பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. முயன்றால் எல்லோருக்கும் வருவது தான். முயற்சியும், பயிற்சியுமே வளர்ச்சியின் முதல் விதை. சிலருக்கு இயல்பில் இருப்பது. சிலரோ வளர்த்துக்கொள்வது.
பிள்ளை வளர்ப்பில் பல நூற்றாண்டுகள் உளவியல் வழியாக அந்த செயல்கள் அணுகப்படாமல், தலைமுறை இடைவெளி உருவாகியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் நீட்சியாக தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சியாக மட்டுமே கவனிக்கின்றார்கள். அவர்கள் பிள்ளைகளின் கல்வி, உடல் நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பது தான் நிதர்சனம்
கருவில் தொடங்கி வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை எல்லாவற்றுக்கும் ஒரு வகுப்பு, பாடத்திட்டம். கற்றல், செயல்படுத்துதல் என அனைத்திற்கும் ஏதோ ஒரு வ்குப்பு நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.
அன்றைய குழந்தை வளர்ப்பு போல், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பது இல்லை. எல்லாவற்றையும் அனுபவ பாடமாக கற்ற அன்றைய குழந்தைகள் தான், தன் பிள்ளைகளை சிறப்பு வகுப்பிற்கும்,கோடை வகுப்பிற்கும் அனுப்பி கற்று கொடுக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இவ்வகை பெற்றோர்களுக்காவே மாறி வரும் கல்வி ,பாடத்திட்டம் ஒரு புறம். இதை மெச்சிக்கொள்ளும் பெற்றோர் இருக்கும் வரையில் ஏதும் செய்திட இயலாது.
மாதம் ஒருமுறை Field trip கூட்டிச்செல்வதை விளம்பரப்படுத்தி பிள்ளை பிடிக்கும் பள்ளிகளும், அங்கு சேர்ப்பதை கவுரவம் என காலர் உயர்த்தும் பெற்றோர்களுக்கும் புரிய போவதில்லை, ஆயாவும் அம்மாவும் எட்டாணாக்கு கொத்துமல்லி கருவேப்பிலையோ, அவசரத்துக்கென தீப்பெட்டியோ வாங்கி வரச்சொல்லி அனுப்பியது வேலைக்காக இல்லை,அது ஒரு அனுபவ பாடமென்று.
போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் ஜெயிக்க வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, இசைக்கருவி என்று எல்லாத் துறைகளிலும் முதலாவதாக இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.
இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்சியே பண்பாடு போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.
பள்ளி பேருந்தில் வீட்டு வாசலில் ஏறி, இறங்கும் பிள்ளைக்கு எப்படித்தெரிந்திருக்கும் தன் பள்ளிக்கு எந்த வழித்தட பேருந்தில் செல்ல வேண்டும் என. அன்றைய காலகட்டத்தில் இவ்வாறான வசதிகள் இருந்தும் பள்ளிக்கு பேருந்தில் அனுப்பியதும் ஒரு வகையில் அனுபவம் பெறுவதற்காக தானே. உரிய சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்,நிறுத்தம் அறிந்து,கூட்டதிலிருந்து முன்னேறி இறங்கவும் யார் கற்றுக் கொடுத்தார்கள்.
பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.
பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் இயந்திரமாக்கிக் கொண்டு வருகிறது இந்த சமூகம்
உலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” மத்தியவர்க்கத்தினருக்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே இன்றைய வளர்ப்பு.
இன்றைய குழந்தைகள் உலகமோ நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.
முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.
தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான் மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையோ குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு. சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.
எப்போதும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக பந்தயத்தில் ஓடும் குதிரை போல இயங்கும் மனநிலை உருவாகும். தோல்வி பயம் அவர்களிடம் மிகுதியாக இருக்கும். இதன் காரணமாக சமூகத்தில் பிறருடன் பழக வேண்டும் எனும் மிக முக்கியமான திறன் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உருவாக்குவது பெற்றோரின் அளவுக்கு அதிகமான கண்டிப்பும் அதிகாரமும் கொண்ட வளர்ப்பு முறை மட்டுமே சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடம் கொடுப்பதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். கேட்டதை வாங்கித் தருதல், பிள்ளைகளின் கல்வி, உடல் நலன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதும், அவர்களின் எந்த நடவடிக்கைகள் மீதும் கண்டிப்பும், கவனமும் கொஞ்சமும் இல்லாத வகையில் பிள்ளை வளர்ப்பு முறைகள் கொண்ட பெற்றோர்கள் தொடக்க காலத்தில் பிள்ளைகளை மிகச் சுதந்திரம் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள்.
சிறு வயதில் கொடுக்கப்படும் சுதந்திரம் பிள்ளைகள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு பயன்படும் என்பது இவர்களது கண்ணோட்டம். இது ஓரளவே உண்மை., மாறாக இந்த முறையில் வளரும் பிள்ளைகள் வயது ஏற ஏற தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்குள் அந்த பிரச்னை பல மடங்கு பெருகி பூதாகரமாக நிற்பதைக் கவனிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பெற்றோரின் துணை, பங்களிப்பு இதனை எதிர்பார்ப்பதா இல்லையா என்பதில் குழப்பம் உருவாகி பாதிப்பு அதிகம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாக எந்தப் பாடம் தேர்வு செய்வது எந்த கல்வி மேற்படிப்பு படிப்பது, எந்த கல்லூரியில் படிப்பது போன்றவை திருமணத்திற்கு தனக்கான துணையினைத் தேர்வு செய்தல் போன்றவையும். இதிலெல்லாம் பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டு அமைத்துக் கொண்ட எண்ணங்களைக் கொண்டு முடிவு எடுக்கும் போது அனுபவக் குறைவு காரணமாகத் தவறுகள் செய்வது இயல்பு. பெற்றோர்களின் வழிகாட்டுதல் வழியாகக் கிடைக்க வேண்டிய சில அனுபவப் பாடங்களை, அவர்கள் பெறுவதில்லை, காரணம் அவர்களுக்கு கிடைத்த மிகுதியான சுதந்திரம். இதனைப் பெற்றோர்கள் உணர வேண்டும்
வசதிகள்,வாய்ப்பு எனச் சொல்லி இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பது ஒரு வகையான சிறை.பாதுகாப்பு என்றாலும் கூண்டும் ஒரு வித சிறையே. பறவைகள் கூட தன் குஞ்சுகளுக்கு கற்றுக் கொடுப்பது சிறகை விரித்து பறக்கத்தான்.
ஆனால் இன்றைய சூழ்நிலைகளையும், சமூகத்தையும் காரணம் காட்டி அவர்களின் ஒவ்வொரு சிறகாக பிடுங்கப்படுவதை விட, அதை எதிர்த்து துணிச்சலாக செயல்படவும் சிறகை விரித்து சுதந்திரமாக பறக்கவும் கற்றுக்கொடுப்போம்.
No comments:
Post a Comment