Thursday, September 17, 2020

நானும் ஈரோடும்...

 "ஈரோடு" நகரம் உருவான நாள் இன்று 16.09.1871. அப்படி பார்த்தா இன்னிக்கு நகரத்தோட வயசு 149 ஆம்.. அவ்வளோ பழமையான நகரமான்னு கேட்டா அப்படிலாம் இல்ல.. வருஷம் ஒன்னு ஏற ஏற தன்னை தானே அழகா உருமாற்றிக் கொண்டு இப்ப "ஸ்மார்ட் சிட்டி" யா உருவாகிட்டு இருக்கு. சென்னிமலைக்கு பக்கத்துல உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதுன்னு அகழ்வாராய்ச்சிலாம் செய்து இப்ப கண்டுபிடிச்சுருக்காங்க. உரோம பேரரசுகளோட நம்ம மக்கள் வணிகம் செய்ததற்கான அடையாளமா  காசுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதா சொல்லறாங்க அவ்வளவு பழமையான வரலாற்றையும் கொண்டது நம்ம ஈரோடு. 

ஆற்றோட சேர்ந்த ஊர் என்பதால, அழியா வளங்களையும் அள்ளி அள்ளி வழங்குது " காவேரி ஆறு". கொஞ்சம் கொஞ்சமா இப்ப மாசு அடைஞ்சுட்டு வர்ற ஆற்றை வாரியம் அமைச்சு சுத்தம் பண்ணிகிட்டும், மாசு ஏற்படுத்தாதவாறு கண்காணிச்சுட்டும் வர்றாங்க நம்ம அரசாங்கம். மண்ணுல போட்டது பொன்னா விளையும்ங்கற மாதிரி "மஞ்சள்" விளையுற பூமி இது. மஞ்சளோட  நிறத்துக்கு முன்னால தங்க நிறம் தோத்து போவும். ஜவுளிக்கு தனியா சந்தை கூடறதும் இங்க தான். ஜமுக்காளம் நெய்யறதும் இங்க தான்.மல்லிகைக்கு சத்தியமங்கலம்.மன அமைதிக்கு திண்டலும், சென்னிமலையும். 

 பிறந்தது வேற ஊர் என்றாலும், வளர்ந்தது படித்தது இப்போது 35 வருஷமா வாழ்வது எல்லாமே ஈரோடு தான். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈரோட்டிலேயே வசிப்பதால், ஈரோட்டை என் சொந்த ஊராகவே பாவித்து கொள்ளத் தோனுது.

சில இடங்களில் உங்க Native place எதுன்னு?? கேட்கும் போது ஈரோடு என்பதை சொல்ல முடியாத ஏக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது, திருமணத்திற்கு முன்பு வரை.. அந்தியூரில் வாழ்க்கப்பட்டு இப்ப தொழில் நிமித்தம் ஈரோட்டில் செட்டில் ஆகியாச்சு. இப்ப இது எங்க ஊருன்னு சொல்லிக்க  எந்த தடையுமில்ல.

நான் வளர்ந்து வர்ற மாதிரியே, என் கூடவே வளர்ந்து வந்துச்சு இப்பவும் வளர்ந்துகிட்டே இருக்கு. மாலை நேரத்துல பழையபாளையம் தாண்டி போகவே பயமா இருக்கும். இப்போ பழையபாளையத்துக்கு அப்புறம் தான் ஊரே ஆரம்பிக்கறாப்புல எல்லா கார் ஷோரூம்களும் கடைகளும், மால், ஷாப்பிங் சென்டருமா வளர்ந்திருக்கு,பெரு நகரங்களுக்கு போட்டியாக.

பெரியார் பிறந்த மண்ணுங்கறதால், சுயமரியாதைங்கறது ரத்ததுலயே ஊறிப்போச்சு. எல்லா சொத்தும் சொந்தமும் இழந்து வந்தாலும், சுயமரியாதையோட நின்னு ஜெயிக்க வெச்ச ஊரு இது. 35 ஆண்டுகளா இந்த மண்ணில வாழ்ந்தாலும் இன்னும் ஒரு வாட்டி கூட அவர் வாழ்ந்த வீட்டை பார்த்ததில்லை. அந்த வழியா பல முறை கடந்து வந்திருந்தாலும். அவரது குடோன் இருந்த இடத்தை காண நேரும் தருணங்களில் எல்லாம் இங்கே அமர்ந்து தானே அத்தனை அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்திருப்பார்கள் என எண்ணி சிலிர்த்ததுண்டு.

 எவ்வளோ வசதி, வாய்ப்பையும் இழந்தாலும் ஈரோடு வந்தா பொழச்சுக்கலாம்ங்கற நம்பிக்கையை எல்லா மக்களுக்கும் வழங்கி இருக்கு. இந்தியாவோட வடக்குல இருந்து வந்த மக்கள வாழ வைக்கற ஊராவும் ஈரோடு இருக்கு.

பெரிய தொழிற்சாலைகளும், சிறுகுறு தொழில்களும், விவசாயமும் ஈரோடு முழுக்க வளத்தை கொடுக்குது. உலகமே பயன்படுத்தற "சக்தி மசாலா" நிறுவனமும், "வேட்டி" கட்டறதையே பாரம்பரியம் ன்னு உலகுக்கு பறைசாற்றி காட்டன் வேட்டிகளுக்கும், காட்டன் கைத்தறி சேலைகளுக்கும் முக்கியத்துவம் பெற்று தந்ததும் நம்ம ஈரோடு தான்.

ஈரோட்டுக்கும் எனக்குமான நெருக்கம் என்பது அதிகம். மக்கள் அதிகம் வசிக்குமிடமான சம்பத்நகரில், உறவுகள் அனைத்தும் கைவிட்ட நிலையில், அண்டை வீட்டாரே உறவுகளாய் சூழ வளர்ந்தது, பள்ளிக்கும், விளையாடவும் தோழிமார் புடைசூழ அனைத்து தெருக்களிலும் உலாவிக் களித்தது என மனதிற்கு இனிமை சேர்த்த நினைவுகளை தந்தது. இப்பவும் சம்பத்நகர் வீதிகளை கடக்கும் போது தாய்வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வு மேலிடத்தான் செய்யும். எந்த பகுதி என்றாலும் தைரியமா தனியாக செல்லும் அளவிற்கு பாதுகாப்பையும் அன்பையும் வழங்கும் ஊர் இது.

பிள்ளைகளின் கல்வின்னு எடுத்துக்கிட்டோம்ன்னா எல்லாவித துறைகளிலும் சிறந்து விளங்க நல்ல பள்ளிகூடங்களும், கல்லூரிகளும் இருக்கு. தொழிற்கல்வி முதற்கொண்டு அனைத்து துறைகளையும் கொண்ட கல்விகூடங்களை அமையப்பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தம் பிள்ளைகளை இங்கிருக்கும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க பெற்றோரும் நம்பி வரும் ஊரா இருக்கு ஈரோடு.

அதீத பக்தி இல்லையென்றாலும் ஆழ்ந்த பக்தி உண்டு தின்டல்மலை முருகனிடம். ஈரோட்டின்  வளர்ச்சி என்பது அவரையும் விட்டு வைக்காமல் கார்ப்பரேட் கடவுளாக்கி கொஞ்சம் விலக்கி, இன்னும் கொஞ்சம் கூடுதல் உயரத்தில் சென்று அமர்ந்து கொண்டு இந்த மாநகர் முழுவதையும் காத்து நிற்கிறார். மேற்கில் முருகன் என்றால் கிழக்கில் அவனப்பன் சிவன். கோட்டையில் தொண்டீஸ்வரனாய் காத்து அருள்பாலிக்கிறார். முதன்முதலில் தமிழில் அர்ச்சனை வழிபாடு நடந்தது இக்கோவிலில் தான் என்பது ஈரோட்டுக்கே சிறப்பு. மாசி மாதத்தின் இறுதியில் சூரிய ஒளி இறைவனின் மீது படுமாறு அமைக்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறது ( ஒரு முறையேனும் சென்று பார்த்துவிட வேண்டும்)

வாகனவசதிகள் இல்லாத போதும், இப்ப இருக்கும் போதும் ஈரோட்டின் சாலைகள் எப்போதும் ஒரு வாஞ்சை நிரம்பியதாய் இருக்கும் ( இந்த இரண்டு ஆண்டுகளை விட்டுவிடுங்கள்) எந்த சாலையில் நுழைந்தாலும் குழப்பமின்றி முக்கிய சாலையை எளிதில் வந்தடையும்படி வசதியாக அமைந்திருக்கும் ஈரோடு. தங்க நாற்கர சாலை திட்டத்தாலும், பெரிய மேம்பாலங்களாலும் சுற்றியுள்ள ஊர்களையெல்லாம் தன்னோட இணக்கமா இணைச்சுகிட்டு தன்னை விரிவாக்கிக்குது ஈரோடு.

ஈரோடு மாவட்டத்தோட தொழில் முயற்சிகளுக்குப் பெரிதாய் துணையாக இருக்கறது போக்குவரத்து. ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும், சென்னைக்கும் சாலைவழி போக்குவரத்து இருக்கு. அருகில் உள்ள மாநிலமான கர்நாடகா, கேரளா என விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இந்தியாவோட எந்த பகுதிக்கும் செல்ல ரயில் சேவையும் இருக்கு.

மற்ற ஊர்களை காட்டிலும் சுத்தம் மிகுந்த தெருகளையும் வீடுகளையும் அமைப்புகளையும் காணலாம்.இந்த கொரோனாவின் கொடுமையான பிடியிலிருந்து தன்னை விடுவித்து பச்சை மண்டலமா மாற்றிக் கொள்ள பெரும் காரணமாய் அமைந்ததும் இந்த சுத்தம் தான். வீடுதோறும் வேப்பமரமும், வாசல் முழுதும் சாணமிட்டு வளிச்சுவிடறதும் தான் காரணம். எத்தனை எத்தனை ஊர்களுக்கு சென்றாலும் மூன்று நாட்களுக்கு மேல் மனம் எதிலும் லயிக்காது ஈரோட்டை சுற்றிச் சுற்றியே வரும். 

தன்னை நம்பி வந்தோரை வாழ வைத்த ஈரோடு, இப்போது தன்னை தானே வளர்த்து மெருகேற்றிக்கொள்ளும் பணியில் இருப்பதால், சில பழிகளையும் சுமைகளையும் இடர்களையும் சுமந்தேயிருக்கிறது.. *மீண்டு வரும் புது பொலிவோடு என் ஈரோடு*.

நம்பி வந்தாரை வாழ வைப்பது சென்னை மட்டுமல்ல ஈரோடுக்கும் அது பொருந்தும்...

நம்பிக்கை வேர் பாய்ந்தோடும் இந்த காவேரி கரைதனில் வாழ்வது பெருமையும்   பெருமகிழ்வும்..!!


3 comments: