நேற்று இரவிலிருந்து, ஒரு பெண்ணின் தற்கொலைக்கு இரங்கல் பதிவொன்றை முகநூலில் பார்க்க நேர்கிறது. நேரடி பழக்கம் இல்லையென்றாலும் தோழியின் தோழி அவர். வயது 40யை தொட்டிருக்கக்கூடும். பதிவுகளின் மூலம் அவருக்கு ஒரு பெண்குழந்தையொன்று இருப்பதையும் அறிய முடிகிறது.இருந்தும் மரணத்தை நாடி சென்றிருக்கிறார்.
இப்பொழுதெல்லாம் தற்கொலைகள் அதிகம் காண நேர்கிறது. அதிலும் பெண்களே அதிகம். பொதுவாகவே 40யை கடக்கும் பெண்களுக்குள் நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களும், இறுக்கம் நிறைந்த சூழலும் மன அழுத்தத்திற்கு உந்தி தள்ளுகிறது. அந்தகால கட்டத்தை கடப்பதற்கு தான் பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டும். ஏனேனில் வாழ்வு ஒருமுறை தான். தற்கொலைகள் என்றும் தீர்வாகாது.
மன அழுத்தம், மனச்சோர்வு கூடும் பொழுதுகளில், வலிய திணித்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மிக பிடித்த வேலைகள் ஏதாவது ஒன்றில் முழு ஈடுபாட்டுடன். எண்ணங்களை மடைமாற்றம் செய்யுங்கள். முடித்தவரை தனிமையை தவிர்த்துவிடுங்கள்.
அலையடித்து கொண்டிருக்கும் அத்தனை எண்ணங்களையும் நினைவுகளையும் ஆழத்தில் அழுத்தி பேரமைதி ஒன்றை மெல்ல துணிந்து கைப்பற்றுங்கள். நெருங்கிய நட்போ/ உறவிடமோ அழுத்ததை பேசி பகிர்ந்து கொள்ளுங்கள்.
கலங்கி, சிதைந்து, குழம்பியிருக்கும் மனதிடம் ஒன்றை மட்டும் திரும்பத்திரும்ப கூறுங்கள். வாழ்தல் இனிது. வாழ்தல் அறமென்று. தோற்றுக் கொண்டே இருக்கும் மனதிடம் தான் அதிக வலிமையும் திடமும் நிறைந்திருக்கும்.
பேரமைதி கொள்ளும் மனதிடம் தான், பெரும் அச்சம் இருக்கும். அது சுழற்றி போடும் பெரும் புயலொன்றை சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றும்.புயல் ஒன்றை சுமக்கும் அதே மனதினால் தான் மெல்ல இதமாய் வருடி செல்லவும் முடியுமென்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
தேவைப்படின் நல்ல மனநல ஆலோசகரின் அறிவுரை பெறுங்கள். உங்கள் வலிகள், தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளுங்கள். ஹார்மோன் இம்பேலண்ஸ் ஆக கூட இருக்கலாம் தெளிவு பெறுங்கள்.
நடுத்தரவயதை நெருங்கிக் கொண்டிருக்கும் / தொட்டிருக்கும் பெண்களின் தோழமைகளே, உறவுகளே அவர்களின் பேச்சிற்கு கொஞ்சம் உங்களது செவிகளை மட்டும் கொடுங்கள். அவர்களுக்கு ஆறுதலோ அரவணைப்போ கூட தேவைபடுவதில்லை கொஞ்சம் செவி சாய்த்திருப்பதே போதுமானது.
இதனை சொல்ல நான் ஒரு மருத்துவராகவோ/ மனநல ஆலோசகராகவோ இருக்க வேண்டியதில்லை. அறிவுரை தானே யார்வேண்டுமானாலும் அள்ளி வீசலாம் என்ற மனநிலையும் இல்லை. நானும் நாற்பதில் பயணப்பட்டு கொண்டிருக்கிறேன். ஏன் இது எனக்கு நானே கூறிக்கொண்டதாக கூட இருக்கலாம்.
ஆம்..!! வாழ்வென்பது ஒரு முறைதான்.
No comments:
Post a Comment