Sunday, April 26, 2020

எவர் பொருட்டும்...

எல்லோருக்குமான ஆசை என்பது, அவரவர் நிலையிலிருந்து மாறி நான் அப்படியாக இருந்திருக்கலாம்/ இவ்வாறு இருந்திருந்தா என ஒரு மாறுபட்ட எண்ணங்கள் மனதினுள் ஓடாமல் இருந்திருக்க முடியாது. அப்படியான எண்ணங்களையும் ஆசைகளையும் முற்றிலும் நிராகரிக்காமல் சிறிதளவேனும் தம் ஆசையை/ விருப்பத்தை  தனக்கு சாதகமான சூழலில் நிறைவேற்றிக் கொள்வோரும் உண்டு. நிஜத்தில் பார்க்கின்ற மனிதர்களுக்கு கொஞ்சமும் பொருந்திப் போகாத ஒரு புனைவு ஒன்றையே கதாபாத்திரங்களாக வடிக்கத் துடிகின்றனர் எழுத்தாளர்கள் எனலாம். ஆனால் "வண்ணதாசன்" அவர்களின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் எப்படி எப்போதும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவே படைக்கப்படுகினறனர் எனும் எண்ணம் தோன்றாமல் இல்லை. அவர் சந்திக்கும் மனிதர்கள் அப்படியானவர்களா அல்லது அப்படிப்பட்ட நேர்மறை மனிதர்களை மட்டுமே அவர் சந்திக்கின்றாரா எனும் கேள்வியோடு அவர் எழுத்துகளை வாசிக்கத் துவங்குகையில்,  " தவிப்பிற்கும், விருப்பத்திற்கும் இடையில் தான் உறவும் வாழ்வும் கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்த விதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்த சிறுகதைகள்" என தன் தரப்பு நியாயங்கள் முன் வைத்து எழுதியிருக்கிறார் நூல் குறித்த முன்னுரையில்.

வாசிப்பதற்கு ஏதுவான மொழிநடையில், அருகிலமர்ந்து சிநேகமாய் புன்னகைது வாஞ்சையோடு பகிர்வது போல இருக்கும் ஒவ்வொரு கதையும். கதையின் ஓட்டத்தில் நம் மனது சற்றே அசைத்துப் பார்க்கத் தூண்டும் எதிர்மறை கருத்துகளாலும்/ எண்ணங்களாலும்  சூழப்பட்ட நமக்கு இதில் திருப்பமாக யாரேனும் வரக்கூடும் என எண்ணும் நம் மன ஓட்டத்திற்கு, காலமும் சூழலுமன்றி மனிதர்கள் ஒருபோதும்  எதிர்மறையானவர் அல்ல என்பதை தம் எழுத்தில் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

ஊரில்  ஒரு வீட்டின் முன் இருக்கும் ஒரு சிலையினை வைத்து ஒரு கதை புனைய யாருக்கு தோன்றியிருக்கும், சிலையாகி போன நினைவுகளுக்கு, கொஞ்சம் ஞாபக வர்ணம் பூசி நினைவுகளில் மீட்டி விடத்தான் எவ்வளவு பேராவல் புகுகின்றன ஒவ்வொருவருக்கும். இக்கதையை வாசித்து கொண்டிருக்கையில் பால்யத்தில் கண்ட ஒவ்வொரு வீட்டின் முகப்போடும்  பொறுத்திப் பார்த்து நம் ஞாபகங்களை மீட்டெடுத்திருப்போம் . சிதிலமடைந்து, பொலிவின்றி இப்போதைய நிலையில் இருக்கும் எதுவும், நினைவில் அப்படியே தான் இருக்கின்றன எத்தனை ஆண்டுகளானாலும். அதன் வர்ணங்களோ, பூச்சுகளோ உதிர்வதேயில்லை.

பறிக்கும் பூக்களை காட்டிலும் உதிர்கின்ற பூக்களுக்கு எவ்வளவு மணம் நிறைந்திருக்கும் என்பதையும், கட்டாயப்படுத்துதலுக்கும்,  தன்முனைப்பிற்கும் இடையேயான சக்தி அது தான் என உணரமுடியும். ஒரு விஷயத்தை எதன் நோக்கில் யாரிடம் எப்படி கையாள்வது என யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு நொடியைக் கூட தன்னியல்பில் வரும்  சொற்களை ஆற்றில் உருண்டோடிவரும்  கூழாங்களாய் உருவகப்படுத்த அவரால் முடிகிறது. "சொல்லை இடைவெளியும், இடைவெளியைச் சொல்லும் கூழாங்கல்லாய் உருட்டி ஈரமணலில் ஒதுக்கும் ஆறும் அழகு. கரையும் அழகு" என முடித்திருப்பார்.

பூக்களின் நறுமணத்தைப் போல சொற்களின் வாசனையையும்  உணர முடியும். காணத் தவறிய மலர்களின் வாசனையை தேர்ந்து நுகர முடியும். குறிப்பிட்ட வீதியில், ஒரு வீட்டின் அடையாளமாய் மருதாணி செடி பூத்திருக்கும் வாசனையை சொல்லியிருப்பார் யாரும் தன் நினைவுகளில் கொண்டு வர இயலாததொரு மணமாய் அது நம்மை சுற்றி ஆக்கிரமிக்கத் தொடங்கும். அந்நேரத்தில் தாமரைப்பூவின் மனம் பற்றி விவரிக்கத் தொடங்கியிருப்பார் யாராலும் சொல்ல முடியாததொரு வாசனை அந்த தாமரைக்கும்.

வேப்பம்பூ பூத்து உதிர்ந்திருக்கும் சாலையில் காலை நடை என்பது மெல்ல சாகக்கொடுத்தலுக்கு சமமாய் இருக்கும் என்றிப்பார். அத்தனை பூக்களையும் வாழ்க்கையில் ஒரு நொடியேனும் கையிலேந்தி வருடி முத்தமிட்டு அதன் வாசனையை நுகர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

ஒரு சிறுகதையில், மலர்களின் மணத்தையும், மனிதர்களின் மனதையும் ஒன்றாய் நுகர கொடுக்கும் பாங்கு அழகியலின் ருசி எனலாம். தானாய் உதிர்கின்ற மலர்களைப்போல, மனித மனம் உதிர்க்கும் சொற்களின் மணத்திற்கு எத்தனை விதமான  நறுமணம். அத்தணையிலும் அதீத வீரியம் மிகுந்து காணப்படுகிறது. அப்படிப்பட்டது தான் செல்லையாவின் மனமும் அத்தனை வாசனை மிகுந்தது என சொல்கிறார். அங்கு அதில் நேர்மையின், நம்பிக்கையின் பொறுப்பின் நறுமணத்தை வாசிக்கையில் நுகர முடியும்.

மனித மணம் கண்ணாடியை விட நுட்பமாய் கையாள பட வேண்டுமென்பதை சூசகமாய் விவரிப்பது எவ்வளவு நாசூக்கானது. அதிலும் பதின் வயது பிள்ளையின் மனதை கைகொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே. அறிவுரைகளை வெறுக்கும் மனம் அவர்களது, அறிவுரையென எண்ணாத அளவிற்கு நமது பேச்சும், செயல்களும் சில நேரங்களில் புரிதல்களும் அவர்களை நோக்கி இருக்கவேண்டும். செல்லையாவின் தந்தையின் பொருட்டு அவனிடம் பேசி கொண்டிருக்கையில் தேர்வில்  தன் மகன் தோல்வியுற்றதை தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக நினைக்கும் தந்தைக்கு, எல்லா தண்டனையும் ஒரு இடத்துல முடிஞ்சு போகுமில்லையா ?? எனும் மகனின் பதிலில்  அத்தனைக்கும் தீர்வாய் விடையளித்திருப்பார். இரு மனங்கள் மோதிக்கொள்ளும் போது உடைந்து போக வேண்டியதில்லை என்பதை,கண்ணாடி என்றால் எளிதில் உடைந்து போக வேண்டும்  என்று கட்டாயமா என்ன?? என முடித்திருப்பதில் மனதை கண்ணாடியோடு ஒப்பிட்டு இருப்பார்.

பெரும்பாலும் இவரது கதைகள் மனித மனங்களை பற்றி பேசக்கூடியவைகளாகவே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கத் தவறியவைகளாகவே இருப்பது தான் வியப்பு. கால சுழற்சியில் வாழ்கையின் பெரும் பரபரப்பு மிக்க ஓட்டத்தில், சிதறிவிழும் சாமான்ய மக்கள் இவர்கள். தன் இயல்பை தொலைக்காத ஒரு அச்சில் வார்க்கப்பட்டவர்கள். மிக எளிய மனிதர்கள். இந்த யுகத்தின் வேகத்திற்கு, அழுத்தத்திற்கு ஒப்பு கொடுக்காதவர்கள். மனிதர்களாகவே வாழ படைக்கப்பட்டவர்கள்.

மனங்களின் இடவல மாற்றங்களுக்கு மனிதர்கள் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் இயல்பு என்பதை இருவேறு வகைகளாக மாறக்கூடியது அல்லது மாற்றக்கூடியது. திருமணத்திற்கு முன் பின் என மாறுபடும். நிலைக்கண்ணாடியில் தோன்றும் முகம் தனதானதா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவளுள் மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

மீனா, தஞ்சைக்கு தனது தோழியும்  சகோதரியுமானவளின் வீட்டிற்கு திருமணத்திற்கு பின்பும் தான் மட்டும் தனித்து வருகிறாள். கொஞ்சமும் தன்னியல்பை தொலைக்காதவளாய் இருப்பது தோழிக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. முகம் முழுக்க பவுடர் போடுவதும், கண்ணுக்கு மைத்தீட்டி கொள்வதும், மல்லிகையோடு கனகாம்பரமும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென கேட்பதுவும்  சத்தம்போட்டு சிரிப்பதுவும்.,பெரிய கோவில் வளாகத்தில் மெய் மறந்து வேடிக்கை பார்ப்பது என துளியும் அவள் மாறவில்லை என்று தோழியின் கண்ணோட்டத்தில் கதை நகர்வதாக  இருக்கும். ஒரு பெண்ணின் மனப்பாங்கில் ஆண் (எழுத்தாளர்) சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களும் பெண் மனதிற்கு ஏற்புடையதாகவே இருக்கும்.இப்படியாக மீனாவுடனும், செல்லையாவுடனும் சில காலம் அவரின் சிறுகதையில்          வாழ்ந்துவிட்டு வரலாம் 

வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர், பணி நிமித்தம் காரணமாக மாற்றலாகி போகும் இடங்களில் காணும் மனிதர்களின் வாழ்வும். அவர்களின் தேடலுமே இவருக்கான கருத்தும் தேர்வுமாகவும் சில நேரங்களில் பாடமாகவும் போதனையாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. தான் பயணித்த தூரம் குறைவு, சந்தித்த இடங்களும் மனிதர்களும் குறைவு என அவர் கூறிக்கொண்டாலும், எதிர்படும் மனித முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகை காட்டிச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு உலகின் மூச்சும் பெரும் வியப்பும் அவருக்கு அலாதியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன. மனிதர்களின் மிக நுண்ணிய உணர்வுகளையும் கண்டு பதிவு செய்யும் அவரது மொழி பிசிறற்றது. வாழ்க்கைக்கென்ன அதுபாட்டுக்கு  என்னென்னவோ சொல்லித்தான் செல்கிறது. வாழ்கை ஒரு அற்புதமான கதை சொல்லி, அதை ஏற்பதும் விடுப்பதும் அவரவர் விருப்பம். அவரின் சிறுகதை ஒவ்வொன்றும் தான் கண்ட மனித முகங்களின் மீதான வரிகளை எவ்வாறெல்லாம் வாசிக்கத் துவங்கலாம் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கும். அதனடிப்படையில்  அணுகத்துவங்கினாலே போதுமானது.

அன்றாட தேவைக்கு மேல் அல்லாமல் சம்பாதிக்கும் சாமான்யனின் வாழ்வில் இருக்கும் மகிழ்ச்சி என்பது கோடி கோடியாய் பொருளீட்டிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை.  அந்த சாமான்யன் எதிர் கொள்ளும் ஒர் நாள் என்பது சவால்களும் சங்கடங்களும் நிறைந்து இருப்பினும் அந்த மனித முகத்தில் தெரியும் நிம்மதி வரிகளை வாசித்திட முனைபவர்களாலேயே வாழ்வை அதன் போக்கில் ஏற்று நடந்திட முடியும் என்பதை வண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு சிறுகதையும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

வாசிப்பின் மீது அவ்வளவு நாட்டம் இல்லையெனினும், வாசிக்கும் புத்தகம் நம்மில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புபவள் நான். குறைந்த அளவில் தான் வாசித்திருக்கிறேன். ஏனோ எனக்கு ஒருவரை மட்டுமே மிகப்பிடித்த எழுத்தாளர் என்றோ, பிடித்த புத்தகம் இது ஒன்று தான் எனவோ எதையும் குறிப்பிட்டு கூறிட இயலாது. ஏனெனில் ஒவ்வொரு புத்தகம் ஏதோவொன்று உணர்த்துகிறது. நம் பார்வை கோணத்தை மாற்றுகிறது. நம் இயல்பை மாற்ற சரி செய்ய முனைகிறது. அவ்வகையில் என்னுள் சில மாற்றங்களையும், பார்வை கோணங்களையும் சரி செய்ய வண்ணதாசன் அவர்களின் எழுத்து துணை நிற்கிறது என்றால் மிகையாகாது.






Tuesday, April 7, 2020

அவனருகில்...

அன்றொரு நாள்
இதே தினத்தில்
நான் இருந்தேன்
அவனருகில்..

வெம்மை கூட்டும்
கோடையும் கூட
இதமாய் வருடியது
விரலிடுக்குகளில்

கண் சிமிட்டிக்
கொண்டது
வெட்கம் பூத்த
வார்த்தைகள்..

தொடக்கமும்
முடிவுமறியாது
உருண்டோடத்
துவங்கியது
ஒரு பயணம்
மனதினுள்...

விட்டுவிட
இயலாது
அத்தனையையும்
சேகரிக்கிறது
நினைவுகளாய்
காலம்..

அன்றொரு நாள்
இதே தினத்தில்
அவன் இருந்தான்
என்னருகில்...!!
எதிர்பாரா நட்பு

சூழலும் சந்தர்ப்பமும்

விதைத்த செடியில்

மொட்டுவிட துவங்கியது…

எளிமை கண்டு வியக்க

எளிதாய் உரு கொண்டு

பூத்தது..

ஒருவருக்குள் ஒருவரானோம்

அது அழைத்து சென்றது

வட்ட பாதையில்

உன் பின் நானும்

என் பின் நீயும்

தேடிக்கொண்டிருக்கிறோம்

தொலைத்தது நம்மையே

என்றான பின்னும்..!!

Monday, April 6, 2020

அப்பாவிற்கு ஓர் கடிதம்...


அன்புள்ள அப்பா,

நலமோடு இருப்பீர் என நம்புகிறேன். நலமோடும் உங்கள் நினைவோடும் வாழும் மகளின் முதல் கடிதம். இது வரை உங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய சூழல் வராதவாறு உங்க அருகிலேயே, அரவனைப்பிலேயே வளர்த்து விட்டீர்கள். முதன் கடிதம் என்பதால், எதை சொல்வது எதை விடுப்பது என்பதில் தான் எத்தனை தடுமாற்றம். உங்களிடம் பேசுவதற்கு எந்த தடுமாற்றமும் வந்ததில்லை இது வரை ஆனால் ஏதோ ஒரு குற்ற உணர்வில் சிக்கித் தவிக்கிறேன் உங்களிடம் எதுவும் மறைத்ததில்லை. உடனுக்குடனே பேசி தீர்த்த விஷயங்கள் தான் எத்தனையெத்தனை. இப்போது உங்கள் அருகாமையை இழந்த பின்னரே தெரிகிறது, எவ்வளவு அனுக்கமாய் ஆதரவாய் இருந்தீர்கள் என்பதை. அந்த காலனுக்கு தான் அப்படி என்ன அவசரம் இருந்திருக்கக்கூடும். திசை அறியாத காட்டில்  கை உதறி , தனிமையில் என்னை விட்டு சென்று விட்டீர்கள்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் பெரும் துயரங்களையும் எளிதில் கடக்க சொல்லிக்கொடுத்திருந்தீர்கள். எதை கண்டும் அச்சம் கொள்ளாமல் துணிவுடன் எதிர் கொள்ள பழக்கப்படுத்தியிருந்தீர்கள். ஆண் பெண் பேதமற்று பழகவும்,  வாழவும் கற்று கொடுத்தீர்கள். " கொடிது கொடிது இளமையில் வறுமை" எனும் கூற்றை உடைத்து மகிழ்வோடு வாழ்வை அதன் போக்கில் ரசித்து ஏற்க கற்றுக்கொடுத்தீர்கள். இப்போதெல்லாம் எதையும் இழந்தாக வருத்தப்படுவதேயில்லை உங்களை தவிர... ஏனோ மனம் உடைகிறது ப்பா.. நீங்கள் இல்லாத இந்த நாட்கள் அவ்வளவு இயல்பாய் இல்லை..

இப்போதெல்லாம் உங்களை மிகவும் இழந்ததாக வருத்தப்படுகிறான் மகன்(விஷால்) இன்னும் கொஞ்சம் காலமாவது உடனிருந்திருக்கலாம்.. உங்களைப்போல அறிவுரையோ தன்மையாய் எடுத்து சொல்ல நண்பனைப்போல யார் இனி எனக்கு கிடைக்கபோகிறார்கள் என சில நேரம் வேதனையோடு பகிர்ந்து கொள்கிறான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவா புரிந்து கொண்டுள்ளான் புகைப்பதினால் ஏற்படும் ஆபத்து பற்றியும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நன்றாகவே அறிந்துகொண்டுள்ளான்.புகை பழக்கத்தினால் உடலில் சேர்ந்த நிகோடினின் அதி தீவிர தாக்குதல் குறித்து அச்சம் கொண்டுள்ளான். நானற்ற, உங்க இறுதி நாட்களை  உங்கள் அருகிலிருந்து உங்கள் துயர்களை கண்ணுற்றவன். அதனை என்னிடம் பகிரும் போதெல்லாம் அவனிடம் ஏற்படும் பதைபதைப்பும், எந்நேரமும் விழுந்து விடத்தயாராய் காத்திருக்கும் கண்ணீரில் காண்கிறேன் நீங்கள் அவனுக்கு சொல்லிக்கொடுத்த உறுதி மனப்பான்மையை.

 எந்த விதத்திலும் ஈடுசெய்ய இயலாத இழப்பை எனக்கு நீங்கள் அளித்திருப்பதை கண்ட, அவனுக்கு கொஞ்சம் கோபம் உங்கள் மீது இருக்கிறது. அதனை நான் சோர்வுறும் தருணங்களிலெல்லாம், உடன் ஆறுதலாய் இருந்து அணைத்து செல்கிறான் தந்தையுமானவனாய். என் மன அழுத்தங்களுக்கு , புரிதல் எனும் மருந்திடுகிறான் உங்களை போலவே.

இந்த கடிதம் எழுதிகொண்டிருக்கும் நேரம் அவன் பத்தாவது பொது தேர்வை, நீங்க அவனுக்கு பரிசளிக்க வைத்திருந்த பேனாவால் எழுதி கொண்டிருக்கிறான். அதனை உங்கள் கைகளால் கொடுத்து ஆசிர்வதிக்கவாவது. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.

உங்களின் இறுதி நாட்களில், என்னை உடன் இருக்க அனுமதிக்காதது எதுவாக இருந்திருக்கும். மிகுந்த அன்போடு இருப்பவரை மரணம் தள்ளி வைத்துவிடும் என பெரியோர் சொல்வதெல்லாம் உண்மைதானோ??  அன்பென்ற சொல் அறியாது அன்போடிருந்திருக்கிறோம் அப்படிதானே அப்பா. தவறுகள் செய்த போதும் கைநீட்டி அடித்ததில்லை என்னை மட்டும் என்றில்லை அண்ணன்களையும் தானே. நிகழும் அணைத்திற்கும் நியாயம் எடுத்துரைத்து, தவறுகளை எங்களையே உணரச்செய்தது உங்க வழிகாட்டுதல். பதின் பருவ தடுமாற்றங்களை எல்லாம் கடந்து வர, கை பிடித்து இழுத்து வராமல் சரியான பாதை எதுவென எடுத்துரைத்து, முடிவுகளை நாங்கள் எடுக்க அனுமதித்தீர்கள். என் மகனுக்கும் அவ்வாறே நானும் இருக்கிறேன் . சிறந்த என் முதல் தோழனாய் நீங்கள் இருந்தீர்கள். அப்பாவை இழந்ததை காட்டிலும் என்னின் சிறந்த தோழனை இழந்து நான் தவிப்பதே அதிகம்.மரணம் யாவர்க்கும் சமம் தான், அது நம்மை அணுகாத வரை தானே.
எல்லோரிடமும் நட்பை பேனும் உங்களுக்கு நிச்சயம் அங்கும் நண்பர் கூட்டம் கிடைத்திருக்கும் அல்லவா, இழந்து தவித்த உங்கள் அம்மாவின் அருகாமையை பெற்றுருப்பீர்கள் தானே. அடிக்கடி உங்கள் நினைவுகளில் இருந்து எடுத்து சொல்லி மகிழும் பாட்டியின் கைப்பக்குவத்தில் இப்போதெல்லாம் உணவு கிடைக்கின்றதா ?? எப்போதாவது எங்களை இழந்தது குறித்த எண்ணங்கள் வருகிறதா அப்பா ?? உங்களின் எண்ணப்படியும் ஆசையின்படியும் என்னையும் அண்ணன் களையும் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் பார்த்துவிட்ட திருப்தியில் இருந்தீர்கள் என்பதை உங்களின் இறுதி நாட்களில் உணர்ந்து கொண்டேன்.

குழம்பும் தருணங்களில் எல்லாம் உங்கள் முகம் தான் கண் முன் தோன்றுகிறது. சோர்ந்து துவளும் என் முகத்தையோ,அயர்ச்சி மிகுந்த என் குரலையோ கேட்ட மாத்திரத்திலேயே காரணத்தை யோசிக்கத் துவங்கிவிடும் உங்கள் மனம். தீர்வை நான் யோசிக்கும் முன்னமே வழிமுறையையும் வழிகாட்டலுமாய் என் கரம் பற்றி வெதுவெதுபாய் பகிர்ந்து கொள்வீர்கள். இது வரையில் எந்த ஒரு துயரும் ஆட்கொண்டதில்லை நீங்கள் என் அருகிலிருந்ததாலேயே,அதை பற்றி நானும் எண்ணியதில்லை.தீர்க்கமான நம்பிக்கையாய் உடன் இருந்தீர்கள்.

 இப்போதெல்லாம் நம் வீட்டிற்குள் நுழையும் போதே ஒரு வெறுமை வந்து அப்பிக்கொள்கிறது. அண்ணன்களோ குழந்தைகளோ  இருப்பினும் யாருமற்ற வெற்றிடமாய் தான் தோன்றுகிறது. வாசல் வந்து வரவேற்கும் அந்த குரலை தேடித் தேடி களைத்து போகிறது மனம். சமீப நாட்களில் அம்மாவும்,அண்ணன் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், இப்போது நான் நம் வீட்டின் இரும்பு கதவை திறக்கும் வேளையில் ஒரு வெள்ளை பூணை ஒன்று "மிய்ய்யாவ்" என்று குரல் எழுப்புகிறது அது ஏதோ மனதிற்கு ஆசுவாசமளிக்கிறது ப்பா இப்போதெல்லாம்.

எதற்காகவும் கலங்கியதாக உங்களை நான் பார்த்ததேயில்லை. அது போலவே தான் எங்களையும் வளர்த்தீர்கள்.நீங்கள் விரும்பி எதுவும் கேட்டதில்லை இதுவரை. உங்களுக்கென்று எதன் மீதாவது ஆசை இருந்ததாக கூட எங்களுக்கு நினைவில் இல்லை பாழாய் போன அந்த சிக்ரெட் தவிர்த்து. புகைபிடிப்பதை  மன அழுத்தத்தை வெளியேற்றத்தான் என்பதை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உணர்ந்து கொண்டேன். அத்தனை அழுத்தங்களும் கசடாய் உங்க இருதயத்திலே தங்கி இருந்திருந்திருகிறதே. கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நீங்கள் அறிந்திருந்தீர்களா?? சிறு குழந்தையை போல நீங்கள் கேட்ட அனைத்தயும் நிறைவேற்றாமல் ஏன் நான் மறுத்து ஒதுக்கினேன். "வேள்பாரி"  புத்தகம் தான் நீங்க கேட்டு நான் கடைசியா வாங்கி கொடுத்தது. அதில் தான் உங்களுக்க்உ எவ்வளவு மகிழ்வு. வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் ,அதை கூறி எவ்வளவு மகிழ்ந்தீர்கள்.

வாழ்க்கையில் எதுவும் முக்கியமில்லாது பணத்தை நோக்கி ஓட வைக்காமல். பணத்தின் மதிப்பை உணர்ந்திருந்தோம். எதுவும் எளிதில் சம்பாதித்து விடலாம், உறவையும் நட்பையும் தவிர என உறவின் உன்னதத்தையும், நட்பையும் மதிக்கக் வாழ்ந்து கற்று கொடுத்தீர்கள். எதற்காகவும் தைரியம் இழக்காமல் வாழ்க்கையை வென்று காட்டியவர் தானே ப்பா நீங்க எல்லோருக்குமான தைரியமாய் இருந்தவர் அல்லவா, எந்த கட்டத்திலும் சவால்களை எதிர்த்து துணிவோடு எதிர் கொண்டு தானே பழக்கம். 

இறுதி நாட்களில், உங்களுது தைரியமற்ற வார்த்தைகளை  நம்ப மறுத்து ஏன் உங்களை விட்டு சென்றேன். நீங்க் அளித்த  அந்த தைரியத்தை,  உங்களுக்கு திருப்பி அளிக்க ஏன் மறுத்து சென்றேன். மருத்துவமனையின் அந்த படுக்கையில், மூச்சிற்கு சிரமப்பட்டு கொண்டிருந்த போதும் என்னை பார்த்ததும் ஆசுவாசமான உங்கள் சுவாசிப்பை சீராக்கியது எதுவென உணர்ந்த பின்னே புரிந்தது நீங்க சொல்லியதின் வலி " நீ கூட இருந்தா தைரியமா இருப்பேன் மா "  என்று.

என் முழு வாழ்விற்குமான பிழையை, உங்களோட அந்த கடைசி வார்த்தையிலிருந்து மீள முடியாமல் அந்த  குற்ற உணர்விலேயே இன்னமும் உழலச் செய்கிறது. மன்னிக்க இயலாத பிழை தான். இனி யாரிடம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாதெனும் மிகப் பெரிய பாடத்தை தண்டனையாய் கொடுத்துருங்கீங்கப்பா. மீளும் வழி அறியாமல் குற்ற உணர்விலேயே சுழல்கிறது மனம்.  ஆனாலும் மீண்டு வருவேன் ப்பா உங்கள் கனவுகளையும்  ஆசைகளையும் நிறைவேற்றி.

இப்படிக்கு
உங்க அன்பு மகள்...


Friday, April 3, 2020

பகடைக்காய்

காலம் ஆடும்
மாய ஆட்டத்தில்
நீயும் நானும்
பகடைகாய்களாகிறோம்.

தனித்து விழும்
நம்மை சேர்த்தே
விழுமியங்கள்
கணக்கிடப்படும்

உனை வெற்றியில்
நிரப்பிக்கொள்ளும்
பொழுதெல்லாம்
வலிந்து திணிக்கப்படும்
வெறுமை
பொழுதுகள்...

சேர்த்தே
உருட்டப்பட்டும்
பிரிந்து நின்(றே)றாலும்
வலுக்கூட்டிக் கொள்வோம்
ஒவ்வொரு முறையு
ம்...!!