ஒருவர் எத்தனை வயது வரையிலும், உழைக்கலாம்??
அது அவரவர் தகுதி சார்ந்தது..பொதுவாக நடுத்தர வர்க்கம்,அப்பர் மிடில்கிளாஸ் மக்கள் எல்லாம் தன் மகன் வேலைக்கு செல்லும்வரையிலும் என்பதாக இருக்கும்.. சரி...ஏழ்மையில் இருப்போருக்கு.., வறுமையின் காரணமாக தன் தள்ளாத வயதிலும் உழைத்தே வாழ்கிறார் இப்பெரியவர்... இன்று நான் கண்ட/ வியந்த மாமனிதர் என சொல்லலாம்..
35 - 40 வயதில் உட்கார்ந்த இடத்திலே வேலை பார்த்துவிட்டு வந்து தான் என்னவோ வெட்டி முறித்து களை பறித்து வந்தது போல் "சீன்" போடுபவர்கள் மத்தியில், நிஜமாகவே வெட்டி,முறித்து,களை பிடுங்கி நேர்த்தியாக பாத்தி கட்டி தண்ணீர் தெளித்து செல்கிறார்.
மாதமொரு முறை வந்து அம்மாவீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டம் சுத்தம் செய்து செல்வார். கொடுக்கும் காசுக்கு அதிகமாகவே உழைப்பை போடுவார். மழை பெய்து கொண்டே இருப்பதால், இன்று வேலையில்லை என கூறி பத்து ரூபாய் கொடுத்து இன்னொரு நாள் வாங்க தாத்தா வேலை இல்ல இன்னிக்கு எனக்கூறியதும், ஏதோ அரை மனதாக சென்றவர் தயங்கி.. "சாப்பிட ஏதும் இருக்கா மா" என கேட்க,காலை உணவும் இல்ல மதிய சமையலும் ஆகாத நிலையில் எதும் இல்லை எனக்கூறிட, பின்பு மனம்கேக்காமல் அம்மா தோசை ஊத்தி தரட்டா தாத்தா என கேட்க சரி நான் அந்த பக்கமா உட்கார்ந்திருக்கறேன் என சொல்லிவிட்டு எதிர்த்த இடத்தில் அமர்ந்து கொள்ள சென்று விட்டார். தோசை ஊத்தி எடுத்தகொண்டு போய் பார்த்தால் அங்கிருந்த களைஎல்லாம் பிடுங்கி போட்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்
இந்த வயதிலும் உழைத்து தான் உண்ண வேண்டும் என எண்ணும் அவரது எண்ணமும் நேர்மையும் என்னை மிகுந்த வியப்பிலாழ்த்தியது..
" தாத்தா, தோசை ஊத்திட்டு வந்துட்டேன்.வாங்க சாப்பிடுங்க அது ஆறிடும்"
"இரு தாயி.. இந்த ரெண்டு பில்ல புடுங்கி போட்டு வர்றேன்.. அரகுறையா வேலய விட்டு வந்தா சோறு இறங்காது..இத வந்தடறேன் நீ போ.. வெய்ய அடிக்குது பாரு...
-சிறிது நேரம் கழித்து...
"தாத்தா பசிக்குதுன்னு கேட்டீங்கன்னு தானே தோசை ஊத்திட்டு வந்தேன்., அது ஆறிட்டு கிடக்கு வந்து சாப்பிட்டு வந்து வேலை பாக்கலாம் ல...
"இதாருடா இவ..கண்ணு வேலை பாக்கசொல்ல பசி வராது..நீ சோறு போடறன்னு நான் வேலை பாக்க கூடாது..வேலைய நேர்மையா செஞ்சாதான் திங்கற சோறு கூட உடம்புல ஒட்டும்.. சொங்கோடம் பாளம் முழுக்க வேல செய்யறே... செங்கோடன்ட்ட விட்ட வேல சரியா இருக்கும்ன்னுட்டு சொல்லுவாங்க..அந்த சின்ன சொங்கோடம்பாளத்துள மேக்க இருக்கற கவுண்டரு ஊட்ல இன்னுமும் மட்டை வாங்க(தேங்கா மட்டை உரிக்க) போயாறேன்..
வேலையில்லீன்னு சொன்னீயே எம்முட்டு பில்லு கிடக்கு..அதெல்லாத்தியும் ஓரமா எடுத்து போட்டு வாரேன்.. நீ போத்தா உள்ள வேலை பாக்கையில வந்து சோறு திங்க கூப்பிட்டுகிட்டு... என கூறிவிட்டு தன் வேலையை தொடர்கிறார்..
காலைல 4 மணிக்கு எழுந்து,வாசல் பெருக்கி, பாலை காய்ச்சி,காபி போட்டு சமைத்து,பையனை ரெடி பண்ணி சாப்பிட வெச்சு ஸ்கூல்க்கு அனுப்பி வீட்டுகாரருக்கு சாப்பாடு போட்டு தண்ணி எடுத்து கொடுத்து ஆபீஸ் அனுப்பிட்டு காய்கறி வாங்கிட்டு என் வேலைக்கு உன்டான பிரின்டிங் யூனிட் டிஸ்கஷன் முடிச்சு அம்மாவுக்கு வேனுங்கற மளிகை சாமான் வாங்கி கொடுத்துட்டு, காலைல இருந்து ஒரே வேலைன்னு அலுத்து கொள்ளும் என்னை பார்த்து நானே வெட்கிக்கொள்கிறேன்..!! அந்த பெரியவர் முன்பு நான் செய்வதெல்லாம் ஒரு வேலையே இல்லையென்று..!!