Saturday, January 2, 2021

ஓரம் போ.. ஓரம் போ...

 வாழ்க்கை பயணத்துல பயணிக்க சில அத்தியாவசிய விஷயங்களை கற்று கொள்வது மிக முக்கியம் மட்டுமல்லாமல் அவசியமும் கூட. இன்றைய காலக்கட்டத்தில் அது ஆணோ பெண்ணோ இருவருக்குமே பொதுவாய் சில விஷயங்கள் அவசியம். அதில் முக்கியமானது சமையல் செய்வது, வாகனம் ஓட்டத் தெரிந்து கொள்வது.


இந்த காலத்தில் பெண்கள் சமைக்க கத்துக்கறாங்களோ இல்லியோ வண்டி ஓட்டக் கற்றுக் கொள்கிறார்கள். மாறாக ஆண்கள் சமைக்க கற்று கொள்கிறார்கள். என்னுடைய பதின்பருவங்களில் இவ்வாறு வாகனம் இயக்க கற்று தரும் பள்ளிகளும் குறைவு மற்றும் அதெல்லாம் பொட்ட புள்ளைக்கு எதுக்குண்ணு ட்ரைவிங் க்ளாஸ் லலாம் சேர்த்தியுட மாட்டாங்க. ஒரு சிலர் விதிவிலக்கு. அதுலயும் திருட்டுத்தனமா தோழிகளோட சேர்ந்து எப்படியாவது வண்டியோட்ட கற்று கொள்வதே பெரும் ப்ரயத்தனமா இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு வண்டி கத்துக்கிட்டதுல ஒரு வரலாறே இருக்கும் நீங்காத நினைவுகளாய்.


சைக்கிள் ஓட்டி கத்துக்கிட்ட கதையிலிருந்து ஆரம்பிப்போம்.

நான் நாலாவது படிக்கு போது தான் கத்துக்கிட்டேன்.அப்போ என் அண்ணன் 6 வது படிச்சுட்டு இருந்தாங்க.


அவங்க காசு சேர்த்தி வாரத்துல ஒருநாள் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவாங்க அவங்க ப்ரண்டுஸ் கூட.. (அப்போலாம் வாடகை சைக்கிள் தான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய்.)

கடைசி பத்து நிமிஷம் தான் கத்து கொடுப்பாங்க.அதும் 10 நிமிஷம் கழித்து நாம தான் சைக்கிளை கடைல விட்டுட்டு, வீட்டுக்கு திரும்பி நடந்து வரனும்ங்கற கண்டிஷனோட...


எப்படியோ நமக்கு சைக்கில் கிடச்சா போதும்ன்னு சொல்லி சரின்னு சொல்லிடுவேன். அண்ணன் கொஞ்சம் வளத்திய இருந்ததால அவங்க பெரிய சைக்கிள் எடுத்துருப்பாங்க,அது எனக்கு உயரம் பத்தாது எப்படியோஅவங்க சட்டை பிடிச்சு ஏறி உக்காந்துப்பேன். சைக்கிள் ல பின்னாடி அவங்க பிடிச்சுப்பாங்க.நான் ஹாண்டில் பிடிச்சு அப்படி இப்படி வளைச்சு நெளிச்சு ஒட்டும் போது.................. அப்படியே பின்னாடி பிடிச்சுட்டு இருந்த கைய விட்டுடுவாங்க..


அவங்க விட்டுடாங்களேன்னு வர்ற பயத்துல, கை நடுங்கி, கால் உதறி, வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவம் இல்லாத உருண்டை ஒன்னு ஓடும்போது...... அண்ணே.. விட்டுடுடாத... பிடீய்ய்ய்ய்ய்ய்ய்... சொல்லிகிட்டே.... தொபுக்கடீன்னு விழுந்து வாருவேன்..


முகத்தை மட்டும் காப்பாத்திப்பேன். கை, கால்.முட்டி எல்லாம் சிராச்சு, அழுதுக்கிட்டே எழுந்துக்குவேன். “ ஏன் என்ன விழவெச்சன்னு அழுது கிட்டே கேட்பேன்.அண்ணே சைக்கிள் கத்துக்கனும்ன்னா அடிபட தான் செய்யும்.... போ போயி திரும்ப ஓட்டுன்னு சொல்லுவாங்க. ஒன்னும் வேனாம் போ.. நான் சைக்கிள விட்டுட்டு வீடுக்கு போறேன்னு சொல்லிடுவேன்.


அடுத்த நாளிலிருந்து நானும் காசு சேர்த்தி, எனக்கு தகுந்த குட்டி சைக்கிளா பார்த்து வாடகைக்கு எடுத்து, கீழ விலாம ஓட்டி கத்துக்கிட்டேன்.


சில வருடங்களுக்கு முன் விஷாலுக்கு புது சைக்கிள் வாங்கினோம். ஒரு ஆசை சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாச்சே ஓட்டலாம்ன்னு.. பயபுள்ள உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா ம்மான்னு கேட்டுட்டான்.. 


ஆஹா...அப்படி சொன்னதுக்கப்புறம் ஓட்டாம இருக்கறதா... விடாத பிரவீ இது உன் தன்மானப் பிரச்சனை... அப்படின்னு சொல்லிட்டே சைக்கிள் ல ஏறி உக்கார்ந்து பெடலை மெதிக்கறேன்.. மெதிக்கறேன்...நகர்ந்தபாட்டை காணோம்..அப்புறம் ஏறி நின்னு மிதிச்சு எங்க வீட்டு தெரு முக்கு வரைக்கும் போயிட்டு வந்துட்டேன்.


வந்தா...


விஷால் அவங்க அப்பாகிட்ட கேட்டுட்டு இருக்கான்..”சைக்கிள் எவ்வளோ லோடு தாங்கும்” என்று.. இப்ப வரைக்கும் சைக்கிள் நன்றாக தான் இருக்குது. ஓட்டி ஒட்டி உடைஞ்சது கையும் காலும் தான்.


எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் எனக்கு உண்டு. நம்மால் முடியுமா?? முடியாதோ ? என எந்த ஒரு முன் முடிவுகளும் இன்றி கற்றுக் கொள்ள தயாராய் இருப்பேன். அப்படி ஒவ்வொன்றாய் கற்று கொண்டது தான் தையல், அழகுகலை,  சாக்லெட், மாரத்தான் ஓட்டம் ,ஓவியம், எம்ராய்டரி என இப்படியாக கற்றுக்கொண்டவை ஏராளம்.. இதை நம்மூர் சொலவடையா "நாய் வாய் வெச்ச மாதிரின்னு" சொல்வதும் உண்டு. ஆனா எனக்கு எல்லா விஷயங்களையும் கற்று தெரிந்து கொள்ளவேண்டும் அவ்வளவே. அதில் சிறப்பு பெற வேண்டும் என்பதெல்லாம் இல்லை, எனக்கு தெரியும் என்பதே போதுமானதாய் திருப்தியாய் இருக்கும்.


சைக்கிள் ஓட்டி பழகியதும், டூவீலர் ஓட்ட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அப்போலாம் வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருக்கும் அவ்வளோ தான். டூவீலர் கார் லாம் நல்லா வசதி படைச்சவங்க வீட்ல தான் இருக்கும். 


பெரிய அண்ணன் படிச்சு முடிச்சதும் வேலைக்கு போக லோன் ல டூவீலர் வாங்கினாங்க. சைக்கிள் க்கு காத்தடிச்சா போதும் டூவீலர்க்கு   பெட்ரோல் போடனுமே..அண்ணன் அதை பத்திரமா வெச்சுருப்பாங்க வண்டி சாவி உட்பட.


அப்ப T.V.S 50 தான் பட்ஜெட் வண்டி. குறைந்தபட்சம் நடுத்தர மக்களால் வாங்கக்கூடிய விலையில் இருக்குமென்பதால். அண்ணனுக்கு வாரத்துல ஒரு நாள் தான் விடுமுறை இருக்கும். வாரம் முழுக்க அண்ணன் சொல்லறதெல்லாம் கேட்டு, அவங்களுக்கு வேலை செய்து கொடுத்தா ஞாயித்துக்கிழமை ஓட்டி பழகலாம். அதுவும்  ஒரு மணி நேரம் ஓட்டி பழகிட்டு வந்ததும் சுத்தமா வண்டியை கழுவி துடைச்சு சுத்தம் பண்ணிக் கொடுக்கணும். 


படிச்சு முடிச்சதும் வேலைக்கு சென்றதும் கூட பொது பேருந்தை தான் உபயோகப்படுத்த வேண்டிய நிலை தான். அலுவல் வேலையாக செல்ல அலுவலகத்தில் ஒரு பழைய மாடல் கைனடிக் ஹோன்டா இருந்தது. 


ஊருக்கு வெளியே அலுவலகம் என்பதால் பக்கத்திலிருக்கும் வங்கி வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு வர வண்டி எடுத்து கொண்டு செல்ல அனுமதி உண்டு.


ஆபிஸ் ஸ்டாஃப் இருந்தாலும் சில நேரம் வாலன்ட்டியராக வங்கி செல்ல உதவி புரிவது போல் வண்டி எடுத்துக் கொண்டு ஒரு ரவுன்டு கிளம்பி விடுவேன்.போக்குவரத்து மிகுந்த சாலையில் ஒரு முறை சென்ற போது, ஒரு திருப்பத்தில் வண்டியை முன் பகுதியை பார்த்துக்கிட்டே வளைக்க சக்கரத்திற்கு மேல் இருக்கும் திரும்பலயே என யோகிக்கும் பொழுதே சக்கரம் முழுவதுமாக திரும்பிவிட நிலை தடுமாறி அங்கேயே விழுந்து வாரியதெல்லம் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியவை


கற்றுக்கொண்டும்  செயல்படுத்த முடியாது, செயல்பட முடியாது என பயந்த ஒரு விஷயம் கார் ஓட்டுவது... டூவீலரில் இண்டு இடுக்கு, சந்து பொந்து., டிராஃபிக்லைலாம் கூட 8,ஏழரை லாம் போட்டு ஓட்டும் அளவுக்கு பழகி விட எனக்கு, டூவீலரில் பறக்கும் எனக்கு, 

(அப்பாவின் ஆபிஸர்ஸ், அண்ணாவின் தோழர்கள், உறவினர்கள் என அத்தனை பேரின் புகாரும் உண்டு ;)  )  கார் ஓட்ட வேண்டும் என சொன்னாலே மிகுந்த கொலநடுக்கம் வரும்.  லைசன்ஸ் வாங்கியதும் முதல் நாள் காரை ஓட்ட எடுத்ததும் அது சர்ர்ர்ர்ர்ர்ர்ர் என  ஜாதிமல்லி கொடியின் பந்தலில் முட்டி போதி சேதமாக்கியது தான் பயத்திற்கு காரணம்.. ( ஜாதியை ஒழித்தவள் என பெருமைலாம் பட முடியல, உருட்டு கட்டையை எடுத்துக்கிட்டு அம்மா தான் ஓடி வந்தாங்க :'(   )

அப்பவே கார் ஓட்ட வேனும்ங்கற ஆசை போயிடுச்சு.


கிட்டத்தட்ட 8 வருஷம் கழிச்சு, ஆசை மீண்டும் எழ Personal driver இருந்தா நம்முடைய  கார்ல ஓட்டி பழகினோம்ன்னா தான் சரியா கத்துக்க முடியும் ன்னு யோசிட்டு  அதற்கு சரியான trainer அ தேடிட்டு இருந்தேன். ஆள் கிடைச்சா நேரம் ஒத்து வராது... ஆள், நேரம் எல்லாம் கிடைச்சா அவங்க கேக்கற தொகை "அம்மாடி"ன்னு இருக்கும். 

  

பின் எப்படியோ தேடி பிடிச்சு ஒரு பெர்சனல் கோச் கிடைச்சாரு...வெறும் 6 நாள் பயிற்சி போதும், என கூறி நம்பிக்கையளித்து, மிக முக்கியமாக என்னுள் இருந்த பயத்தை நீக்கி, பதட்டத்தை குறைத்து, பொறுமையா கற்று கொடுத்தார். சின்ன சின்ன திட்டுகள் விழும் தான் ஆனா திட்டற மாதிரியே தெரியாமா ;) 


ஊக்கப்படுத்தி, ஒரு நண்பனை போல் தைரியமுட்டி கற்று கொடுத்தார்.. என் வீட்டிற்கும் அம்மா வீட்டிற்கும் இடையில் மூன்று கி.மீ மட்டுமே உள்ள தூரத்தை நான் தனியாக கார் ஓட்டினேன் என்பதே மிகப்பெரிய சாதனை என  நினைத்து மகிழ்ந்திருக்கின்றேன்.


கார் ஓட்ட பழகும் போது, "அப்படியே கார் ஓட்டிட்டு வந்து நம்ம வீட்ல நிறுத்தேன் மா" என இறுதியில் கேட்ட அப்பாவிடம், 

"அப்பா நான் கார் ஓட்டிட்டேன்"  என மனதிலிருந்து உரக்கச் சொன்னேன் எங்கிருந்தாவது அவர் கேட்பார் எனும் நம்பிக்கையில்..


கார் ஓட்டி பழகிய இந்த ஒன்னரை ஆண்டுகளில் ஒருவித தன்னம்பிக்கை கூடுதலாய் கிடைத்துள்ளது என்பதை உணர முடிகிறது. தனியாக தைரியமாக எங்கும் செல்லும் துணிச்சலையும் கொடுத்துருக்கிறது. கூடுதலாய் என்மீது நானே நம்பிக்கை கொள்ள செய்திருக்கிறது. 

2 comments:

  1. மிதிவண்டியில் ஆரம்பித்து மகிழுந்து வரை பயணித்து விட்டோம்...பிரவீ அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete