Tuesday, May 26, 2020

முதற் பயணம்

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வின் ஒரு முனையை பிடித்து இழுத்து நிறுத்திக் கொண்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டு ஓய்வெடுத்துக்கொள்ளவும், தொடர்ந்து வரும் நாட்களை இன்னும் கொஞ்சம் உற்சாகத்தோடு எதிர்கொள்ளவும், நிறைவை உணரவும் சற்று ஓய்வு எடுக்க ஆகச்சிறந்த வரமாய் அமையக்கூடும் சில பயணங்கள். எந்த அறிமுகமும் இல்லாத மனிதர்களோடு பயணிப்பது என்பது கூடுதல் சுவாரசியத்தை கொடுக்கக் கூடியது. அதே போல் எங்கு செல்கிறோம் என்ற அறிதலும் அந்த இடத்தைப்பற்றிய எவ்வித முன் முடிவுகளுமின்றி பயணம் மேற்கொள்வது என்பது கூடுதல் சுவாரசியம்.

 ஒரு நாள் முகநூல் குழுவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சுற்றுலா பற்றிய அறிவிப்பு பார்த்ததும் அப்போது இருந்த நிலைக்கு எங்காவது சென்று விட வேண்டும் என்னும் தீவிர அழுத்த நிலை,நிலையற்ற மனநிலையும் சேர்ந்து அயர்ச்சியும், சலிப்பையும் உண்டுபடுத்த, அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள எதைப்பற்றியும் யோசிக்காது பெயர் கொடுத்தாகிவிட்டது. எந்த ஊர்,எங்கு தங்குகிறோம் என எந்த விபரமும் அறியாமலேயே. இப்படியான பயணங்கள், சில நேரங்களில் மனத்திறப்புகளாகின்றன.   அத்தனை காலம் தேவையற்று மனதினுள் அடைக்கப்பட்டிருந்தவைகள் காணாமல் போகும் அத்தனை சாத்தியங்களும் உண்டு.

பயணங்கள் ஒரு போதும்  ஏமாற்றுவதில்லை. உற்சாகத்தோடு நாம் அறியாமலேயே பல பாடங்களை உணர்த்தி செல்லவும் தவறுவதுமில்லை. பாடங்களை கற்க எந்த தேடலும் தேவையும் இல்லாத கணங்களிலும் கூட,சந்திக்கும் மனிதர்கள், சூழல், காலநிலை என அனைத்தும் கற்றுக்கொடுக்கும் காரணிகளாகும் விந்தை அறியலாம்.

பயணத்திற்கு தேவையானவற்றை அடுக்கத்தொடங்கும் முன், எவையெல்லாம் தேவையற்றவை என பட்டியலிட்டு, தொலைக்க முடிவு செய்து ஒரு ஓரமாய் மனப்பொதியொன்றை அடுக்கத் துவங்கினேன் பொதியின் கனம் கூடியதே தவிர, போதுமென்ற நிறைவு ,துணி அடுக்கிய பைகளுக்கே வந்தது..

காலை சுமார் 7 மணி அளவில் ஈரோடு  பேருந்து நிலையம் சென்று, கோவை  செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் வரலாற்றில் பதிய தொடங்கியாயிற்று மொபைலில் ஆளுக்கு ஒரு செல்ஃபியும், மறக்காமல் முகநூலில் ஒரு பதிவும்."இப்போதைய என்னை தொலைக்கவும், என்னை நானே மீட்டெடுக்கவும் தேவையாய் ஒரு சிறு பயணம்" என ஒரு பதிவும் போட்டு விட்டு மொபைல் டேட்டா நிறுத்தி கதைக்கத்தொடங்கினோம். சுவாரசியம் துளியும் குறையாமல் பேசிக்கொண்டே சென்றோம் தோழிகளாச்சே. 2 மணி நேரம் 2 நிமிடங்களாய் கரைந்திருந்தது.

இரண்டு மணிநேர பயண அலுப்பு துளியும் வராமல் வந்தாகிவிட்டது கோவைக்கு. இறங்கியதும் தான் செவிக்கு உணவிட்டீர்களே கொஞ்சம் வயிற்றையும் கவனியுங்களேன் என மூளை கொஞ்சம் கட்டளையிட அன்னபூர்ணாவில் காலை உணவு முடித்துக்கொண்டோம்.  காலை உணவோடு காபி அருந்தும் அருமையான பழக்கத்தினால் அன்னபூர்ணாவின் அற்புதமான  காஃபியின் சுவையை தவற விடாது ரசித்து பருகி நினைவில் அதன் சுவையை இருத்திக்கொண்டேன். 

 பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் பெரிய ஜவுளிகடையின் முன்பு தான் முதல் பிக்- அப் பாயின்ட்.
பயணத்திற்கு யார் வருகிறார்கள் என பெயர் பதிந்து கொண்ட பின் ஆரம்பிக்கப்பட்ட வாட்சப் குழுமத்தில் குறுஞ்செய்திகளிலேயே நட்பாகிக்கொண்டவர்கள் ஒவ்வொருவராய் வர இனங்கண்டு, முகங் கண்டு, அறிமுகம் கொண்டு ஆரத்தழுவி நட்பு பூக்கத்துவங்கியது அந்த தார்சாலையின் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அறியாது.நினைவுகளுக்கு புரட்டிப்பார்க்க சிலபல செல்ஃபிகளோடு மீண்டும் ஓரு சிறுபயணம்.

வண்டி ஏறியதும் நகரத்தின் பெரும் இரைச்சல் மெல்ல மெல்ல தன்னை இழந்து அமைதியின் கரங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது இயற்கை அன்னையிடம். திரும்பும் திசையெங்கும் பச்சையை போர்த்திக்கொண்ட மலைப்பகுதியில் வாகனம் செல்லத் துவங்கியது. பச்சையின் வாசனையோடு சிநேகத்தின் வாசனையையும் நுகர முடிந்தது.  மலையும், தோழமையும் வசப்பட வந்து சேர்ந்த இடம் அட்டப்பாடி (சட் தர்ஷன்) அது அடர்ந்த வனத்திலொரு  அந்தரத்துக்குடில்..! 

அந்த வனத்தின் அமைதியும் மெல்லிய காற்றும் கட்டுக்கடங்காமல் மனத்தை இறக்கை விரிக்கச் செய்தது. அதன் பின் நடந்ததெல்லாம் காற்று அள்ளிச்செல்லும் இறகு, திசையெங்கும் அலைந்து திரிந்து கலந்தது போன்றது. சத்தியத்தின் தரிசனம் கிடைக்கும், வேறொரு உலகத்திற்குள் நுழைந்திருந்தோம். மழைக்காற்றுக்கு இதமா சுக்கு காபி வரவேற்பு பானம். அருந்திய படியே அந்த இடத்தின் அழகை கண்களில் பருக ஆரம்பித்தோம். அறைக்கு சென்று பைகளை வைத்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தை சுத்திப்பார்க்க கிளம்பினோம்.ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு மத்தியில் தானாய் உருவான நடைவெளியில் எவ்வித குப்பைகள் இன்றி அத்தனையும் மரத்திற்கே உரமாய் மாறியிருந்தன. வெளிச்சத்தில் காடுகளாய் காட்சி அளிக்கவில்லை காடுகள். மிகுந்த சிநேகத்தோடு அரவனைத்தது. காட்டின் மத்தியில் துள்ளி ஓடிக்கொண்டிக்கொண்டிருந்தது சிறுவாணி ஆறு. ஆர்ப்பரித்தெல்லாம் ஓடவில்லை அமைதியாய் நடை பயின்றது. அதைக்கண்ட எங்கள் மனம்  ஆர்ப்பரிக்க, மெல்ல எங்களை கொடுத்தோம் குளிர் நீர் சுமந்த ஆற்றுக்கு. நீந்தும் மீன் களுக்கு வேண்டுமானால் அலுப்பேற்ப்பட்டிருக்கலாம், சிரிப்பொன்றையே பிரதானமாக்கிய எங்களுக்கோ அலுக்கவேயில்லை. மதியம் உணவு தயாராகி விட்டதை அறிந்ததும் தான் மெல்ல ஒவ்வொருவராய் கரையேறினோம். உணவு உண்டு முடித்தவுடன் சிறிது நேரம் புகைப்படம் எடுத்துக்கொண்டும், எங்கு திரும்பினாலும் விதவிதமாய் இருக்கும் புத்தர் சிலையை ரசித்துக்கொண்டும், ஆற்றின் கரையில் தியானித்துக் கொண்டும் தங்களை மறந்திருந்தனர் அனைவரும்.

மாலையில் சூடான காபியும் ஸ்நாக்ஸ்யும் சாப்பிட்டு முடித்து, கொஞ்சம் ரெஃப் ஃப்ரஷ் ஆகி அனைவரும் கூடத்திற்கு வந்ததும்  அனைவரை பற்றியும் சிறு அறிமுக படலம் முடிந்த பின் தான் புரிந்தது எல்லோரும் ஒரே மனநிலையில் இப்பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என.  அனைவரது மனதையும் புரிந்து கொண்டு ஒரு மெல்லிய தியானம் கோட்டினை வரைந்தார் ஆனந்த்,யாருக்கு விருப்பமோ தியானிக்கலாம் மற்றோர் மெளனித்து வெறும் சுவாசத்தை மட்டும்  கவனித்தால் போதுமென சொல்லி, தியானக்கோட்டின் அருகிலேயே புள்ளி ஒன்றை வைத்து பல ஆச்சர்யங்களை உணரவைத்து என்னை நானே உணர பேருதவியாய் இருந்தது அன்றைய தியானம். மெல்ல மனம் சமநிலையை நோக்கிவர தேக்கிய அழுத்தங்கள் கண்களில் கரையத் தொடங்கியது.

இரவு 7 மணி இருக்கும் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தேவைக்கு அதிகமாய் ஒரு இடத்தில் கூட வெளிச்சத்திற்கு லைட்டோ, பல்ப்போ கிடையாது. காடு, காடு போலவே மிரட்டத்தொடங்கியது. நகரத்தின் வெளிச்சக் கூடாரத்திலேயே பழகப்பட்ட எங்களை மிரட்டி, திகிலூட்டி, அச்சத்துடனே அணுக பணித்தது.

பகலில் சுற்றிய இடமென்றாலும் இருட்டு மனதை திறக்கச் செய்து கண்களை கட்டி விட்டு வித்தைக் காட்ட துவங்கியது. அப்போது தான் ஆனந்த் அவர்கள் யாரெல்லாம் காட்டுக்குள் வருகிறீர்கள்?? எனக் கேட்டதும் கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் துணிந்து ஒவ்வொருவராய் பின் சென்றோம் முக்கியமா மொபைல் போனில் கூட ஒளியேற்ற கூடாது முடிந்த வரை மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்து கொள்ளவே அன்புக் கட்டளையே இட்டார். காடு அவருக்கு இணக்கமாய் இருந்தது அவரும்  காடோடு இணக்கம் கொண்டிருந்தார்.

ஆனந்த் முன் சென்றதாலும், நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைக்கோர்த்திருந்த படியாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல காட்டிற்குள் நுழையத் துவங்கினோம். அதன் பின் கண்டதெல்லாம் அற்புதக்காட்சி.

பிறந்ததிருந்தே நகர வாசம் தான். கிராமத்தின் காற்று கூட  தீண்டாத வாழ்வு எனது. காங்கிரீட் காடுகளையே கண்ட எனக்கு ஓங்கி உயர்ந்த மரங்களை முடிந்த வரை உச்சியை பார்த்து விட ஆவலாதி கொண்டது மனம். இரவில் வருடும் தென்றலுக்கு பச்சயத்தின் மணம். கலந்து வரும் அப்போது மலர்ந்த மலரின் மணம், பிறந்த குழந்தையின் வாசனை ஒத்திருக்கும்.

நடைபாதையின் ஓரத்தில் மூங்கில்களை கொண்ட பெஞ்ச் போன்ற ஒன்றை செய்திருந்தார்கள். அதில் எல்லோரும் எவ்வித சப்தமும் எழுப்பாமல் அமர்ந்தோம். சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு காட்டை மனத்திலிருந்து உணரச் சொன்னார். சிறு பூச்சிகளின் " கீச் கீச் " சப்தம் தவளையின் "ட்ர்ப்  ட்ர்ப்" சத்தம் என பல்வேறு ஒலிகளை கேட்டு உணர முடிந்தது. இப்போது கண்களை திறக்கலாம் என்றதும்,பயத்தோடு கண்களை திறக்க இதயத் துடிப்பின் சத்தம் காட்டையே உலுக்கிவிடும் போல் கேட்டது எனக்கு. அப்போது அங்கு கண்ட காட்சி நினைவில் காலத்திற்கும் சேர்த்து வைத்து கொள்ளும் பொக்கிஷம்.

திறந்த கண்கள் நம்ப மறுத்து இறுக மூடிக்கொண்டும் திறந்தும் என ஆச்சர்யத்தில் மிதந்து தத்தளித்தது. நட்சத்திரக் குவியல் இறங்கி பூமிக்கு வந்தது போல் மின்மினி பூச்சிகள் ரீங்காரமிட்ட படி சுற்றி சுற்றி வந்தது காடு முழுவதும் ஒளியேற்றியபடி.

நகரத்தில் வாழ்ந்த மனது எதையும் சந்தேகத்தோடு தானே அணுகும், அப்படி தான் எண்ணினேன் இது ஏதோ "ஜிம்மிக்ஸ்" வேலையென்று. காட்டுக்குள் இன்னும் கொஞ்சம் நடந்தால் ஓயர் எதும் இருந்தால் அறுந்துவிடும் தானே லைட்டு பூச்சியின் சுவிட்ச்யை கண்டுபிடித்து விடலாம் என தோன்றத்தான் செய்தது.( முதல் முறை அத்தணை லைட்டு பூச்சியை அப்போது தான் பார்க்கிறேன் :( ))

காட்டிற்குள் இறங்கி நடந்தால், பால்வீதியில் நிலவோடும் நட்சத்திரத்தோடும் கைப்பிடித்து  உலாவந்ததை போன்று இருந்தது. எட்டி பிடித்து கைக்குள் நிறைத்து கொண்டேன் நட்சத்திர குவியலை.

இன்னும் எத்தனையெத்தனை பயணம் மேற்கொண்டாலும், முதல் பயணம் என்பது  வாழ்வில் மறக்க முடியாததும் நினைவுகளை நிறைத்து கொண்டதுமாய் அமைந்தது.  ஏற்றிக்கொண்டு வந்த மனபொதி எங்கே தொலைந்தது என்ற எண்ணம் துளியுமின்றி நினைவுகளை அடுக்கிக் கொண்டது மனம். 





2 comments:

  1. உங்களுடன் மின்மினி மழையில் நனைந்தது போன்ற உணர்வு.
    மனதிற்கு சிநேகமாய் உள்ளது உங்கள் எழுத்து.

    ReplyDelete