அந்தியூருக்கு பக்கத்தில் புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் ஆடித் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.பிரசித்தி பெற்ற இந்த கோயில்ல திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.  வனக் கோயிலில் உள்ள குருநாத சுவாமி, பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கி மகந்தேர் /மகமேரு  எனும் தேர் இழுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில், அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பர்.இப்போதெல்லம் கோவை,திருப்பூர், சேலம் பெங்களூரில் இருந்தெல்லாம் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதம் முதல் செவ்வாய் அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கி, 15 ம் நாள் முதல் பூஜையும், ஆடித் தேரோட்டமும் நடக்கும். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் கால்நடைச் சந்தை நடைபெறும்.

அந்தியூரின் நகர எல்லையில் ஆரம்பித்து புதுப்பாளையம் வரை சுமார் 6 கிமீ அளவிற்கு சாலையின் இரு மறுங்கிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். குண்டூசி முதல் கார், லாரி, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இரும்பு சாமான்கள், கால்நடைக்களுக்கு தேவையான பொருட்களும் என நிரம்பியிருக்கும்.

 திருவிழாவில் முக்கிய சிறப்பு என்பது இங்கு நடக்கும் குதிரை சந்தை தான் மிகப்பிரபலம். பல்வேறு அரசர்களும் இந்த குதிரை சந்தையில் வாங்கியதாக கூறப்படுவதும் உண்டு. திப்பு சுல்தான் தன் படைகளுக்கு தேவையான குதிரைகளும் போர் சாமான் களும் வாங்கியதாகவும் ஒரு தகவல் உண்டு.

விதவிதமான குதிரைகளும், வகைவகையான மாடுகளும்,ரகரகமான ஆடுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்படும். காட்சிப்படுத்த என வெளிநாட்டிலிருந்தும் ஆடு மாடுகள் கொண்டு வரப்படுவதும் உண்டு. பாக்கிஸ்தான் குட்டை ரக ஆடுகள் போன்று.காலில் சலக்கை கட்டிக்கொண்டு நடனம் ஆடும் குதிரையும், பந்தயத்திற்கு தயார்படுத்திய குதிரைகளும்  இதில் மிக சிறப்பு வாய்ந்தது.

ஆடி நோம்பி என்றாலே அது "தூரி நோம்பி" தான். கிட்டதட்ட  ஏக்கர் கணக்கில் விளையாட்டு தூரிகள் அமைக்கப்பட்டிருக்கும். ராட்டினம் தூரி, யானை தூரி, பைக் தூரி,கப்பல் தூரி, கப் & சாஸர் தூரி, ப்ரேக் டான்ஸ் தூரி பற்பல தூரி ஆட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் ஒருவித உணர்வை கொடுப்பவையாக இருக்கும்.

எனக்கு மிக பிடித்தது கப்பல் தூரி. கப்பல் வடிவில் அமைக்கப்பட்ட  தூரியில் குறுக்கு வரிசையாக அமர்வதற்கு ஏற்றவாறு இருக்கைகள் பலைகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் கப்பலின் முனை பகுதி போல் உள்ள இடத்தில் உட்கார்ந்தால் தான் அதிக விறுவிறுப்பும் உற்சாகம் கலந்ததாகவும் இருக்கும். வைரமுத்துவின் பாடல் வரிகளில் வருவது போல் " வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருளுதடி" என்பதாக இருக்கும். அத்தனைக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றி இருந்தாலும் பயங்கலந்த உற்சாகம் கரைபுரண்டோடிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு தூரியும் ஆடும் போதும்.

மரணக்கிணறு என்று ஒரு காட்சி நடக்கும் அதில் இருசக்கரவாகனத்தில் ஒருவர்  வட்ட வடிவ பாதையில் தனது வாகனத்தை இயக்கிக் கொண்டிருப்பார். எதிர் திசையில் ஒருவர் நான்கு சக்கர வாகனத்தை இயக்குவார். பார்ப்பதற்க்கே மிகுந்த திகுலூட்டுவதாய் இருக்கும். உயிரை பணயம் வைத்து சாகஸம் புரிவது அவர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு எனும் போது கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ளும்.

பகல் நேரத்தில் சாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு உணவும் முடித்துவிட்டு தூரிகடைகளுக்கு சென்றால் விடியவிடிய ஆடித்தீர்ப்போம். அந்த நேரத்தில் தான் வெளியூர்காரர்களின் வருகை குறைந்திருக்கும். ஆனால் அதுவே இரவா?? பகலா எனத் தெரியாது ஜன சந்தடியில் சிக்கித்தான் வர இயலும். நடந்து நடந்து கால்கள் ஓய்ந்தாலும் குதூகலம் கரைபுரண்டோடும் மனம் மட்டும் ஓயாது. இரவு உணவு முடித்திருந்தாலும் ஆடி களைத்து பசிக்கத்துவங்கும் வயிற்றுக்கு கரும்பு ஜூஸ், சோளகருது, அல்வா, பஞ்சுமிட்டாய், மாங்கா, கொய்யா அன்னாசி,தர்பூசிணி என வகை வகையா உள்ளே தள்ளிக்கொண்டே தூரி ஆடிவிட்டு வருவோம்.
அந்த நாட்களில் மட்டும் " ஹைஜீன்" யை கொஞ்சம் மறந்திருப்போம் ;) 

பலநாள் திட்டமிட்டு செல்லும் தீம்பார்க்குகளை காட்டிலும், வருடம் முழுவதும் காத்திருந்து வரவேற்கும் ஆடி நோம்பி எல்லா சந்தோஷத்தையும் பெருக்கும் ஆடிபெருக்காய் அமையும்.

வருடம்  முழுவதும் திறந்திருக்கும் தீம் பார்க்குகள் தரவியலா குதூகலத்தையும்,உற்சாகத்தையும் வருடத்திருக்கு ஒரு முறை வரும் ஊர் நோம்பி தந்துவிட்டு செல்கிறது என்பதுவே மறுக்க முடியாத உண்மை.









Monday, June 29, 2020

விரியத்துடிக்கும் சிறகுகள்...

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. முயன்றால் எல்லோருக்கும் வருவது தான். முயற்சியும், பயிற்சியுமே வளர்ச்சியின் முதல் விதை. சிலருக்கு இயல்பில் இருப்பது. சிலரோ வளர்த்துக்கொள்வது.

பிள்ளை வளர்ப்பில் பல நூற்றாண்டுகள் உளவியல் வழியாக அந்த செயல்கள் அணுகப்படாமல், தலைமுறை இடைவெளி உருவாகியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் நீட்சியாக தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சியாக மட்டுமே கவனிக்கின்றார்கள். அவர்கள் பிள்ளைகளின் கல்வி, உடல் நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பது தான் நிதர்சனம்

கருவில் தொடங்கி வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை எல்லாவற்றுக்கும் ஒரு வகுப்பு, பாடத்திட்டம். கற்றல், செயல்படுத்துதல் என அனைத்திற்கும் ஏதோ ஒரு வ்குப்பு நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.

அன்றைய குழந்தை வளர்ப்பு போல், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பது இல்லை. எல்லாவற்றையும் அனுபவ பாடமாக கற்ற அன்றைய குழந்தைகள் தான், தன் பிள்ளைகளை சிறப்பு வகுப்பிற்கும்,கோடை வகுப்பிற்கும் அனுப்பி கற்று கொடுக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இவ்வகை பெற்றோர்களுக்காவே மாறி வரும் கல்வி ,பாடத்திட்டம் ஒரு புறம். இதை மெச்சிக்கொள்ளும் பெற்றோர் இருக்கும் வரையில் ஏதும் செய்திட இயலாது.

மாதம் ஒருமுறை Field trip கூட்டிச்செல்வதை விளம்பரப்படுத்தி பிள்ளை பிடிக்கும் பள்ளிகளும், அங்கு சேர்ப்பதை கவுரவம் என காலர் உயர்த்தும் பெற்றோர்களுக்கும் புரிய போவதில்லை, ஆயாவும் அம்மாவும் எட்டாணாக்கு கொத்துமல்லி கருவேப்பிலையோ, அவசரத்துக்கென தீப்பெட்டியோ வாங்கி வரச்சொல்லி அனுப்பியது வேலைக்காக இல்லை,அது ஒரு அனுபவ பாடமென்று.

போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் ஜெயிக்க வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, இசைக்கருவி என்று எல்லாத் துறைகளிலும் முதலாவதாக இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.

இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்சியே பண்பாடு  போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.

பள்ளி பேருந்தில் வீட்டு வாசலில் ஏறி, இறங்கும் பிள்ளைக்கு எப்படித்தெரிந்திருக்கும் தன் பள்ளிக்கு எந்த வழித்தட பேருந்தில் செல்ல வேண்டும் என. அன்றைய காலகட்டத்தில் இவ்வாறான வசதிகள் இருந்தும் பள்ளிக்கு பேருந்தில் அனுப்பியதும் ஒரு வகையில் அனுபவம் பெறுவதற்காக தானே. உரிய சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்,நிறுத்தம் அறிந்து,கூட்டதிலிருந்து முன்னேறி இறங்கவும் யார் கற்றுக் கொடுத்தார்கள்.

பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் இயந்திரமாக்கிக் கொண்டு வருகிறது இந்த சமூகம்

உலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்”  மத்தியவர்க்கத்தினருக்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே இன்றைய வளர்ப்பு.

இன்றைய குழந்தைகள் உலகமோ  நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.

முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.

தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான் மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையோ குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு. சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.

எப்போதும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக பந்தயத்தில் ஓடும் குதிரை போல இயங்கும் மனநிலை உருவாகும். தோல்வி பயம் அவர்களிடம் மிகுதியாக இருக்கும். இதன் காரணமாக சமூகத்தில் பிறருடன் பழக வேண்டும் எனும் மிக முக்கியமான திறன் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உருவாக்குவது பெற்றோரின் அளவுக்கு அதிகமான கண்டிப்பும் அதிகாரமும் கொண்ட வளர்ப்பு முறை மட்டுமே சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடம் கொடுப்பதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். கேட்டதை வாங்கித் தருதல், பிள்ளைகளின் கல்வி, உடல் நலன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதும், அவர்களின் எந்த நடவடிக்கைகள் மீதும் கண்டிப்பும், கவனமும் கொஞ்சமும் இல்லாத வகையில் பிள்ளை வளர்ப்பு முறைகள் கொண்ட பெற்றோர்கள் தொடக்க காலத்தில் பிள்ளைகளை மிகச் சுதந்திரம் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள். 

சிறு வயதில் கொடுக்கப்படும் சுதந்திரம் பிள்ளைகள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு பயன்படும் என்பது இவர்களது கண்ணோட்டம். இது ஓரளவே உண்மை., மாறாக இந்த முறையில் வளரும் பிள்ளைகள் வயது ஏற ஏற தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்குள் அந்த பிரச்னை பல மடங்கு பெருகி பூதாகரமாக நிற்பதைக் கவனிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பெற்றோரின் துணை, பங்களிப்பு இதனை எதிர்பார்ப்பதா இல்லையா என்பதில் குழப்பம் உருவாகி பாதிப்பு அதிகம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாக எந்தப் பாடம் தேர்வு செய்வது எந்த கல்வி மேற்படிப்பு படிப்பது, எந்த கல்லூரியில் படிப்பது போன்றவை திருமணத்திற்கு தனக்கான துணையினைத் தேர்வு செய்தல் போன்றவையும். இதிலெல்லாம் பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டு அமைத்துக் கொண்ட எண்ணங்களைக் கொண்டு முடிவு எடுக்கும் போது அனுபவக் குறைவு காரணமாகத்‌ தவறுகள் செய்வது இயல்பு. பெற்றோர்களின் வழிகாட்டுதல் வழியாகக் கிடைக்க வேண்டிய சில அனுபவப் பாடங்களை, அவர்கள் பெறுவதில்லை, காரணம் அவர்களுக்கு கிடைத்த மிகுதியான சுதந்திரம். இதனைப் பெற்றோர்கள் உணர வேண்டும்

வசதிகள்,வாய்ப்பு எனச் சொல்லி இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பது ஒரு வகையான சிறை.பாதுகாப்பு என்றாலும் கூண்டும் ஒரு வித சிறையே. பறவைகள் கூட தன் குஞ்சுகளுக்கு கற்றுக் கொடுப்பது சிறகை விரித்து பறக்கத்தான். 

ஆனால் இன்றைய சூழ்நிலைகளையும், சமூகத்தையும் காரணம் காட்டி அவர்களின் ஒவ்வொரு சிறகாக பிடுங்கப்படுவதை விட, அதை எதிர்த்து துணிச்சலாக செயல்படவும் சிறகை விரித்து சுதந்திரமாக பறக்கவும் கற்றுக்கொடுப்போம்.

Monday, June 15, 2020

ஒரு தற்கொலைக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அவர்களின் அப்போதைய மனநிலையை யாரும் உணராதவரை ஆயிரமாயிரம் அறிவுரைகளை யார் வேண்டுமானாலும் வழங்கிச்செல்லலாம். அந்த அறிவரைகள் வெளிப்படும் கணம் மட்டுமே அவர்களை நினைவிலிருத்தி,இவர்களால் சொல்லக்கூடும். அதற்காக தற்கொலைகளை நியாயப்படுத்த விரும்பவில்லை. எப்போதும் எதற்கும் தற்கொலை தீர்வாகாது.

 ஒரு தற்கொலை செய்தியை கேட்ட மாத்திரத்தில் இது வரை தற்கொலை செய்து கொண்டோரின் பட்டியல் மனதிற்குள் ஓடத்தொடங்கிவிடும். ஆனால் அவர்கள்  வாழ்வின் ஆகச்சிறந்த பாடங்களை ஏதேனும் ஒரு கணத்தில் நம்முள் புகட்டியிருப்பார்கள். அதனை நமது ஊன்றுகோளாய் பிடித்துக்கொண்டு முன்னேறி செல்லும் நொடியில், அவர்களின் இழப்பு என்பது ஈடுசெய்ய இயலாததாகிவிடுகிறது. மேலும் தங்களின் தற்கொலையினாலும் வாழ்க்கை புகட்ட முடியாத அத்தனை பாடங்களை புகட்டி விடுகின்றனர்.

பொதுவாகவே சினிமாவை சினிமாவாக மட்டுமே ஏற்றுகடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் பார்த்த படம் MS  DHONI.முழுமையாக தோனியாகவே பார்க்கத்தொடங்கியிருந்தேன் சுஷாந்த்தை. அந்த படத்திற்கு பிறகு தான் தோனி பிடிக்கவும் ஆரம்பித்தது எனவும் சொல்லலாம். தோனியின் விடாமுயற்சியில் வெற்றி பெற்றதை  கூறும் கதை. எத்தணை இழப்புகள் வந்தாலும் எதிர்த்து போராடி வென்ற உண்மை கதையை அப்படியே உள்வாங்கி தனது நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார்.

வெறும் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி விட்டார் போலும். நானும் மகனும்(விஷாலும்) இந்த படத்தை எப்போது பார்த்தாலும் பேசிக்கொள்ளும் ஒரு வாசகம் "Hard work never fails"  உன் லட்சியத்தை நோக்கி உயிர்ப்போடு இரு ன்னு சொல்லிட்டே இருப்பேன். "உயிரோடு இரு" ன்னு  இனி சொல்லியும் வளர்க்கணும் போல,

இந்த கொரோனா காலத்தில், காசு,பணம், பதவி, படிப்பு இது எதுவும் இல்லையென்றாலும் உயிரோடிருப்பதுவே மிகப்பெரிய வெற்றி நம் வாழ்வில்.

#நல்லா_இருங்க

Tuesday, May 26, 2020

முதற் பயணம்

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வின் ஒரு முனையை பிடித்து இழுத்து நிறுத்திக் கொண்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டு ஓய்வெடுத்துக்கொள்ளவும், தொடர்ந்து வரும் நாட்களை இன்னும் கொஞ்சம் உற்சாகத்தோடு எதிர்கொள்ளவும், நிறைவை உணரவும் சற்று ஓய்வு எடுக்க ஆகச்சிறந்த வரமாய் அமையக்கூடும் சில பயணங்கள். எந்த அறிமுகமும் இல்லாத மனிதர்களோடு பயணிப்பது என்பது கூடுதல் சுவாரசியத்தை கொடுக்கக் கூடியது. அதே போல் எங்கு செல்கிறோம் என்ற அறிதலும் அந்த இடத்தைப்பற்றிய எவ்வித முன் முடிவுகளுமின்றி பயணம் மேற்கொள்வது என்பது கூடுதல் சுவாரசியம்.

 ஒரு நாள் முகநூல் குழுவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சுற்றுலா பற்றிய அறிவிப்பு பார்த்ததும் அப்போது இருந்த நிலைக்கு எங்காவது சென்று விட வேண்டும் என்னும் தீவிர அழுத்த நிலை,நிலையற்ற மனநிலையும் சேர்ந்து அயர்ச்சியும், சலிப்பையும் உண்டுபடுத்த, அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள எதைப்பற்றியும் யோசிக்காது பெயர் கொடுத்தாகிவிட்டது. எந்த ஊர்,எங்கு தங்குகிறோம் என எந்த விபரமும் அறியாமலேயே. இப்படியான பயணங்கள், சில நேரங்களில் மனத்திறப்புகளாகின்றன.   அத்தனை காலம் தேவையற்று மனதினுள் அடைக்கப்பட்டிருந்தவைகள் காணாமல் போகும் அத்தனை சாத்தியங்களும் உண்டு.

பயணங்கள் ஒரு போதும்  ஏமாற்றுவதில்லை. உற்சாகத்தோடு நாம் அறியாமலேயே பல பாடங்களை உணர்த்தி செல்லவும் தவறுவதுமில்லை. பாடங்களை கற்க எந்த தேடலும் தேவையும் இல்லாத கணங்களிலும் கூட,சந்திக்கும் மனிதர்கள், சூழல், காலநிலை என அனைத்தும் கற்றுக்கொடுக்கும் காரணிகளாகும் விந்தை அறியலாம்.

பயணத்திற்கு தேவையானவற்றை அடுக்கத்தொடங்கும் முன், எவையெல்லாம் தேவையற்றவை என பட்டியலிட்டு, தொலைக்க முடிவு செய்து ஒரு ஓரமாய் மனப்பொதியொன்றை அடுக்கத் துவங்கினேன் பொதியின் கனம் கூடியதே தவிர, போதுமென்ற நிறைவு ,துணி அடுக்கிய பைகளுக்கே வந்தது..

காலை சுமார் 7 மணி அளவில் ஈரோடு  பேருந்து நிலையம் சென்று, கோவை  செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் வரலாற்றில் பதிய தொடங்கியாயிற்று மொபைலில் ஆளுக்கு ஒரு செல்ஃபியும், மறக்காமல் முகநூலில் ஒரு பதிவும்."இப்போதைய என்னை தொலைக்கவும், என்னை நானே மீட்டெடுக்கவும் தேவையாய் ஒரு சிறு பயணம்" என ஒரு பதிவும் போட்டு விட்டு மொபைல் டேட்டா நிறுத்தி கதைக்கத்தொடங்கினோம். சுவாரசியம் துளியும் குறையாமல் பேசிக்கொண்டே சென்றோம் தோழிகளாச்சே. 2 மணி நேரம் 2 நிமிடங்களாய் கரைந்திருந்தது.

இரண்டு மணிநேர பயண அலுப்பு துளியும் வராமல் வந்தாகிவிட்டது கோவைக்கு. இறங்கியதும் தான் செவிக்கு உணவிட்டீர்களே கொஞ்சம் வயிற்றையும் கவனியுங்களேன் என மூளை கொஞ்சம் கட்டளையிட அன்னபூர்ணாவில் காலை உணவு முடித்துக்கொண்டோம்.  காலை உணவோடு காபி அருந்தும் அருமையான பழக்கத்தினால் அன்னபூர்ணாவின் அற்புதமான  காஃபியின் சுவையை தவற விடாது ரசித்து பருகி நினைவில் அதன் சுவையை இருத்திக்கொண்டேன். 

 பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் பெரிய ஜவுளிகடையின் முன்பு தான் முதல் பிக்- அப் பாயின்ட்.
பயணத்திற்கு யார் வருகிறார்கள் என பெயர் பதிந்து கொண்ட பின் ஆரம்பிக்கப்பட்ட வாட்சப் குழுமத்தில் குறுஞ்செய்திகளிலேயே நட்பாகிக்கொண்டவர்கள் ஒவ்வொருவராய் வர இனங்கண்டு, முகங் கண்டு, அறிமுகம் கொண்டு ஆரத்தழுவி நட்பு பூக்கத்துவங்கியது அந்த தார்சாலையின் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அறியாது.நினைவுகளுக்கு புரட்டிப்பார்க்க சிலபல செல்ஃபிகளோடு மீண்டும் ஓரு சிறுபயணம்.

வண்டி ஏறியதும் நகரத்தின் பெரும் இரைச்சல் மெல்ல மெல்ல தன்னை இழந்து அமைதியின் கரங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது இயற்கை அன்னையிடம். திரும்பும் திசையெங்கும் பச்சையை போர்த்திக்கொண்ட மலைப்பகுதியில் வாகனம் செல்லத் துவங்கியது. பச்சையின் வாசனையோடு சிநேகத்தின் வாசனையையும் நுகர முடிந்தது.  மலையும், தோழமையும் வசப்பட வந்து சேர்ந்த இடம் அட்டப்பாடி (சட் தர்ஷன்) அது அடர்ந்த வனத்திலொரு  அந்தரத்துக்குடில்..! 

அந்த வனத்தின் அமைதியும் மெல்லிய காற்றும் கட்டுக்கடங்காமல் மனத்தை இறக்கை விரிக்கச் செய்தது. அதன் பின் நடந்ததெல்லாம் காற்று அள்ளிச்செல்லும் இறகு, திசையெங்கும் அலைந்து திரிந்து கலந்தது போன்றது. சத்தியத்தின் தரிசனம் கிடைக்கும், வேறொரு உலகத்திற்குள் நுழைந்திருந்தோம். மழைக்காற்றுக்கு இதமா சுக்கு காபி வரவேற்பு பானம். அருந்திய படியே அந்த இடத்தின் அழகை கண்களில் பருக ஆரம்பித்தோம். அறைக்கு சென்று பைகளை வைத்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தை சுத்திப்பார்க்க கிளம்பினோம்.ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு மத்தியில் தானாய் உருவான நடைவெளியில் எவ்வித குப்பைகள் இன்றி அத்தனையும் மரத்திற்கே உரமாய் மாறியிருந்தன. வெளிச்சத்தில் காடுகளாய் காட்சி அளிக்கவில்லை காடுகள். மிகுந்த சிநேகத்தோடு அரவனைத்தது. காட்டின் மத்தியில் துள்ளி ஓடிக்கொண்டிக்கொண்டிருந்தது சிறுவாணி ஆறு. ஆர்ப்பரித்தெல்லாம் ஓடவில்லை அமைதியாய் நடை பயின்றது. அதைக்கண்ட எங்கள் மனம்  ஆர்ப்பரிக்க, மெல்ல எங்களை கொடுத்தோம் குளிர் நீர் சுமந்த ஆற்றுக்கு. நீந்தும் மீன் களுக்கு வேண்டுமானால் அலுப்பேற்ப்பட்டிருக்கலாம், சிரிப்பொன்றையே பிரதானமாக்கிய எங்களுக்கோ அலுக்கவேயில்லை. மதியம் உணவு தயாராகி விட்டதை அறிந்ததும் தான் மெல்ல ஒவ்வொருவராய் கரையேறினோம். உணவு உண்டு முடித்தவுடன் சிறிது நேரம் புகைப்படம் எடுத்துக்கொண்டும், எங்கு திரும்பினாலும் விதவிதமாய் இருக்கும் புத்தர் சிலையை ரசித்துக்கொண்டும், ஆற்றின் கரையில் தியானித்துக் கொண்டும் தங்களை மறந்திருந்தனர் அனைவரும்.

மாலையில் சூடான காபியும் ஸ்நாக்ஸ்யும் சாப்பிட்டு முடித்து, கொஞ்சம் ரெஃப் ஃப்ரஷ் ஆகி அனைவரும் கூடத்திற்கு வந்ததும்  அனைவரை பற்றியும் சிறு அறிமுக படலம் முடிந்த பின் தான் புரிந்தது எல்லோரும் ஒரே மனநிலையில் இப்பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என.  அனைவரது மனதையும் புரிந்து கொண்டு ஒரு மெல்லிய தியானம் கோட்டினை வரைந்தார் ஆனந்த்,யாருக்கு விருப்பமோ தியானிக்கலாம் மற்றோர் மெளனித்து வெறும் சுவாசத்தை மட்டும்  கவனித்தால் போதுமென சொல்லி, தியானக்கோட்டின் அருகிலேயே புள்ளி ஒன்றை வைத்து பல ஆச்சர்யங்களை உணரவைத்து என்னை நானே உணர பேருதவியாய் இருந்தது அன்றைய தியானம். மெல்ல மனம் சமநிலையை நோக்கிவர தேக்கிய அழுத்தங்கள் கண்களில் கரையத் தொடங்கியது.

இரவு 7 மணி இருக்கும் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தேவைக்கு அதிகமாய் ஒரு இடத்தில் கூட வெளிச்சத்திற்கு லைட்டோ, பல்ப்போ கிடையாது. காடு, காடு போலவே மிரட்டத்தொடங்கியது. நகரத்தின் வெளிச்சக் கூடாரத்திலேயே பழகப்பட்ட எங்களை மிரட்டி, திகிலூட்டி, அச்சத்துடனே அணுக பணித்தது.

பகலில் சுற்றிய இடமென்றாலும் இருட்டு மனதை திறக்கச் செய்து கண்களை கட்டி விட்டு வித்தைக் காட்ட துவங்கியது. அப்போது தான் ஆனந்த் அவர்கள் யாரெல்லாம் காட்டுக்குள் வருகிறீர்கள்?? எனக் கேட்டதும் கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் துணிந்து ஒவ்வொருவராய் பின் சென்றோம் முக்கியமா மொபைல் போனில் கூட ஒளியேற்ற கூடாது முடிந்த வரை மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்து கொள்ளவே அன்புக் கட்டளையே இட்டார். காடு அவருக்கு இணக்கமாய் இருந்தது அவரும்  காடோடு இணக்கம் கொண்டிருந்தார்.

ஆனந்த் முன் சென்றதாலும், நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைக்கோர்த்திருந்த படியாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல காட்டிற்குள் நுழையத் துவங்கினோம். அதன் பின் கண்டதெல்லாம் அற்புதக்காட்சி.

பிறந்ததிருந்தே நகர வாசம் தான். கிராமத்தின் காற்று கூட  தீண்டாத வாழ்வு எனது. காங்கிரீட் காடுகளையே கண்ட எனக்கு ஓங்கி உயர்ந்த மரங்களை முடிந்த வரை உச்சியை பார்த்து விட ஆவலாதி கொண்டது மனம். இரவில் வருடும் தென்றலுக்கு பச்சயத்தின் மணம். கலந்து வரும் அப்போது மலர்ந்த மலரின் மணம், பிறந்த குழந்தையின் வாசனை ஒத்திருக்கும்.

நடைபாதையின் ஓரத்தில் மூங்கில்களை கொண்ட பெஞ்ச் போன்ற ஒன்றை செய்திருந்தார்கள். அதில் எல்லோரும் எவ்வித சப்தமும் எழுப்பாமல் அமர்ந்தோம். சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு காட்டை மனத்திலிருந்து உணரச் சொன்னார். சிறு பூச்சிகளின் " கீச் கீச் " சப்தம் தவளையின் "ட்ர்ப்  ட்ர்ப்" சத்தம் என பல்வேறு ஒலிகளை கேட்டு உணர முடிந்தது. இப்போது கண்களை திறக்கலாம் என்றதும்,பயத்தோடு கண்களை திறக்க இதயத் துடிப்பின் சத்தம் காட்டையே உலுக்கிவிடும் போல் கேட்டது எனக்கு. அப்போது அங்கு கண்ட காட்சி நினைவில் காலத்திற்கும் சேர்த்து வைத்து கொள்ளும் பொக்கிஷம்.

திறந்த கண்கள் நம்ப மறுத்து இறுக மூடிக்கொண்டும் திறந்தும் என ஆச்சர்யத்தில் மிதந்து தத்தளித்தது. நட்சத்திரக் குவியல் இறங்கி பூமிக்கு வந்தது போல் மின்மினி பூச்சிகள் ரீங்காரமிட்ட படி சுற்றி சுற்றி வந்தது காடு முழுவதும் ஒளியேற்றியபடி.

நகரத்தில் வாழ்ந்த மனது எதையும் சந்தேகத்தோடு தானே அணுகும், அப்படி தான் எண்ணினேன் இது ஏதோ "ஜிம்மிக்ஸ்" வேலையென்று. காட்டுக்குள் இன்னும் கொஞ்சம் நடந்தால் ஓயர் எதும் இருந்தால் அறுந்துவிடும் தானே லைட்டு பூச்சியின் சுவிட்ச்யை கண்டுபிடித்து விடலாம் என தோன்றத்தான் செய்தது.( முதல் முறை அத்தணை லைட்டு பூச்சியை அப்போது தான் பார்க்கிறேன் :( ))

காட்டிற்குள் இறங்கி நடந்தால், பால்வீதியில் நிலவோடும் நட்சத்திரத்தோடும் கைப்பிடித்து  உலாவந்ததை போன்று இருந்தது. எட்டி பிடித்து கைக்குள் நிறைத்து கொண்டேன் நட்சத்திர குவியலை.

இன்னும் எத்தனையெத்தனை பயணம் மேற்கொண்டாலும், முதல் பயணம் என்பது  வாழ்வில் மறக்க முடியாததும் நினைவுகளை நிறைத்து கொண்டதுமாய் அமைந்தது.  ஏற்றிக்கொண்டு வந்த மனபொதி எங்கே தொலைந்தது என்ற எண்ணம் துளியுமின்றி நினைவுகளை அடுக்கிக் கொண்டது மனம். 





Sunday, April 26, 2020

எவர் பொருட்டும்...

எல்லோருக்குமான ஆசை என்பது, அவரவர் நிலையிலிருந்து மாறி நான் அப்படியாக இருந்திருக்கலாம்/ இவ்வாறு இருந்திருந்தா என ஒரு மாறுபட்ட எண்ணங்கள் மனதினுள் ஓடாமல் இருந்திருக்க முடியாது. அப்படியான எண்ணங்களையும் ஆசைகளையும் முற்றிலும் நிராகரிக்காமல் சிறிதளவேனும் தம் ஆசையை/ விருப்பத்தை  தனக்கு சாதகமான சூழலில் நிறைவேற்றிக் கொள்வோரும் உண்டு. நிஜத்தில் பார்க்கின்ற மனிதர்களுக்கு கொஞ்சமும் பொருந்திப் போகாத ஒரு புனைவு ஒன்றையே கதாபாத்திரங்களாக வடிக்கத் துடிகின்றனர் எழுத்தாளர்கள் எனலாம். ஆனால் "வண்ணதாசன்" அவர்களின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் எப்படி எப்போதும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவே படைக்கப்படுகினறனர் எனும் எண்ணம் தோன்றாமல் இல்லை. அவர் சந்திக்கும் மனிதர்கள் அப்படியானவர்களா அல்லது அப்படிப்பட்ட நேர்மறை மனிதர்களை மட்டுமே அவர் சந்திக்கின்றாரா எனும் கேள்வியோடு அவர் எழுத்துகளை வாசிக்கத் துவங்குகையில்,  " தவிப்பிற்கும், விருப்பத்திற்கும் இடையில் தான் உறவும் வாழ்வும் கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்த விதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்த சிறுகதைகள்" என தன் தரப்பு நியாயங்கள் முன் வைத்து எழுதியிருக்கிறார் நூல் குறித்த முன்னுரையில்.

வாசிப்பதற்கு ஏதுவான மொழிநடையில், அருகிலமர்ந்து சிநேகமாய் புன்னகைது வாஞ்சையோடு பகிர்வது போல இருக்கும் ஒவ்வொரு கதையும். கதையின் ஓட்டத்தில் நம் மனது சற்றே அசைத்துப் பார்க்கத் தூண்டும் எதிர்மறை கருத்துகளாலும்/ எண்ணங்களாலும்  சூழப்பட்ட நமக்கு இதில் திருப்பமாக யாரேனும் வரக்கூடும் என எண்ணும் நம் மன ஓட்டத்திற்கு, காலமும் சூழலுமன்றி மனிதர்கள் ஒருபோதும்  எதிர்மறையானவர் அல்ல என்பதை தம் எழுத்தில் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

ஊரில்  ஒரு வீட்டின் முன் இருக்கும் ஒரு சிலையினை வைத்து ஒரு கதை புனைய யாருக்கு தோன்றியிருக்கும், சிலையாகி போன நினைவுகளுக்கு, கொஞ்சம் ஞாபக வர்ணம் பூசி நினைவுகளில் மீட்டி விடத்தான் எவ்வளவு பேராவல் புகுகின்றன ஒவ்வொருவருக்கும். இக்கதையை வாசித்து கொண்டிருக்கையில் பால்யத்தில் கண்ட ஒவ்வொரு வீட்டின் முகப்போடும்  பொறுத்திப் பார்த்து நம் ஞாபகங்களை மீட்டெடுத்திருப்போம் . சிதிலமடைந்து, பொலிவின்றி இப்போதைய நிலையில் இருக்கும் எதுவும், நினைவில் அப்படியே தான் இருக்கின்றன எத்தனை ஆண்டுகளானாலும். அதன் வர்ணங்களோ, பூச்சுகளோ உதிர்வதேயில்லை.

பறிக்கும் பூக்களை காட்டிலும் உதிர்கின்ற பூக்களுக்கு எவ்வளவு மணம் நிறைந்திருக்கும் என்பதையும், கட்டாயப்படுத்துதலுக்கும்,  தன்முனைப்பிற்கும் இடையேயான சக்தி அது தான் என உணரமுடியும். ஒரு விஷயத்தை எதன் நோக்கில் யாரிடம் எப்படி கையாள்வது என யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு நொடியைக் கூட தன்னியல்பில் வரும்  சொற்களை ஆற்றில் உருண்டோடிவரும்  கூழாங்களாய் உருவகப்படுத்த அவரால் முடிகிறது. "சொல்லை இடைவெளியும், இடைவெளியைச் சொல்லும் கூழாங்கல்லாய் உருட்டி ஈரமணலில் ஒதுக்கும் ஆறும் அழகு. கரையும் அழகு" என முடித்திருப்பார்.

பூக்களின் நறுமணத்தைப் போல சொற்களின் வாசனையையும்  உணர முடியும். காணத் தவறிய மலர்களின் வாசனையை தேர்ந்து நுகர முடியும். குறிப்பிட்ட வீதியில், ஒரு வீட்டின் அடையாளமாய் மருதாணி செடி பூத்திருக்கும் வாசனையை சொல்லியிருப்பார் யாரும் தன் நினைவுகளில் கொண்டு வர இயலாததொரு மணமாய் அது நம்மை சுற்றி ஆக்கிரமிக்கத் தொடங்கும். அந்நேரத்தில் தாமரைப்பூவின் மனம் பற்றி விவரிக்கத் தொடங்கியிருப்பார் யாராலும் சொல்ல முடியாததொரு வாசனை அந்த தாமரைக்கும்.

வேப்பம்பூ பூத்து உதிர்ந்திருக்கும் சாலையில் காலை நடை என்பது மெல்ல சாகக்கொடுத்தலுக்கு சமமாய் இருக்கும் என்றிப்பார். அத்தனை பூக்களையும் வாழ்க்கையில் ஒரு நொடியேனும் கையிலேந்தி வருடி முத்தமிட்டு அதன் வாசனையை நுகர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

ஒரு சிறுகதையில், மலர்களின் மணத்தையும், மனிதர்களின் மனதையும் ஒன்றாய் நுகர கொடுக்கும் பாங்கு அழகியலின் ருசி எனலாம். தானாய் உதிர்கின்ற மலர்களைப்போல, மனித மனம் உதிர்க்கும் சொற்களின் மணத்திற்கு எத்தனை விதமான  நறுமணம். அத்தணையிலும் அதீத வீரியம் மிகுந்து காணப்படுகிறது. அப்படிப்பட்டது தான் செல்லையாவின் மனமும் அத்தனை வாசனை மிகுந்தது என சொல்கிறார். அங்கு அதில் நேர்மையின், நம்பிக்கையின் பொறுப்பின் நறுமணத்தை வாசிக்கையில் நுகர முடியும்.

மனித மணம் கண்ணாடியை விட நுட்பமாய் கையாள பட வேண்டுமென்பதை சூசகமாய் விவரிப்பது எவ்வளவு நாசூக்கானது. அதிலும் பதின் வயது பிள்ளையின் மனதை கைகொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே. அறிவுரைகளை வெறுக்கும் மனம் அவர்களது, அறிவுரையென எண்ணாத அளவிற்கு நமது பேச்சும், செயல்களும் சில நேரங்களில் புரிதல்களும் அவர்களை நோக்கி இருக்கவேண்டும். செல்லையாவின் தந்தையின் பொருட்டு அவனிடம் பேசி கொண்டிருக்கையில் தேர்வில்  தன் மகன் தோல்வியுற்றதை தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக நினைக்கும் தந்தைக்கு, எல்லா தண்டனையும் ஒரு இடத்துல முடிஞ்சு போகுமில்லையா ?? எனும் மகனின் பதிலில்  அத்தனைக்கும் தீர்வாய் விடையளித்திருப்பார். இரு மனங்கள் மோதிக்கொள்ளும் போது உடைந்து போக வேண்டியதில்லை என்பதை,கண்ணாடி என்றால் எளிதில் உடைந்து போக வேண்டும்  என்று கட்டாயமா என்ன?? என முடித்திருப்பதில் மனதை கண்ணாடியோடு ஒப்பிட்டு இருப்பார்.

பெரும்பாலும் இவரது கதைகள் மனித மனங்களை பற்றி பேசக்கூடியவைகளாகவே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கத் தவறியவைகளாகவே இருப்பது தான் வியப்பு. கால சுழற்சியில் வாழ்கையின் பெரும் பரபரப்பு மிக்க ஓட்டத்தில், சிதறிவிழும் சாமான்ய மக்கள் இவர்கள். தன் இயல்பை தொலைக்காத ஒரு அச்சில் வார்க்கப்பட்டவர்கள். மிக எளிய மனிதர்கள். இந்த யுகத்தின் வேகத்திற்கு, அழுத்தத்திற்கு ஒப்பு கொடுக்காதவர்கள். மனிதர்களாகவே வாழ படைக்கப்பட்டவர்கள்.

மனங்களின் இடவல மாற்றங்களுக்கு மனிதர்கள் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் இயல்பு என்பதை இருவேறு வகைகளாக மாறக்கூடியது அல்லது மாற்றக்கூடியது. திருமணத்திற்கு முன் பின் என மாறுபடும். நிலைக்கண்ணாடியில் தோன்றும் முகம் தனதானதா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவளுள் மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

மீனா, தஞ்சைக்கு தனது தோழியும்  சகோதரியுமானவளின் வீட்டிற்கு திருமணத்திற்கு பின்பும் தான் மட்டும் தனித்து வருகிறாள். கொஞ்சமும் தன்னியல்பை தொலைக்காதவளாய் இருப்பது தோழிக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. முகம் முழுக்க பவுடர் போடுவதும், கண்ணுக்கு மைத்தீட்டி கொள்வதும், மல்லிகையோடு கனகாம்பரமும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென கேட்பதுவும்  சத்தம்போட்டு சிரிப்பதுவும்.,பெரிய கோவில் வளாகத்தில் மெய் மறந்து வேடிக்கை பார்ப்பது என துளியும் அவள் மாறவில்லை என்று தோழியின் கண்ணோட்டத்தில் கதை நகர்வதாக  இருக்கும். ஒரு பெண்ணின் மனப்பாங்கில் ஆண் (எழுத்தாளர்) சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களும் பெண் மனதிற்கு ஏற்புடையதாகவே இருக்கும்.இப்படியாக மீனாவுடனும், செல்லையாவுடனும் சில காலம் அவரின் சிறுகதையில்          வாழ்ந்துவிட்டு வரலாம் 

வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர், பணி நிமித்தம் காரணமாக மாற்றலாகி போகும் இடங்களில் காணும் மனிதர்களின் வாழ்வும். அவர்களின் தேடலுமே இவருக்கான கருத்தும் தேர்வுமாகவும் சில நேரங்களில் பாடமாகவும் போதனையாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. தான் பயணித்த தூரம் குறைவு, சந்தித்த இடங்களும் மனிதர்களும் குறைவு என அவர் கூறிக்கொண்டாலும், எதிர்படும் மனித முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகை காட்டிச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு உலகின் மூச்சும் பெரும் வியப்பும் அவருக்கு அலாதியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன. மனிதர்களின் மிக நுண்ணிய உணர்வுகளையும் கண்டு பதிவு செய்யும் அவரது மொழி பிசிறற்றது. வாழ்க்கைக்கென்ன அதுபாட்டுக்கு  என்னென்னவோ சொல்லித்தான் செல்கிறது. வாழ்கை ஒரு அற்புதமான கதை சொல்லி, அதை ஏற்பதும் விடுப்பதும் அவரவர் விருப்பம். அவரின் சிறுகதை ஒவ்வொன்றும் தான் கண்ட மனித முகங்களின் மீதான வரிகளை எவ்வாறெல்லாம் வாசிக்கத் துவங்கலாம் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கும். அதனடிப்படையில்  அணுகத்துவங்கினாலே போதுமானது.

அன்றாட தேவைக்கு மேல் அல்லாமல் சம்பாதிக்கும் சாமான்யனின் வாழ்வில் இருக்கும் மகிழ்ச்சி என்பது கோடி கோடியாய் பொருளீட்டிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை.  அந்த சாமான்யன் எதிர் கொள்ளும் ஒர் நாள் என்பது சவால்களும் சங்கடங்களும் நிறைந்து இருப்பினும் அந்த மனித முகத்தில் தெரியும் நிம்மதி வரிகளை வாசித்திட முனைபவர்களாலேயே வாழ்வை அதன் போக்கில் ஏற்று நடந்திட முடியும் என்பதை வண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு சிறுகதையும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

வாசிப்பின் மீது அவ்வளவு நாட்டம் இல்லையெனினும், வாசிக்கும் புத்தகம் நம்மில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புபவள் நான். குறைந்த அளவில் தான் வாசித்திருக்கிறேன். ஏனோ எனக்கு ஒருவரை மட்டுமே மிகப்பிடித்த எழுத்தாளர் என்றோ, பிடித்த புத்தகம் இது ஒன்று தான் எனவோ எதையும் குறிப்பிட்டு கூறிட இயலாது. ஏனெனில் ஒவ்வொரு புத்தகம் ஏதோவொன்று உணர்த்துகிறது. நம் பார்வை கோணத்தை மாற்றுகிறது. நம் இயல்பை மாற்ற சரி செய்ய முனைகிறது. அவ்வகையில் என்னுள் சில மாற்றங்களையும், பார்வை கோணங்களையும் சரி செய்ய வண்ணதாசன் அவர்களின் எழுத்து துணை நிற்கிறது என்றால் மிகையாகாது.






Tuesday, April 7, 2020

அவனருகில்...

அன்றொரு நாள்
இதே தினத்தில்
நான் இருந்தேன்
அவனருகில்..

வெம்மை கூட்டும்
கோடையும் கூட
இதமாய் வருடியது
விரலிடுக்குகளில்

கண் சிமிட்டிக்
கொண்டது
வெட்கம் பூத்த
வார்த்தைகள்..

தொடக்கமும்
முடிவுமறியாது
உருண்டோடத்
துவங்கியது
ஒரு பயணம்
மனதினுள்...

விட்டுவிட
இயலாது
அத்தனையையும்
சேகரிக்கிறது
நினைவுகளாய்
காலம்..

அன்றொரு நாள்
இதே தினத்தில்
அவன் இருந்தான்
என்னருகில்...!!
எதிர்பாரா நட்பு

சூழலும் சந்தர்ப்பமும்

விதைத்த செடியில்

மொட்டுவிட துவங்கியது…

எளிமை கண்டு வியக்க

எளிதாய் உரு கொண்டு

பூத்தது..

ஒருவருக்குள் ஒருவரானோம்

அது அழைத்து சென்றது

வட்ட பாதையில்

உன் பின் நானும்

என் பின் நீயும்

தேடிக்கொண்டிருக்கிறோம்

தொலைத்தது நம்மையே

என்றான பின்னும்..!!

Monday, April 6, 2020

அப்பாவிற்கு ஓர் கடிதம்...


அன்புள்ள அப்பா,

நலமோடு இருப்பீர் என நம்புகிறேன். நலமோடும் உங்கள் நினைவோடும் வாழும் மகளின் முதல் கடிதம். இது வரை உங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய சூழல் வராதவாறு உங்க அருகிலேயே, அரவனைப்பிலேயே வளர்த்து விட்டீர்கள். முதன் கடிதம் என்பதால், எதை சொல்வது எதை விடுப்பது என்பதில் தான் எத்தனை தடுமாற்றம். உங்களிடம் பேசுவதற்கு எந்த தடுமாற்றமும் வந்ததில்லை இது வரை ஆனால் ஏதோ ஒரு குற்ற உணர்வில் சிக்கித் தவிக்கிறேன் உங்களிடம் எதுவும் மறைத்ததில்லை. உடனுக்குடனே பேசி தீர்த்த விஷயங்கள் தான் எத்தனையெத்தனை. இப்போது உங்கள் அருகாமையை இழந்த பின்னரே தெரிகிறது, எவ்வளவு அனுக்கமாய் ஆதரவாய் இருந்தீர்கள் என்பதை. அந்த காலனுக்கு தான் அப்படி என்ன அவசரம் இருந்திருக்கக்கூடும். திசை அறியாத காட்டில்  கை உதறி , தனிமையில் என்னை விட்டு சென்று விட்டீர்கள்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் பெரும் துயரங்களையும் எளிதில் கடக்க சொல்லிக்கொடுத்திருந்தீர்கள். எதை கண்டும் அச்சம் கொள்ளாமல் துணிவுடன் எதிர் கொள்ள பழக்கப்படுத்தியிருந்தீர்கள். ஆண் பெண் பேதமற்று பழகவும்,  வாழவும் கற்று கொடுத்தீர்கள். " கொடிது கொடிது இளமையில் வறுமை" எனும் கூற்றை உடைத்து மகிழ்வோடு வாழ்வை அதன் போக்கில் ரசித்து ஏற்க கற்றுக்கொடுத்தீர்கள். இப்போதெல்லாம் எதையும் இழந்தாக வருத்தப்படுவதேயில்லை உங்களை தவிர... ஏனோ மனம் உடைகிறது ப்பா.. நீங்கள் இல்லாத இந்த நாட்கள் அவ்வளவு இயல்பாய் இல்லை..

இப்போதெல்லாம் உங்களை மிகவும் இழந்ததாக வருத்தப்படுகிறான் மகன்(விஷால்) இன்னும் கொஞ்சம் காலமாவது உடனிருந்திருக்கலாம்.. உங்களைப்போல அறிவுரையோ தன்மையாய் எடுத்து சொல்ல நண்பனைப்போல யார் இனி எனக்கு கிடைக்கபோகிறார்கள் என சில நேரம் வேதனையோடு பகிர்ந்து கொள்கிறான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவா புரிந்து கொண்டுள்ளான் புகைப்பதினால் ஏற்படும் ஆபத்து பற்றியும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நன்றாகவே அறிந்துகொண்டுள்ளான்.புகை பழக்கத்தினால் உடலில் சேர்ந்த நிகோடினின் அதி தீவிர தாக்குதல் குறித்து அச்சம் கொண்டுள்ளான். நானற்ற, உங்க இறுதி நாட்களை  உங்கள் அருகிலிருந்து உங்கள் துயர்களை கண்ணுற்றவன். அதனை என்னிடம் பகிரும் போதெல்லாம் அவனிடம் ஏற்படும் பதைபதைப்பும், எந்நேரமும் விழுந்து விடத்தயாராய் காத்திருக்கும் கண்ணீரில் காண்கிறேன் நீங்கள் அவனுக்கு சொல்லிக்கொடுத்த உறுதி மனப்பான்மையை.

 எந்த விதத்திலும் ஈடுசெய்ய இயலாத இழப்பை எனக்கு நீங்கள் அளித்திருப்பதை கண்ட, அவனுக்கு கொஞ்சம் கோபம் உங்கள் மீது இருக்கிறது. அதனை நான் சோர்வுறும் தருணங்களிலெல்லாம், உடன் ஆறுதலாய் இருந்து அணைத்து செல்கிறான் தந்தையுமானவனாய். என் மன அழுத்தங்களுக்கு , புரிதல் எனும் மருந்திடுகிறான் உங்களை போலவே.

இந்த கடிதம் எழுதிகொண்டிருக்கும் நேரம் அவன் பத்தாவது பொது தேர்வை, நீங்க அவனுக்கு பரிசளிக்க வைத்திருந்த பேனாவால் எழுதி கொண்டிருக்கிறான். அதனை உங்கள் கைகளால் கொடுத்து ஆசிர்வதிக்கவாவது. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.

உங்களின் இறுதி நாட்களில், என்னை உடன் இருக்க அனுமதிக்காதது எதுவாக இருந்திருக்கும். மிகுந்த அன்போடு இருப்பவரை மரணம் தள்ளி வைத்துவிடும் என பெரியோர் சொல்வதெல்லாம் உண்மைதானோ??  அன்பென்ற சொல் அறியாது அன்போடிருந்திருக்கிறோம் அப்படிதானே அப்பா. தவறுகள் செய்த போதும் கைநீட்டி அடித்ததில்லை என்னை மட்டும் என்றில்லை அண்ணன்களையும் தானே. நிகழும் அணைத்திற்கும் நியாயம் எடுத்துரைத்து, தவறுகளை எங்களையே உணரச்செய்தது உங்க வழிகாட்டுதல். பதின் பருவ தடுமாற்றங்களை எல்லாம் கடந்து வர, கை பிடித்து இழுத்து வராமல் சரியான பாதை எதுவென எடுத்துரைத்து, முடிவுகளை நாங்கள் எடுக்க அனுமதித்தீர்கள். என் மகனுக்கும் அவ்வாறே நானும் இருக்கிறேன் . சிறந்த என் முதல் தோழனாய் நீங்கள் இருந்தீர்கள். அப்பாவை இழந்ததை காட்டிலும் என்னின் சிறந்த தோழனை இழந்து நான் தவிப்பதே அதிகம்.மரணம் யாவர்க்கும் சமம் தான், அது நம்மை அணுகாத வரை தானே.
எல்லோரிடமும் நட்பை பேனும் உங்களுக்கு நிச்சயம் அங்கும் நண்பர் கூட்டம் கிடைத்திருக்கும் அல்லவா, இழந்து தவித்த உங்கள் அம்மாவின் அருகாமையை பெற்றுருப்பீர்கள் தானே. அடிக்கடி உங்கள் நினைவுகளில் இருந்து எடுத்து சொல்லி மகிழும் பாட்டியின் கைப்பக்குவத்தில் இப்போதெல்லாம் உணவு கிடைக்கின்றதா ?? எப்போதாவது எங்களை இழந்தது குறித்த எண்ணங்கள் வருகிறதா அப்பா ?? உங்களின் எண்ணப்படியும் ஆசையின்படியும் என்னையும் அண்ணன் களையும் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் பார்த்துவிட்ட திருப்தியில் இருந்தீர்கள் என்பதை உங்களின் இறுதி நாட்களில் உணர்ந்து கொண்டேன்.

குழம்பும் தருணங்களில் எல்லாம் உங்கள் முகம் தான் கண் முன் தோன்றுகிறது. சோர்ந்து துவளும் என் முகத்தையோ,அயர்ச்சி மிகுந்த என் குரலையோ கேட்ட மாத்திரத்திலேயே காரணத்தை யோசிக்கத் துவங்கிவிடும் உங்கள் மனம். தீர்வை நான் யோசிக்கும் முன்னமே வழிமுறையையும் வழிகாட்டலுமாய் என் கரம் பற்றி வெதுவெதுபாய் பகிர்ந்து கொள்வீர்கள். இது வரையில் எந்த ஒரு துயரும் ஆட்கொண்டதில்லை நீங்கள் என் அருகிலிருந்ததாலேயே,அதை பற்றி நானும் எண்ணியதில்லை.தீர்க்கமான நம்பிக்கையாய் உடன் இருந்தீர்கள்.

 இப்போதெல்லாம் நம் வீட்டிற்குள் நுழையும் போதே ஒரு வெறுமை வந்து அப்பிக்கொள்கிறது. அண்ணன்களோ குழந்தைகளோ  இருப்பினும் யாருமற்ற வெற்றிடமாய் தான் தோன்றுகிறது. வாசல் வந்து வரவேற்கும் அந்த குரலை தேடித் தேடி களைத்து போகிறது மனம். சமீப நாட்களில் அம்மாவும்,அண்ணன் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், இப்போது நான் நம் வீட்டின் இரும்பு கதவை திறக்கும் வேளையில் ஒரு வெள்ளை பூணை ஒன்று "மிய்ய்யாவ்" என்று குரல் எழுப்புகிறது அது ஏதோ மனதிற்கு ஆசுவாசமளிக்கிறது ப்பா இப்போதெல்லாம்.

எதற்காகவும் கலங்கியதாக உங்களை நான் பார்த்ததேயில்லை. அது போலவே தான் எங்களையும் வளர்த்தீர்கள்.நீங்கள் விரும்பி எதுவும் கேட்டதில்லை இதுவரை. உங்களுக்கென்று எதன் மீதாவது ஆசை இருந்ததாக கூட எங்களுக்கு நினைவில் இல்லை பாழாய் போன அந்த சிக்ரெட் தவிர்த்து. புகைபிடிப்பதை  மன அழுத்தத்தை வெளியேற்றத்தான் என்பதை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உணர்ந்து கொண்டேன். அத்தனை அழுத்தங்களும் கசடாய் உங்க இருதயத்திலே தங்கி இருந்திருந்திருகிறதே. கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நீங்கள் அறிந்திருந்தீர்களா?? சிறு குழந்தையை போல நீங்கள் கேட்ட அனைத்தயும் நிறைவேற்றாமல் ஏன் நான் மறுத்து ஒதுக்கினேன். "வேள்பாரி"  புத்தகம் தான் நீங்க கேட்டு நான் கடைசியா வாங்கி கொடுத்தது. அதில் தான் உங்களுக்க்உ எவ்வளவு மகிழ்வு. வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் ,அதை கூறி எவ்வளவு மகிழ்ந்தீர்கள்.

வாழ்க்கையில் எதுவும் முக்கியமில்லாது பணத்தை நோக்கி ஓட வைக்காமல். பணத்தின் மதிப்பை உணர்ந்திருந்தோம். எதுவும் எளிதில் சம்பாதித்து விடலாம், உறவையும் நட்பையும் தவிர என உறவின் உன்னதத்தையும், நட்பையும் மதிக்கக் வாழ்ந்து கற்று கொடுத்தீர்கள். எதற்காகவும் தைரியம் இழக்காமல் வாழ்க்கையை வென்று காட்டியவர் தானே ப்பா நீங்க எல்லோருக்குமான தைரியமாய் இருந்தவர் அல்லவா, எந்த கட்டத்திலும் சவால்களை எதிர்த்து துணிவோடு எதிர் கொண்டு தானே பழக்கம். 

இறுதி நாட்களில், உங்களுது தைரியமற்ற வார்த்தைகளை  நம்ப மறுத்து ஏன் உங்களை விட்டு சென்றேன். நீங்க் அளித்த  அந்த தைரியத்தை,  உங்களுக்கு திருப்பி அளிக்க ஏன் மறுத்து சென்றேன். மருத்துவமனையின் அந்த படுக்கையில், மூச்சிற்கு சிரமப்பட்டு கொண்டிருந்த போதும் என்னை பார்த்ததும் ஆசுவாசமான உங்கள் சுவாசிப்பை சீராக்கியது எதுவென உணர்ந்த பின்னே புரிந்தது நீங்க சொல்லியதின் வலி " நீ கூட இருந்தா தைரியமா இருப்பேன் மா "  என்று.

என் முழு வாழ்விற்குமான பிழையை, உங்களோட அந்த கடைசி வார்த்தையிலிருந்து மீள முடியாமல் அந்த  குற்ற உணர்விலேயே இன்னமும் உழலச் செய்கிறது. மன்னிக்க இயலாத பிழை தான். இனி யாரிடம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாதெனும் மிகப் பெரிய பாடத்தை தண்டனையாய் கொடுத்துருங்கீங்கப்பா. மீளும் வழி அறியாமல் குற்ற உணர்விலேயே சுழல்கிறது மனம்.  ஆனாலும் மீண்டு வருவேன் ப்பா உங்கள் கனவுகளையும்  ஆசைகளையும் நிறைவேற்றி.

இப்படிக்கு
உங்க அன்பு மகள்...


Friday, April 3, 2020

பகடைக்காய்

காலம் ஆடும்
மாய ஆட்டத்தில்
நீயும் நானும்
பகடைகாய்களாகிறோம்.

தனித்து விழும்
நம்மை சேர்த்தே
விழுமியங்கள்
கணக்கிடப்படும்

உனை வெற்றியில்
நிரப்பிக்கொள்ளும்
பொழுதெல்லாம்
வலிந்து திணிக்கப்படும்
வெறுமை
பொழுதுகள்...

சேர்த்தே
உருட்டப்பட்டும்
பிரிந்து நின்(றே)றாலும்
வலுக்கூட்டிக் கொள்வோம்
ஒவ்வொரு முறையு
ம்...!!

Tuesday, March 31, 2020

பிறிதொன்றுமில்லை...

காலம் கொஞ்சமாய்
பரிசளிக்கிறது
விருப்பு வெறுப்பற்ற
சூழலை

தனித்து பயணிப்பதின்
இறுக்கம் தளர்த்த
நினைவோடு
போராடும்
மனதிற்கு,
உள் உணர்வே
பதிலாய் மாறிப்போகும்
விந்தை தான் என்ன..

என் மெளனங்கள்
எல்லாம் உன்னோடு
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்பதை நீ
உணர்வாயா...??

நீயற்ற பாதைகளில்
தனித்து நடக்கையில்
சூழ்ந்து கொள்ளும்
இருள், ஏன்
உன் வாசத்தை
பரப்புகிறது..??

இதற்கு மேலும்
நம் இடைவெளிகளில்
நிறைந்திருப்பது
ப்ரியங்கள் தானே அன்றி
பிறிதொன்றுமில்லையென
அறிவோம்..

Sunday, March 1, 2020

வாழ்வென்பது ஒரு முறை தான்

நேற்று இரவிலிருந்து, ஒரு பெண்ணின் தற்கொலைக்கு இரங்கல் பதிவொன்றை முகநூலில் பார்க்க நேர்கிறது. நேரடி பழக்கம் இல்லையென்றாலும் தோழியின் தோழி அவர். வயது 40யை தொட்டிருக்கக்கூடும். பதிவுகளின் மூலம் அவருக்கு ஒரு பெண்குழந்தையொன்று இருப்பதையும் அறிய முடிகிறது.இருந்தும் மரணத்தை நாடி சென்றிருக்கிறார்.

இப்பொழுதெல்லாம் தற்கொலைகள் அதிகம் காண நேர்கிறது. அதிலும் பெண்களே அதிகம். பொதுவாகவே 40யை கடக்கும் பெண்களுக்குள் நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களும், இறுக்கம் நிறைந்த சூழலும் மன அழுத்தத்திற்கு உந்தி தள்ளுகிறது. அந்தகால கட்டத்தை கடப்பதற்கு தான் பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டும். ஏனேனில் வாழ்வு ஒருமுறை தான். தற்கொலைகள் என்றும் தீர்வாகாது.

மன அழுத்தம், மனச்சோர்வு கூடும் பொழுதுகளில்,  வலிய திணித்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மிக பிடித்த வேலைகள் ஏதாவது ஒன்றில் முழு ஈடுபாட்டுடன். எண்ணங்களை மடைமாற்றம் செய்யுங்கள். முடித்தவரை தனிமையை தவிர்த்துவிடுங்கள். 

அலையடித்து கொண்டிருக்கும் அத்தனை எண்ணங்களையும் நினைவுகளையும் ஆழத்தில் அழுத்தி பேரமைதி ஒன்றை மெல்ல துணிந்து கைப்பற்றுங்கள். நெருங்கிய நட்போ/ உறவிடமோ அழுத்ததை பேசி பகிர்ந்து கொள்ளுங்கள்.

கலங்கி, சிதைந்து, குழம்பியிருக்கும் மனதிடம் ஒன்றை மட்டும் திரும்பத்திரும்ப கூறுங்கள். வாழ்தல் இனிது. வாழ்தல் அறமென்று. தோற்றுக் கொண்டே இருக்கும் மனதிடம் தான் அதிக வலிமையும் திடமும் நிறைந்திருக்கும். 

பேரமைதி கொள்ளும் மனதிடம் தான், பெரும் அச்சம் இருக்கும். அது சுழற்றி போடும் பெரும் புயலொன்றை சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றும்.புயல் ஒன்றை சுமக்கும் அதே மனதினால் தான் மெல்ல இதமாய் வருடி செல்லவும் முடியுமென்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

தேவைப்படின் நல்ல மனநல ஆலோசகரின் அறிவுரை பெறுங்கள். உங்கள் வலிகள், தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளுங்கள். ஹார்மோன் இம்பேலண்ஸ் ஆக கூட இருக்கலாம் தெளிவு பெறுங்கள். 
  
நடுத்தரவயதை நெருங்கிக் கொண்டிருக்கும் / தொட்டிருக்கும் பெண்களின் தோழமைகளே, உறவுகளே அவர்களின் பேச்சிற்கு கொஞ்சம் உங்களது செவிகளை மட்டும் கொடுங்கள். அவர்களுக்கு ஆறுதலோ அரவணைப்போ கூட தேவைபடுவதில்லை கொஞ்சம் செவி சாய்த்திருப்பதே போதுமானது.

இதனை சொல்ல நான் ஒரு மருத்துவராகவோ/ மனநல ஆலோசகராகவோ இருக்க வேண்டியதில்லை. அறிவுரை தானே யார்வேண்டுமானாலும்  அள்ளி வீசலாம் என்ற மனநிலையும் இல்லை. நானும் நாற்பதில் பயணப்பட்டு கொண்டிருக்கிறேன். ஏன் இது எனக்கு நானே கூறிக்கொண்டதாக கூட இருக்கலாம்.

ஆம்..!! வாழ்வென்பது ஒரு முறைதான்.

Saturday, February 29, 2020

வீடென்பது...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு பெருங்கனவு சொந்தமாய் ஒரு வீடு. காலமும், சூழலும். வசதியும் வாய்ப்பிற்கும் ஏற்ப தங்களுக்கென ஒரு கூட்டை ஏற்படுத்திகொள்கின்றனர் வீடென பெயரிட்டு. நடுத்தர வர்க்கத்தினரோ தனது சம்பாத்தியத்தின் ஒரு பெரும் பகுதியை சொந்த வீட்டிற்காய் செலவு செய்கின்றனர் அல்லது சேமிக்கின்றனர். அதற்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரே பதில் வாழ்க்கையில் ஓடுவது  பின்னாளில் அமைதியாக ஓரிடத்தில் இருந்து ஓய்வெடுப்பதற்கு தான் என கூறுவதும் உண்டு.ஏறத்தாழ வாழ்க்கையின் இளமைகாலம் முழுமையையும் முதுமையின் ஓய்வுக்காக ஓடுவதிலேயே தொலைத்திருப்பதின் முரண் தான் புரியாதது.

தான் பிறந்ததிலிருந்து திருமணம் முடிக்கும் வரை பார்த்திடாத ஒரு நகரத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்த பார்வதி அக்காவிற்கு வீடுகள் ஒன்றன்மீது ஒன்று இருந்ததே பெரும் வியப்பாக இருந்தது. தன்னை சுற்றியும் தன் கிராமமே இருப்பது போல் ஒரு உணர்வை தந்ததாய் சொல்லிக்கொண்டாள் திருமணமான புதிதில் தனது சொந்தங்களிடம். நிதர்சனமோ வெகு விரைவில் முகத்தில் அறையத்தொடங்கியது. பூட்டப்பட்ட கதவின் பின் இருக்கும் நான்கு சுவர்கள் மட்டும் தனது வீடு என சுருங்கிக்கொள்ளும் நகரத்து வாழ்கை ஏனோ அலுப்பேற துவங்கியது பார்வதி அக்காவிற்கு.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் , நகரத்துக்கு மிக அருகாமையில் இடம் வாங்கி புதிதாய் ஒரு வீட்டை கட்டத்துவங்கினார்.விசாலமான இரு அறைகளும் , அடுப்பங்கரையும், பூஜை அறையும் உள்ளும் புறமும் இரண்டு கழிப்பறை உட்பட பார்த்து பார்த்து கட்டப்பட்டது. சொந்தங்கள் தங்கிக்கொள்ள  தனி அறையொன்றும், பூந்தோட்டமும்,காய்கறி செடிகளுமாய் அந்த வீட்டை நிரப்பி இருந்தனர். சுற்றிலுமாக நான்கு புறமும் ஆளுயர சுற்று சுவர் எழுப்பி, இடம் தான் மாறிதே தவிர்த்து பார்வதி அக்காவிற்கு நான்கு சுவர் மட்டுமே வீடு என்றானது.

சுவர்களும், ஜன்னல்களும், கதவும் மேற்கூரையும் நிலைப்படிகளும்  மட்டுமே வீடென்றாகிவிடாது. அவற்றிற்கு உயிர் கொடுக்கும் மனிதர்கள் இல்லாவிடில்.அவ்வாறு மனிதர்கள் தரும் உயிர்ப்பு ஆண்டாண்டிற்கும் அந்த வீட்டிற்கு ஒரு பெயரை உருவாக்கித்தரும். அது தேடித்தேடி தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பெயர்  சூட்டுவது போன்று தன மனக்கனவில் கருக்கொண்டு உருவாகி, ஈன்றெடுத்தார் போன்ற தனது கனவு வீட்டிற்கு பெயர் சூட்டி மகிழும் வழக்கமும் ஆங்காங்கே உண்டு அல்லது அதுவே ஒரு காரணப்பெயரை சுட்டிக் கொள்ளும் சூழலும் அமைவது உண்டு.

மின் வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்த சதாசிவத்திற்கு பணி நிறைவிற்குள் தன் மனைவியின் எண்ணப்படி ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பதே அவரது கனவு. வீடு எப்படி இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அது குறித்த எண்ணமும் வடிவமுமோ அவரிடம் கிடையாது. அவருக்கு நான்கு பிள்ளைகள் அவரவர் நன்கு படித்து வெளியூரிலும், வெளிநாட்டிலுமாக குடும்பத்தோடு  செட்டில் ஆகிவிட்டனர். சதாசிவமும் அவரது மனைவியும் மட்டுமே உள்ளூரில். பணி ஓய்விற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவியின் ஆசை படி வீடு ஒன்றை கட்டினார். மிக எளிமையான வீடு. இரண்டு அடுக்கைக் கொண்டது. அதில் நான்கு  மகனுகளுக்கும்  ஒவ்வொரு அறை என அவ்வீடு அமைந்திருந்தது. சதாசிவத்தின் மனைவி பெரும்பாலும் அடுப்படியே கதி என்றிருப்பதால் தனக்கு அது தன்னுடைய அறை என கொண்டிருந்திருப்பாரோ.. கிரகபிரவேஷத்திற்கு முதல் நாள் ஒரு கிரனைட் கல்லில் பெயர் ஒன்று பொறித்து வந்து அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார்..அதில் "வசந்தம் இல்லம்" என தனது மனைவியின் பெயரை பொறித்திருந்தார். காதல் மனைவியின் கனவு இல்லத்திற்கு. அவ்வீடு அவரது நேர்மையை மட்டுமே பேசியது.

ஒவ்வொரு வீடும் ஏதோவொரு நினைவை சுமந்து கொண்டும், பிரித்தறியா பெயரைத் தாங்கியும் நிற்கிறது. அந்த வீட்டில் வாழும் மனிதர்கள் அந்த வீட்டோடு ஒரு பினைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும்,ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் சில நினைவுகளை/ நிகழ்வுகளை வீட்டின் மீதும் , மனதோடும் பூட்டியும் கொள்கின்றனர்.ஒரு வீட்டின் அடையாளம் என்பது  அந்த வீட்டின் வடிவமோ, அழகோ, வெளிபுறத்தோற்றமோ நிர்ணயிப்பதில்ல. காலங்காலமாக அங்கு இருந்த / வாழ்ந்த மனிதர்களாலேயே அறியப்படுகிறது. அந்த தெருவிலேயே பெரியதாக அப்போது தான் கட்டப்பட்ட வீட்டிற்கு "பங்களா வீடு" எனவும், நிறைய , அடர்ந்த மரங்களையும் , செடிகளையும் கொண்ட வீட்டை " தோப்பு வீடு" எனவும், முதல் தலைமுறை கட்டிய வீட்டை, இளைய தலைமுறையினர் " பெரிய வீடு" எனவும் அழைப்பதுண்டு.

எல்லாவற்றையும் விட அந்த வீட்டில் வசிப்பவர்களின் குணங்களை எடுத்து சொல்லும் படியும், அவர்கள் செய்யும் தொழில் / பணி சார்ந்தும் பெயரொன்றையும் சூட்டிக்கொள்ளும் அந்த வீடு.


தேவியும் அவரது கணவரும் ரிடயர்மென்ட்டுக்கு பிறகு, அத்தெருவில் வீடு வாங்கி குடியேறினர்.பணி ஓய்வு வாழ்க்கையை பரிபூரணமாய் மகிழ்ந்து வாழ்ந்தனர். மாலையானதும் நடைபயிற்சியும், வீட்டின் திண்ணையில் அரட்டை கச்சேரியுமாய் அமர்களப்படும்.  இரவு வரை சிரிப்பும் பேச்சு சத்தமுமாக இருக்கும். தெருவிலிருப்பவர்கள் அந்த வீட்டை "க்ளப் ஹவுஸ் " பெயரிட்டனர். திடீரென தேவியின்  கணவர் காலமானதும், தேவிக்கு தான்  நிற்கதி ஆகிவிட்டோம் என அந்த வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தன் கணவர் இருப்பது போன்று பேசிக்கொண்டே இருப்பார் சுவரப்பார்த்தபடியே.
அரட்டை அடிக்க அக்கம்பக்கத்தினர் வருவதும் குறைந்து போய் நின்று விட்டது.மாலையானதும் யாரும் அத்திண்ணையில் அமராதவாரு தண்ணீரை ஊற்றி விடுவார். அப்டியே யாராவது நின்றாலோ அமர முற்பட்டாலோ பெரும் குரலில் கத்தி யாரையும் அவ்வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் கூச்சலிட்டப்படியே இருப்பார். சில நாட்களில் அங்குள்ளவர்களுக்கு பழகிவிட்டது. இப்போது யார் கேட்டாலும் அது " கெழவி வீடு" என்கின்றனர்.

 ஒவ்வொரு வீடும் சில ஞாபங்களையும், வைராக்கியங்களையும். சில வெற்றிகளையும் தன் சுவற்றுக்கு பலம் சேர்த்து கொள்கின்றன. வெறும் கல், மணல், செங்கற்களால் உருவானவை அல்ல கனவு ,ஆசை, லட்சியம், அடையாளம் என அனைத்தின் கலவையாகவும் உயர்ந்து நிற்கும் வீடு.

வீடு கட்டுவதை தீர்மானித்தவுடன் அதற்கு ஆகும் செலவு, வரைபடம், டைல்ஸ், இதர தேவையான பொருட்கள் பற்றி ஆயிரமாயிரம் கலந்துரையாடல் நடக்கும் குடும்பத்தாரோடு. ஆளுக்கொரு கருத்து தெரிவிப்பர். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமாய் எழும்பி நிற்கும் எண்ணங்களின் தூண்களாய்..  ஆசைகளின் வடிவமாய்,என்றோ எங்கோ பார்த்த வீடொன்றின்  முகப்பு கதவை நினைவூட்டியும், பால்யத்தில் ஏறித்தாவி ஓடி விளையாண்ட திண்ணையும், எத்தணை முறை விழுந்து எழுந்தாலும் சிறு கீறலும் ஏற்படுத்தாத ஆத்தங்குடி கை கல்லும், முட்டையும், தேங்காய் எண்ணெய்யையும் குழைத்து கலவையாய் பூசி சுவற்றை பளபளவென மின்னச்செய்ததாய் சொல்லும் ஆச்சியின்  வார்த்தைகள் காதுகளில் ஒலிக்கச்செய்யும், உத்திரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியதும் நினைவுகளில் வராமல் தடுக்க இயலாதது.


 திட்டமிட்டபடி கனகச்சிதமாய் வெகுசிலராலே கட்டி முடிக்க முடியும். சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களின் கனவு இல்லத்திற்கு அழகூட்டி கொள்வோரும் உண்டு.  இப்போதெல்லாம் நிறைய பில்டர்ஸ் சகாயவிலையில் வீட்டைகட்டி தருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ அல்லது தனித்தனி வீடுகளாகவோ,  உடனடியாக குடிபுகும் வகையில் வீடுகளை கட்டியும் விற்பனை செய்கின்றனர்.

வீடென்பது உயிரற்றவை  அல்ல, வீட்டிற்கு  சில உணர்வுகளையும் , நினைவுகளையும் கொடுத்து நம் உயிரோடும் உணர்வோடும் கலந்தே இருக்கிறது. பால்யத்தின் ஞாபங்களை மீட்டெடுக்கும் பூர்வீக வீட்டை   நினையாதோர் தான் யார்?? காலத்தின்  சுழற்சியில் கை மாறி , மீறி போகும் பரம்பரை வீட்டை எப்படியாவது மீண்டும் கைக்கொள்ள மனம் தான் ஏக்கம் கொள்ளாமல் இருந்ததுண்டா..??  தலைமுறையின் முதல் வீடு என்பது பெரும் கனவொன்றை சிறகில் சுமப்பது போன்றதாகும். வலிமைமிக்க கனவொன்றின்.அஸ்திவாரத்தை அவ்வளவு எளிதில் அசைத்துபார்த்திட முடியாதது..

ஒவ்வொருவரின் மனதில் அடிக்கல் நாட்டியிருக்கும் கனவு இல்லத்திற்கான  அஸ்திவாரத்தை போட துவங்கினால், கனவு கைகூடும் நாள் வெகுதொலைவில் இல்லை. நம் உணர்வோடு கலந்திருக்கும் கனவு பொதியொன்றிக்கு அழகியதொரு பெயர் சூட்டியும் மகிழ்ந்திருப்போம்.
வீடென்பது வீடு மட்டுமேயல்ல..!!